»   »  செல்வா இயக்கத்தில் விக்ரம்!

செல்வா இயக்கத்தில் விக்ரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Vikram with Shreya
கந்தசாமியை முடித்து விட்டு செல்வராகவன் இயக்கப் போகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.

பொங்கலுக்கு வெளியாகியுள்ள விக்ரமின் பீமா ஹிட் பட வரிசையில் இணைந்துள்ளது. இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார் விக்ரம்.

பீமா படம் ரிலீஸாவதற்காக தனது ரூ. 1.5 கோடி சம்பளத்தையே விட்டுக் கொடுத்தவர் விக்ரம். பொங்கலுக்கு கண்டிப்பாக படம் வந்தே ஆக வேண்டும் என்று மும்முரமாக இருந்தார். அவரது எதிர்பார்ப்புப்படி படமும் ரிலீஸாகி, வெற்றியும் பெற்றுள்ளது.

இந்தப் படத்துக்காக கடந்த இரண்டரை ஆண்டுகளில் 3 முக்கிய படங்களை இழந்துள்ளாராம் விக்ரம்.

தற்போது பீமா ரிலீஸாகி விட்ட சந்தோஷத்தில் இருக்கும் விக்ரம் செய்தியாளர்களிடம் ரிலாக்ஸ்டாக பேசினார். பீமா குறித்து அவர் பேசுகையில், பீமா எனது திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படம்.

படத்தைப் பார்த்த பலரும் பீமாவில் எனது கேரக்டர் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை முடிப்பதற்குள் எனது சம்பளம் உள்பட கிட்டத்தட்ட ரூ. 11 கோடி வரை நான் இழந்துள்ளேன். மேலும் மன அமைதியும் பாதிக்கப்பட்டு, பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன்.

நான் உயரத்திற்கு வந்த பின்னர் முதல் முறையாக இவ்வளவு பெரிய துயர நிலையை சந்திக்க வேண்டியதாயிற்று. இதற்காக நான் பலமுறை வருத்தமடைந்தேன். இருப்பினும் நல்ல படம் ஒன்றை கொடுத்துள்ளோம் என்ற நிம்மதி எனக்கு உள்ளது. அத்தோடு மட்டுமல்லாமல், தயாரிப்பாளரை எப்படியாவது சிக்கலிலிருந்து காக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன்.

பீமா ரூ. 43 கோடிக்கு விற்பனயாகியுள்ளது. தற்போது படம் அனைத்துப் பகுதிகளிலும் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதாக எனக்கு நல் செய்தி வந்துள்ளது. கடவுளுக்கு நன்றி. எனது ரசிகர்களும், தமிழக மக்களும், படத்தையும், என்னையும் காப்பாற்றி விட்டனர். தயாரிப்பாளருக்கும் பெரும் நிம்மதியைக் கொடுத்து விட்டனர் என்றார் விக்ரம்.

பீமா ரிலீஸாகி விட்ட நிம்மதியில் இருக்கும் விக்ரம் தற்போது கந்தசாமி படத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கந்தசாமி குறித்து அவர் கூறுகையில், இந்தப் படம் பெரும் விருந்தாக அமையும். குறிப்பாக குழந்தைகள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள்.

கந்தசாமி மிகப் பெரும் வெற்றி பெறும் என்ற நம்பிக்ைக உள்ளது. எனது திரையுலக வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியாக அது அமையும். இயக்குநர் சுசி.கணேசனின் திறமையைப் பார்த்து நான் வியந்து போயுள்ளேன். அவருடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த அதிர்ஷ்டம்தான். நாட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக நிச்சயம் சுசி. கணேசன் வருவார் என்றார் விக்ரம்.

கந்தசாமிக்கு அடுத்து என்ன படம் என்று கேட்டதற்கு, செல்வராகவனுடன் இணைந்து ஒரு படம் செய்யவுள்ளேன். தற்போது நான் நடித்து வரும் கந்தசாமி மற்றும் செல்வராகவன் செய்து வரும் படம் ஆகியவற்றின் பணிகள் முடிந்ததும், புதிய படம் தொடர்பான பணிகளில் இருவரும் இறங்க திட்டமிட்டுள்ளோம் என்றார் விக்ரம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil