»   »  ரஹ்மானும் வைரமுத்தும் இருந்திருந்தால்... கபாலி இசை, புரட்சியின் குரலா?!

ரஹ்மானும் வைரமுத்தும் இருந்திருந்தால்... கபாலி இசை, புரட்சியின் குரலா?!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலி படத்தின் பாடல்கள் வெளியாவதற்கு முன்னரே... ஒரு பழைய நிகழ்வு அடிக்கடி நினைவில் வந்துகொண்டே இருந்தது. இதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது நிகழ்ந்ததாக அதை சொல்வார்கள். இசைப்புயல், ஆஸ்கார் தமிழன்... ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் முத்து படத்தின் பாடல்கள் வெளியானபோது, பாடல்கள் பிடிக்காமல் ரஜினி ரசிகர்களில் சிலர் ரஹ்மான் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள் என்பது அந்த நிகழ்வின் நினைவு. 'குலுவாலில...' பாடலை உதித் நாராயண் குரலில் கேட்டபோது.. என்ன கருத்து சொல்வது என்றே தெரியவில்லை...பிற்பாடு ரஜினி ரசிகர்களே... 'கட்ச்சியெல்லாம் இப்பம் நமக்கெதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு...' என்று பாடித் திரிந்தது வேறு கதை (இன்னைக்கு வரைக்கும் அதே நிலைமை தான்!)

Lyricist Murugan Manthiram's review of Kabali songs

கபாலி பாடல்களை கொண்டாடித் தீர்ப்பவர்கள் ஒரு பக்கமும்... கொண்டாடாமல் தீர்ப்பவர்கள் இன்னொரு பக்கமும் நிற்கிறார்கள். நிற்பார்கள்.


நெருப்புடா


நெருங்குடா பாப்போம்


நெருங்குனா பொசுக்குற கூட்டம்!


அடிக்கிற அழிக்கிற எண்ணம்


முடியுமா நடக்குமா இன்னும்


அடக்குனா அடங்குற ஆளா நீ


இழுத்ததும் பிரியற நூலா நீ


தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ


விடியல விரும்புற கபாலீலீலீ.......


இந்தப் பாடலை எழுதி இருப்பவரும், பாடி இருப்பவரும் ஒருவரே. அருண் ராஜா காமராஜ். சிறப்பென்னவெனில் இதில் ஆங்கில ராப் வரிகளை எழுதி இருப்பவரும் இவரே. நடு நடுவே சிலிர்க்க வைக்கும் ரஜினி குரல்.


இப்படி வரிகள் உருவாகக் காரணம்... படத்தின் கதை மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்.


அட்டகத்தி படத்தில் பா.இரஞ்சித்தை பெரிதும் கண்டுகொள்ளாதவர்கள்.. "மெட்ராஸ்" படத்திற்கு பின் நிறையவே கண்டுகொண்டார்கள். சிலர் கண்டுகொள்ள மறுத்தார்கள். அதற்கு காரணம்.. பா.இரஞ்சித்தை வைத்தும் அவரது படங்களை வைத்தும் பேசப்படும் தலித் அரசியல்... தலித் கருத்தியல்.


மெட்ராஸ் படமும்... முக்கியமாக மெட்ராஸ் படத்தின் இறுதிக் காட்சியில் பிரச்சினைக்குரிய அந்த பெருஞ்சுவரில் தீட்டப்பட்டிருந்த இரட்டைமலை சீனிவாசன் படமும் அதை தொடங்கி வைத்தது எனலாம்.


மெட்ராஸில் தொடங்கிய அது இப்போது கபாலியில் பரவலாக்கப்பட்டிருக்கிறது. பரப்பலாகி இருக்கிறது. அதற்கு கபாலி படத்தின் பாடல் வரிகள் மிகப்பெரிய காரணமாக அமைந்திருக்கிறது. ஏனெனில்... 'தேவர்'மகன்களும் சின்னக் 'கவுண்டர்'களும் தங்கள் மீது நடமாடுவதை மிக சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் வெண்திரைகள்.... அதே திரையில் 'தலித்'கள் நடமாடும் போதும் சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன. ஆனால்... அந்த வெண்திரைகளுக்கு முன்னாலும் பின்னாலும் இருப்பவர்கள்.... ?!


