»   »  பொம்மலாட்டம்- இசை விமர்சனம்

பொம்மலாட்டம்- இசை விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

இசை: ஹிமேஷ் ரேஷ்மய்யா
பாடல்கள்: சினேகன், தேன்மொழி தாஸ், விவேகா.
பாடகர்கள்: அனுராதா ஸ்ரீராம், மாதங்கி, காயத்ரி, சுசித்ரா, பாப் ஷாலினி, திப்பு, கார்த்திக்.

கிராமத்து களத்து மேட்டுக்களில் தமிழ் சினிமாவை, மண் மணம் கமழ உருளச் செய்த பாரதிராஜா, கரை கடந்து, இந்தித் திரையுலகில் புகுந்து இயக்கியுள்ள படம்தான் சினிமா. இப்படம்தான் தமிழில் பொம்மலாட்டம் என்ற பெயரில் வெளியாகிறது.

3 வருட இடைவெளிக்குப் பின்னர் வெளியாகும் பொம்மலாட்டம், இந்தித் திரையுலகின் இளம் இசைப் புயல் ஹிமேஷ் ரேஷ்மய்யாவின் இன்னிசையில் உருவாகியுள்ளது.

ஐந்து பாடல்கள், அத்தனையும் தேன் சொட்டும் தித்திப்பு விருந்து. பாடல்கள் படு வித்தியாசமாய் இசை ஆல்பம் கேட்பது மாதிரி குதூகலிக்க வைக்கின்றன.

அனுராதா ஸ்ரீராம், திப்பு, கார்த்திக், ஷாலினி ஆகியோரின் குரல்களில் பாடல்களுக்கு புது உருவும் கிடைக்கிறது.

தனது முதல் தமிழ்ப் படத்திலேயே (2வது படம் தசாவதாரம்) தமிழ் ரசிகர்களை ஈர்த்துள்ளார் ஹிமேஷ்.

பாடல் 1: ஆஹா ஆஹா கண்ணிரெண்டும் ...
(குரல்: கார்த்திக், பாப் ஷாலினி - வரிகள்: சினேகன்)

பாந்தமான வந்திருக்கிறது ஹிமேஷின் முதல் தமிழ்ப் பாடல். அவரது மேற்கத்திய இசையில் , கார்த்திக்கின் குரல் அம்சமாய் தவழ்ந்து ஓடுகிறது. உற்சாகம் கரைபுரள்கிறது.

பாடகர்களின் குரல்களோடு கலந்துருகி மயங்க வைக்கிறது இசை.

பாடல் 2: செக் செக் செக்டா ...
(குரல்: சுசித்ரா - வரிகள்: தேன்மொழி தாஸ்)

தேன்மொழியின் திகட்டாத தெள்ளிய வரிகளில், தென்றல் போல உள்ளுக்குள் போகிறது செக் செக் செக்டா. அரேபிய போக்லோரில் ஆரம்பித்து அப்படியே வேகம் பிடிக்கிறது ஹிமேஷின் இசை. சுசித்ராவின் வெஸ்டர்ன் வாய்ஸும், ஹிமேஷின் மியூசிக்கும் சேர்ந்து ஆட்டம் போட வைக்கின்றன.

வரிகளில் ஆங்கில ஆதிக்கம் இருப்பதுதான் கொஞ்சம் போல இடிக்கிறது.

பாடல் 3: ஓ நெஞ்சில் டோலியா ..
(குரல்: அனுராதா ஸ்ரீராம், திப்பு - வரிகள்: தேன்மொழி தாஸ்)

மொத்தப் பாடல்களிலும் முத்துப் பாட்டு இதுதான். ஹிமேஷின் உச்சஸ்தாயி இசையும், பாடல் வரிகளும் சேர்ந்து ரசிகர்களின் மனதை இம்சிக்கப் போவது நிச்சயம். வடக்கத்தி இசை வாசம் சற்றே அதிகம் இருந்தாலும் லயிக்க வைக்கிறது, ரசிக்க வைக்கிறது.

பாட்டைக் கேட்டு முடித்ததும், மீண்டும் மீண்டும் முனுமுனுக்க வைத்திருப்பதே இந்தப் பாட்டின் ஹிட்டுக்கு ஆதாரம்.

திப்புவும், அனுராதா ஸ்ரீராமும், தேன்மொழி தாஸின் வரிகளை தித்திப்பாக பாடி பாடலுக்கு உயிரூட்டியுள்ளனர்.

பாடல் 4: வா வா தலைவா ..
(குரல்: காயத்ரி அய்யர்)

இருப்பதிலேயே எரிச்சலூட்டும் பாடல் இதுதான். பாடலில் விசேஷம் எதுவும் இல்லை. குபீர் தொண்டைக்காரர் காயத்ரியின் குரல் படு எரிச்சலூட்டுகிறது. ரொம்ப சொல்ல ஏதுமில்லை.

பாடல் 5: கோயம்பேடு பீன்ஸ் ..
(குரல்: மாதங்கி - வரிகள்: விவேகா)

தாளமிட வைக்கும் இசை, மாதங்கியின் மயக்கும் குரல் என பாட்டுக்கு புது மெருகு கூடி ரசிக்க வைத்துள்ளது. ஆனால் விவேகாவின் வரிகள்தான் காலத்திற்கேற்ப இல்லாமல் அரதப் பழசாக உள்ளது.

பாடல் வரிகளில் மேற்கத்தியத்தனத்தை குறைத்திருக்கலாம், இசையிலும் கூட தமிழ் வாசனையை கொஞ்சம் தூக்கலாக்கி இருக்கலாம் (நம்ம பாரதிராஜா படமாச்சே).

மற்றபடி ப்ரஷ் ஆக்ஸிஜனை சுவாசித்த மாதிரி ஒரு சுகானுபவம்.. இந்தப் படத்தின் இசையில்

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil