»   »  அழுதுட்டாங்க .. வசந்தபாலன் நெகிழ்ச்சி

அழுதுட்டாங்க .. வசந்தபாலன் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

கேன்ஸ் விழாவைத் தொடர்ந்து ஷாங்காய் திரைப்பட விழாவிலும் வெயில் படம் திரையிடப்படவுள்ளது.

தமிழ்ப் படங்கள் உலக அளவிலான திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவது வெகு சகஜமாகி விட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைவிழாவில் வெயில் படம் திரையிடப்பட்டு பலரின் பாராட்டைப் பெற்றது. விருதுநகரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விருது மட்டும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், ஷாங்காய் திரைப்பட விழாவிலும் வெயில் திரையிடப்படவுள்ளது. ஷாங்காய் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் வெளிநாட்டுப் பட வரிசையில், வெயிலும் உள்ளதாம்.

ஜூன் 19ம் தேதி ஷாங்காய் பட விழாவில் வெயில் திரையிடப்படவுள்ளது.

கேன்ஸ் திரைவிழாவில் வெயில் படத்தை திரையிட்டபோது அதைப் பார்த்த பலரும் உணர்ச்சி வசப்பட்டதாகவும், பெண்கள் அழுததாகவும் இயக்குநர் வசந்தபாலன் கூறியுள்ளார்.

பிரான்ஸின் கேன்ஸ் நகரம் கடந்த சில நாட்களாக விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக புகழ் மிக்கதாக கருதப்படும் கேன்ஸ் திரைவிழாவின் எதிரொலிதான் இந்த விழாக் கோலத்திற்குக் காரணம்.

நம்ம ஊரில் பொங்கலன்று கிராமங்கள் களை கட்டியிருக்குமே அதுபோலத்தான் கேன்ஸ் விழாவின்போதும் அந்த நகரம் அமர்க்களப்படுமாம். எங்கு பார்த்தாலும் கட் அவுட்கள், விளம்பரப் பலகைகள் என அமர்க்களப்படுத்தி விடுவார்களாம்.

கேன்ஸ் விழாவுக்கு நம்ம ஊர் படங்களும் திரையிடப்பட்டன. தமிழிலிருந்து வெயில், மலையாளத்திலிருந்து சாய்ரா ஆகியவை அதில் முக்கியமானவை. நம்ம படங்களுக்கு விருது கிடைக்கவில்லை என்றாலும் கூட பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாகவே ஈர்த்துள்ளன என்பது நமக்கு பெருமையான, ஆறுதலான விஷயம்.

தமிழக மக்களை உணர்ச்சிக் கயிறால் கட்டிப் போட்ட படம் வெயில். நம்மை மட்டுமல்ல, கேன்ஸ் பட விழாவுக்கு வந்தவர்களையும் வெயில், உருக வைத்து விட்டதாம். சொல்லி நெகிழ்கிறார் இயக்குநர் வசந்தபாலன்.

ஷங்கரின் வாரிசுகளில் ஒருவர்தான் வசந்த பாலன். வளர்த்து, ஆளாக்கி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விடாமல், தனது சொந்தத் தயாரிப்பில் தனது உதவியாளர்களுக்கு படங்களை இயக்கும் வாய்ப்பு கொடுக்கும் வித்தியாச குரு ஷங்கர்.

அப்படித்தான் வெயில் படத்தை இயக்கும் வாய்ப்பையும் வசந்த பாலனுக்கும் கொடுத்தார் ஷங்கர். மிகச் சிறந்த படைப்பாக ரசிகர்களால் பாராட்டப்பட்டு, திருப்திகரமான வசூலையும் வெயில் கொடுத்தது.

கேன்ஸ் திரைவிழாவில் வெயில் திரையிடப்பட்ட அனுபவத்தையும், அப்படத்திற்கு அங்கு கிடைத்த வரவேற்பையும் வசந்த பாலன் நெகிழ்ச்சியுடன் விவரித்தார்.

உலகெங்கிலும் உள்ள சினிமா பிரியர்களின் விருப்ப இடம் கேன்ஸ் திரைவிழா. சின்ன நகரம்தான் கேன்ஸ். பட விழா நடைபெறும்போது மட்டுமே அங்கு ஆட்கள் கூட்டம் இருக்குமாம். சினிமாவுக்காகவே அந்த நகரம் உருவாக்கப்பட்டதாம்.

ஆஸ்கர் விருதுகளில் கடைப்பிடிக்கும் நடைமுறைகளுக்கு முற்றிலும் நேர் மாறானது கேன்ஸ் விழா. ஆஸ்கரில் மனித நேயம், உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கிடையாது. இயல்பான கதைகள், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்குத்தான் அங்கு முக்கியத்துவம் அதிகம்.

ஆனால் கேன்ஸ் விழாவில் தொழில்நுட்பத்தைக் கண்டுகொள்வதே கிடையாது. உணர்ச்சிப்பூர்வமான கதைகள், மனிதநேயம், மனிதாபிமானம் ஆகியவற்றை அதிகம் பார்க்கிறார்கள்.

எனது வெயில் படம் திரையிடப்பட்டபோது, கிட்டத்தட்ட 600 பேர் அந்தப் படத்தைப் பார்த்தனர். படம் முடிந்த பின்னர் கலந்துரையாடல் நடந்தது. அப்போது நான் வெயில் குறித்து விளக்கினேன்.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் வெயில் எப்படி வாழ்க்கையில் ஒரு அம்சமாக விளங்குகிறது என்று நான் கூறியபோது அனைவரும் அதை ஆர்வத்துடன் கவனித்தனர்.

படத்தின் கதையை விளக்கியதும் அனைவரும் ஒரு சேர கைதட்டினர். படத்தைப் பார்த்த பலரும் நெகிழ்ந்ததைக் காண முடிந்தது. ஒரு வயதான பெண்மணி கண்ணீர் விட்டு அழுதார். அருகே நெருங்கி அவரிடம் பேசியபோது பல வருடங்களுக்கு தனது மகனை அவர் பிரிந்து விட்டாராம்.

தமிழ் சினிமாக்களுக்கும் சர்வதசே அளவில் அங்கீகாரம் இருக்கிறது, அர்த்தம் இருக்கிறது என்பதை இந்த விழா எனக்கு உணர்த்தியது.

கேன்ஸ் திரைப்படவிழாவில் வெயில் படத்திற்குக் கிடைத்த கெளரவத்தை என்னால் மறக்க முடியாது. இந்த நிலையில் ஷாங்காய் விழாவிலும் வெயில் தேர்வாகியுள்ளது சந்தோஷம் தருவதாக உள்ளது.

இதற்கு வெயில் படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்த இயக்குநர் ஷங்கருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்று நெகிழ்ந்தார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil