»   »  தமிழ் சினிமா இசை:ஹரிஹரன், சங்கர் பாய்ச்சல்

தமிழ் சினிமா இசை:ஹரிஹரன், சங்கர் பாய்ச்சல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சொந்த மொழியை சிறப்பாக பாடுவதால்தான் எங்களுக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன என்று பிரபல பின்னணிப் பாடகர்கள் ஹரிஹரனும், சங்கர் மகாதேவனும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட சில பாடர்கள், பாடகிகளே கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பல புதுக் குரல்களை திறந்து விட்டார்.

அலைகடலென ஏகப்பட்ட பின்னணிப் பாடகர்கள், பாடகிகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார். ஹரிஹரன், சங்கர் மகாதேவன், திப்பு, உண்ணி கிருஷ்ணன், சின்மயி என அவரால் அடையாளம் காட்டப்பட்ட குரல்கள் ஏராளம்.

இவர்களின் வரவால் தமிழ் சினிமாப் பாடல்களுக்கு புது முகம் கிடைத்தது, புது இளமை கிடைத்தது, புதிய வடிவம் கிடைத்தது. ரஹ்மானால் அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் ஹரிஹரன் முக்கியமானவர்.

கஜல் பாடகராக மட்டுமே அறியப்பட்டிருந்த ஹரிஹரன், சினிமாப் பாடல்களிலும் பிரமிக்க வைக்க முடியும் என்பதை ரஹ்மான் நிரூபித்தார்.

ஆனால் இன்று ஹரிஹரனுக்கு தமிழ் சினிமாவில் பாடல்கள் குறைந்து விட்டன. அதேபோல சங்கர் மகாதேவனுக்கும் பாடல்கள் குறைந்து போய் விட்டது. நல்ல குரல் வளம் படைத்திருந்தும், தமிழை தாய்மொழியாகக் கொண்டிருந்தும், ஏன் இந்த நிலைமை என்று இருவரிடமும் கேட்டபோது குமுறித் தள்ளி விட்டனர் இருவரும்.

சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து கொள்ள வந்திருந்தனர். அப்போது தங்களுக்கு முன்பு போல தமிழில் வாய்ப்புகள் வருவதில்லை என்று இருவரும் ஆதங்கம் தெரிவித்தனர்.

ஹரிஹரன் கூறுகையில், நாங்கள் தமிழை சிறப்பாக உச்சரித்து, சரியாக பாடுவதால்தான் தமிழில் வாய்ப்புகள் குறைந்து போய் விட்டன. தமிழ் சினிமாவுக்கு இப்போது சரியான உச்சரிப்பு இல்லாத, ஏனோதானோவென்று பாடும் குரல்கள்தான் தேவைப்படுகின்றன.

காரணம், இன்றுள்ள இளம் நடிகர்களுக்கு நல்ல குரல் வளம் முக்கியமாகத் தெரியவில்லை. மாறாக, ஜாலியாக, சாதாரண உச்சரிப்புடன், பேச்சு வழக்கில் பாடுபவர்களைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள். எனவே முறையாக, சரியாக பாடத் தெரிந்த எங்களை யாரும் இப்போது சீண்டுவதில்லை.

பாலிவுட்டில் அந்த நிலை இல்லை. அங்கு பங்க்ரா, சுபி பாடல்கள் என பல இசை வடிவங்களை இணைத்து புதிசு புதிசாக முயற்சித்து வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால் தமிழில் அப்படி ஒரு நிலை இதுவரை வரவில்லை.

சில காலத்திற்கு முன்பு வரை தமிழ் சினிமாப் பாடல்கள் என்றாலே டப்பாங்குத்துப் பாடல்கள் என்ற நிலையில்தான் இருந்தது. ஆனால் இப்போதும் நிலைமை மாறி விடவில்லை. டப்பாங்குத்துடன், குத்துப் பாட்டை இணைத்து விட்டனர். மொத்தத்தில் தமிழ் சினிமா இன்னும் புதிய வடிவத்திற்கு மாறவில்லை என்றார் ஹரிஹரன்.

சங்கர் மகாதேவன் கூறுகையில், தமிழ் சினிமா என்றில்லை, நாடு முழுவதுமே இதே நிலைதான் என்று கொஞ்சம் போல தமிழ் சினிமாவை விட்டுக் கொடுக்காமல் கூறினார் சங்கர் மகாதேவன்.

செத்துப் போன ஒருவருக்கு நன்கு மாடர்னாக டிரஸ் போட்டு விட்டு உலவ விடுவது போல இசையின் இன்றைய நிலை உள்ளது.

தமிழ் சினிமா இசை இன்னும் பல பரீட்சார்த்த முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. அதேசமயம், மக்களின் மனதைத் தொடும் வகையிலான பாடல்கள் இன்னும் தமிழ் சினிமாவில் வரத் தான் செய்கின்றன என்றார் சங்கர் மகாதேவன்.

வாய்ப்பு குறைந்து விட்டதால் தமிழ் சினிமா இசையைப் பற்றி இப்படி விமர்சிக்கும் இவர்கள், இத்தனை காலமாக ஏன் தமிழ் சினிமா இசை குறித்த தங்களது கவலையை, அக்கறையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தவில்லை என்று புரியவில்லை.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil