twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சேகுவேரா விஜய்சேதுபதி, உலகப் புகழ் ஸ்ருதி ஹாசன்.. இது "லாபம்" சொல்லும் கதை!

    By
    |

    சென்னை: லாபம்.. இது இயக்குநர் எஸ்.பி. ஜனநாதன் இயக்கி வரும் புதிய படம். விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பில் படம் உருவாகி வருகிறது.

    ஜனநாதன் படம் என்றாலே வித்தியாசமாக இருக்கும், விஷயங்கள் இருக்கும். தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவது ஒரு விஷயத்தை ஆழமாகச் சொல்பவர், இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன்.

    Vijay sethupathi is like a Che Guevara-director s.p.jhananathan

    அவரது முதல்படமான 'இயற்கை'யில் இருந்து கடைசியாக வெளியான 'புறம்போக்கு' வரை அப்படித்தான். இப்போது இயக்கி வரும் 'லாபம்' படத்தில் எப்படி? அதை அவரிடமே கேட்டோம்..

    ''இதுவும் அப்படித்தான் இருக்கும். நாட்டுக்குத் தேவையான, முக்கியமான விஷயத்தைப் பேசப்போகும் படம். லாபம்னா என்ன? அது எங்கயிருந்து வருதுங்கறதை விரிவா சொல்றேன்" என்கிறார் ஜனநாதன்.

    வழக்கமா உங்க படங்கள்ல அரசியல் இருக்குமே?

    இதுலயும் இருக்கு. ஆனா , கரை வேட்டிக் கட்டிய சில மனிதர்களைப் பற்றிய அரசியல் இல்லை. அரசியலின் அடிப்படையை, ஆழத்தைப் பேசறேன். அதனாலதான் இந்த டைட்டில். 'லாபம்'னா எங்கயிருந்து வருதுங்கறதுதான் உலகம் முழுவதும் இருந்த பொருளாதார அறிஞர் களோட கேள்வியா இருந்தது. இதுக்கு விடை கண்டுபிடிக்க முடியாம 20 நூற்றாண்டு கடந்ததுங்கறது வரலாறு. அதுக்கு விடை சொன்னவர் காரல் மார்க்ஸ்! இதுக்குள்ளதான் எல்லாவிதமான அரசியலும் இருக்கு. அந்த அரசியலை ஒரு கிராமத்துப் பின்னணியில சொல்றேன்.

    தமிழ் சினிமா இதுவரை விதவிதமான கிராமங்களைக் காண்பிச்சிருக்கு..?

    உண்மைதான். பொதுவா ஒரு கிராமத்து தனி மனிதனின் வாழ்க்கைப் போராட்டம், கஷ்டம், ஏழ்மை... இதை நேர்த்தியா செய்தா, அதைத்தான் சிறந்தப் படங்களோட கணக்குல சேர்க்கிறாங்க. ஆனா, பிரச்னையோட வேரை, அடி ஆழத்தைப் பேசறதுதான் சிறந்த படம்னு நினைக்கிறவன் நான். உலகத்துல தோன்றின எல்லா அறிஞர்களுமே, உலகத்தை விமர்சனம் பண்ணிட்டுத்தான் இருந்தாங்க. ஆனா மார்க்ஸ் மட்டும்தான் அதை மாற்றி அமைக்கிறது பற்றி சிந்திச்சார். அதே போல நம்ம சினிமாவும் பல பிரச்சனைகளை, நல்லா விமர்சனம் செய்யுது. ஆனா, என் படங்கள் அதை மாற்றி அமைப்பதை பற்றிப் பேசும்.

    Vijay sethupathi is like a Che Guevara-director s.p.jhananathan

    நீங்க காண்பிக்கப் போகிற கிராமம் எப்படியிருக்கும்?