இப்படியாக இதனாலும் அதனாலும் கபாலி பாடல்கள்... வைரலாகி இருக்கிறது. வரலாறாகி இருக்கின்றன.


தமிழகத்தில் இருந்து.. வயிற்றுப்பிழைப்புக்காக மலேசியா, மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கு தேயிலைத்தோட்ட கூலிகளாக சென்ற தமிழர்கள்... அங்கு அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்று சொல்வார்கள். அப்படி மலேசிய தேயிலைத் தோட்டங்களில் அடிமைகளாக இருந்த தமிழர்களின் கதையும் சேர்ந்தது தான் கபாலி படத்தின் கதை என்று சொல்கிறார்கள். அவர்களில் இருந்து உருவான, அல்லது அவர்களின் விடுதலைக்காக உருவான ஒரு டான் ஆக... கபாலி சித்தரிக்கப்பட்டிருப்பார் என்றும் தெரிகிறது.


ஆக, அடிமைகளின் கதையை, அவர்களின் விடுதலையை, அந்த விடுதலைக்காக போராடுகிற ஒரு தலைவனின் கதையை... பேசும் படமாக கபாலி இருக்கும் என்கிறார்கள். அதை உறுதி செய்வது போலவே... நெருப்புடா பாடலில்...


அடிக்கிற அழிக்கிற எண்ணம்


முடியுமா நடக்குமா இன்னும்...


என்ற வரிகள் அமைந்து இருக்கிறது.


கபிலனின் காந்த வரிகளில் உருவாகி உள்ள "உலகம் ஒருவனுக்கா" பாடல் இன்னும் பலபடிகள் மேலே சென்று முழங்குகிறது.....கபாலி தான்
கலகம் செய்து
ஆண்டையரின் கதை முடிப்பான்...


Lyricist Murugan Manthiram's review of Kabali songs

-----


எண்ணத்தில் நூறு திட்டமிட்டு
கபாலி வாரான் கையத் தட்டு
பம்பரம் போல சுத்திக்கிட்டு
"பறை"யிசை அடித்து நீ பாட்டுக்கட்டு


------


மேட்டுக்குடியின் கூப்பாடு
இனி நாட்டுக்குள்ள கேட்காது...


"இன" முகவரி
அது இனி விழி திறந்திடுமே


-----


என்ற வரிகளும்... விடுதலையின் குரலாக புரட்சியின் இசையாகவே தெறிக்கிறது.


அருண்ராஜா காமராஜ், கபிலனைத் தொடர்ந்து.. அதிர வைக்கிறார் உமாதேவி. தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கான அதிரடிப் பாடல்களை எந்த பெண் பாடலாசிரியரும் இதுவரை இத்தனை காத்திரமாக எழுதவில்லை... வாய்ப்பளிக்கவில்லை... வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே நினைக்கிறேன். உமாதேவி.... தமிழகத்தின் உச்ச நடிகராக கொண்டாடப்படுகிற ரஜினிகாந்திற்கு எழுதி இருக்கிறார்.


அதுவும் எப்படி...


Lyricist Murugan Manthiram's review of Kabali songs

வீரத் துரந்தரா


எமை ஆளும் நிரந்தரா


பூமி அறிந்திரா


புது யுகத்தின் சமர் வீரா


உன்நிலை கண்டு


இன்புற்றார்க்கு


இரையாகாமல்


அன்புற்றார் அழ


அடிமைகள் எழ


-----


உரிமை யாழ் மீட்டினான்


உணர்வால் வாள் தீட்டினான்


உலகில் யாரென காட்டினான்


----


தடைகள் அறுந்திட


தலைகள் நிமிர்ந்திட


"கடை"யன் "படை"யன் ஆகினான்...


இப்படி தமிழ் முழக்கம் செய்கிறார் உமாதேவி. ஒரு பக்கம் கபாலி பாடல் வரிகள் தூய தமிழால் நிறைந்து வழிய... பாடல்களின் இடையே வரும் ஆங்கில ராப் வரிகளும் அதிரடிக்கிறது.


உதாரணத்திற்கு இதே வீரத் துரந்தரா பாடலில்... ஜாம் ராக்ஸ் எழுதியுள்ள வரிகளில் ஒன்று... இப்படிச் சொல்கிறது..


