சுறா, புலி படங்கள் எல்லாம் லாஸ் இல்லை.. தலைவா பட பிரச்சனை.. டி.ஆர். ரமேஷ் விளக்கம்!
நடிகர் விஜய் படங்களால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக பரவும் தகவல்களுக்கு தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். விஜய் எப்போதும் தயாரிப்பாளர்களை ஆதரிப்பவர் என்றும், 'தலைவா' படத்திற்காக தனது சம்பளத்தில் 7 கோடி ரூபாயை திரும்பக் கொடுத்தார் என்றும் அவர் கூறினார். விஜய் குறித்து பரவும் தவறான தகவல்களுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார்.
சென்னை: நடிகர் விஜயை வைத்து படம் தயாரித்த தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்படும் தகவலுக்கு மறுப்பு தெரிவித்து, தயாரிப்பாளர் டி.ஆர்.ரமேஷ் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்துகொண்டார். விஜய், தயாரிப்பாளர்களை வாழ வைத்தவர் என்று அவர் அடித்து கூறுகிறார். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தயாரிப்பாளர் சங்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் தலைவராக இருந்தபோது, நடந்த ஒரு தேர்தலில் விஜய்யின் தந்தை ஆதரவு கொடுத்ததுதான் விஜய்க்கும், அவருடைய குடும்பத்துக்கும் அரசியலுக்கும் ஒரு தொடர்பு ஏற்பட்டதற்கான ஆரம்பப் புள்ளி என்கிறார் ரமேஷ். இதுவே பின்னாளில் பல பிரச்சினைகளுக்கு வழிவகுத்தது என்கிறார்.

'தலைவா’ திரைப்படம் ரிலீஸின்போது ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து பேசிய ரமேஷ், அந்தப் படத்தில் இடம்பெற்ற "தளபதி தளபதி எங்கள் தளபதி" பாடல் வரிகள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை கோபத்தை ஏற்படுத்தியதாக கூறினார். அத்துடன் "Time to lead" என்ற வாசகமும் ஆட்சியில் இருந்தவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார்.
விஜய் நடித்த பல படங்கள் நஷ்டம் அடைந்ததாக கூறப்படும் தகவல்களை மறுத்த ரமேஷ், அப்படி நஷ்டம் ஏற்பட்டால், விஜய் அந்த நஷ்டத்தை ஈடு செய்வார் என்றார். 'தலைவா' படத்துக்காக விஜய் தனக்கு சம்பளமாக வாங்கிய 12 கோடி ரூபாயில் 7 கோடி ரூபாயை திரும்ப கொடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
புலி படத்தின் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார், அந்தப் படத்திற்காக தனது 25 வருட சேமிப்பை இழந்ததாகக் கூறியது குறித்து பேசிய ரமேஷ், படத்தின் மெயின் தயாரிப்பாளர் சிபு என்றும், பி.டி.செல்வகுமார் ஒரு பார்ட்னர் மட்டுமே என்றும் குறிப்பிட்டார். மேலும் சிபு தொடர்ந்து பல படங்கள் தயாரித்து வருவதாகவும், நஷ்டம் அடைந்ததாகக் கூறுவது உண்மையல்ல என்றும் ரமேஷ் கூறினார்.
விஜய் தன்னுடன் வேலை செய்பவர்களையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றுவார் என்றும், அதேபோல் நாட்டு மக்களையும் காப்பாற்றுவார் என்றும் நம்பிக்கையுடன் கூறினார் ரமேஷ். விஜயை பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
நடிகர் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு வரும் நிலையில், சினிமாவில் அவர் உச்ச நட்சத்திரமாக இல்லை என்றும் புலி, மெர்சல், லியோ என பல படங்களும் தோல்விப் படங்கள் என அவருக்கு எதிராக திமுகவினர் திட்டம் போட்டு வதந்திகளை பரப்பி வருவதாக கூறுகின்றனர். சுறா படம் கூட சங்கிலி முருகனுக்கு லாபம் தான் என்றும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியதால் படம் நஷ்டமில்லை என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