    நான் நெல்விளையும் தஞ்சை மாவட்டத்தைப் பூர்வீகமா கொண்டவன். ஆனா, கிராமம் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. இதுவரை தமிழ் சினிமா காட்டாத கிராமப் பகுதிகள் இருக்கு. அது, கிராமத்துப் பொருளாதாரம்!. உலகப் பொருளாதாரத்தைத் தீர்மானிக்கிறது, இதுதான். கிராமம் வீழ்ந்தா நகரம் வீழும். தொழிற்சாலைகள் வீழும். அதிகமான கிராமங்களைக் கொண்ட இந்தியா போன்ற நாடுகள்ல இது அதி முக்கியமான விஷயம். அதைதான் நான் காட்டுற கிராமத்துல சொல்லப் போறேன்.

    விஜய் சேதுபதியோட இது உங்களுக்கு 2 வது படம்...

    'புறம்போக்கு' படம் பண்ணிட்டு இருக்கும்போதே, நாம உடனே இன்னொரு படம் பண்ணலாம்னு விஜய்சேதுபதி சொன்னார். நான் என் உதவி இயக்குனர்கள்கிட்ட கதை கேளுங்கன்னு சொன்னேன். அவர் கேட்டார். அதுல ஒருத்தர் ரோகாந்த். இப்ப 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' பண்றார். இன்னொரு உதவி இயக்குனரும் கதை சொல்லி ஓகே பண்ணியிருக்கார். அதுக்கு இடையில ஆரம்பிச்சதுதான் 'லாபம்'. பட்ஜெட் அதிகம் அப்படிங்கறதால, வேற எந்த தொந்தரவும் வந்திடக் கூடாதுன்னு விஜய் சேதுபதியே தயாரிக்கிறார். 7 சி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சேர்ந்து தயாரிக்குது. இதுல விவசாயத்தை மாற்றி அமைக்கிற புரட்சிக்கர விவசாயியா விஜய்சேதுபதி வர்றார். அவரோட பயணம், சேகுவாரா மாதிரி இருக்கும்.

    விஜய் சேதுபதி சேகுவேரான்னா, ஸ்ருதிஹாசன்..?

    அவங்க, உலகம் முழுதும் கலை நிகழ்ச்சி நடத்தற கிளாராங்கற கேரக்டர்ல வர்றாங்க. தன்னை 'உலகப் புகழ்'ன்னு அவங்களே சொல்லிக்குவாங்க. கிராமத்தை மேம்படுத்த விஜய்சேதுபதி எடுக்கும் முயற்சிகளுக்கு உதவியா நிற்கிறாங்க.

    தன்ஷிகா, மாடர்ன் கேரக்டர்ல நடிக்கிறதா சொன்னாங்களே...

    ஆமா. அந்த கேரக்டருக்கு புதுமுகங்கள் தேடினோம். யாரும் செட்டாகலை. மறுநாள் காலைல ஷூட்டிங். என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டு இருக்கும்போதுதான், முந்தின நாள் நைட், தன்ஷிகாவுக்கு போன் பண்ணினேன். 'எப்படி இருக்கீங்க தன்ஷிகா?'ன்னு கேட்டேன். 'நல்லாருக்கேன் சார், என்ன திடீர்னு போன் பண்ணியிருக்கீங்க?'ன்னு கேட்டாங்க. 'படத்துல ஒரு கேரக்டர் இருக்கு, பண்றீங்களா?'ன்னு கேட்டேன். 'இது என்ன சார் கேள்வி? எப்ப ஷூட்டிங்னு சொல்லுங்க, வந்து நிற்கிறேன்'னாங்க. உடனே 'நாளை'க்குன்னு சொன்னேன். ஒரு வார்த்தை பேசலை. காலைல ஸ்பாட்ல வந்து நின்னாங்க. ஆச்சர்யமா இருந்தது எனக்கு. அவங்க கேரக்டர் கண்டிப்பா பேசப்படறதா இருக்கும்.

    வெயிட்டிங் சார்.. சீக்கிரம் லாபத்தைக் காட்டுங்க!

    English summary
    'Vijay sethupathi is like a Che Guevara'-director jhananathan interview about his 'Laapam' movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X