"EVERY MAN GOTTA RIGHT TO DECIDE HIS DESTINY"


கபாலி படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடல்களில், நெருப்புடா, உலகம் ஒருவனுக்கா, வீரத் துரந்தரா பாடல்கள், படத்தின் கதாபாத்திரமான கபாலியின் புகழ் பேசும் பாடலாகவும் அதே நேரம், நடிகர் ரஜினிகாந்தின் ஹீரோயிஸ பாடல்களாகவும் அதிர்வது சிறப்போ சிறப்பு.


இந்தப் பாடல்கள் தவிர... வானம் பார்த்தேன் என்றொரு பாடலும். மாய நதி என்றொரு இன்னொரு பாடலும் இருக்கின்றன.


மேற்குறிப்பிட்ட மூன்று பாடல்களில் மொத்த வரிகளும் புரட்சியின் இசையாகவும் விடுதலையின் குரலாகவும் ஒலிக்கிறது. அதையே முன்னிறுத்துகிறது. இதில் இரண்டு விஷயங்கள் பெரிதாக பேசப்படுகிறது...


Lyricist Murugan Manthiram's review of Kabali songs

ஒன்று...


பா.இரஞ்சித்தை முன்னிறுத்தி பேசப்படுகிற தலித் அரசியல், மற்றும் தலித் கருத்தியல்... உலகத்தில் எந்த மூலையில் எந்த சமூகம் அடிமைப்பட்டுக் கிடந்தாலும் அவர்களுக்கான குரல் இப்படித்தான் இருக்கும். கபாலி பாடல் வரிகளை... படத்தையும் தாண்டி... அதன் கதையையும் தாண்டி... தலித் அரசியலாகவும் தலித் கருத்தியலாகவும் இணைத்துப் பார்ப்பதும் இணைக்காமல் கேட்பதும் அவரவர் பாடு.


ஆனால்... அப்படி... இப்படி ஒன்று நிகழ காரணமாக இரஞ்சித்தை விட... அதற்கு துணையாக இருந்த ரஜினிகாந்த்தை வானுயர புகழ்வதும் வசை பாடுவதும் வரலாற்றில் நிகழ்ந்தே தீரும்!


இரண்டு...


இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தால், வைரமுத்து வரிகள் இருந்திருந்தால்.... என்று ஒருபக்கம் பேசிக்கொண்டிருப்பார்கள்.


ரஹ்மான் இசை அமைந்திருந்தால்... வைரமுத்து வரிகள் இருந்திருந்தால்... கண்டிப்பாக இப்படி இருந்திருக்காது என்பதை உறுதியாக சொல்லிவிட முடியும். அதுதான் இந்த பாடல்களின் சிறப்பு. பாடல் வரிகளின் சிறப்பு.


ஏனெனில் அது நிகழ்ந்திருந்தால்... இதை விட மேலாகவோ... அல்லது இதற்கும் கீழாகவோ இருந்திருக்கலாம். கண்டிப்பாக இப்படி வாய்த்திருக்காது.


சந்தோஷ் நாராயணின் இசை சமத்துவம் பேசி இருக்காது.


அருண்ராஜா காமராஜ், கபிலன், உமா தேவி... வரிகள் புது வரலாற்றை உருவாக்குவது நிகழ்ந்திருக்காது.


எஸ்.பி.பி. மனோ, சங்கர் மகாதேவன், கார்த்திக்...குகள் இல்லாமல்... சூப்பர் ஸ்டாரின் சூப்பர் தீம் பாடல்களை கானா பாலாவும் அருண்ராஜா காமராஜூம் லாரன்ஸ் ராமும் பிரதிப் குமாரும் அனந்துவும் சந்தோஷ் நாராயணனும் பாடி இருக்க முடியாது.


அது நிகழ்ந்தது. பா.இரஞ்சித்.. கலைப்புலி தாணு.. சந்தோஷ் நாராயணன்... ரஜினிகாந்த் கூட்டணி அதை நிகழ்த்தியது.


ஏனெனில்... இது ரஜினிகாந்த் படம்.


ஏனெனில்... இது கலைப்புலி தாணு படம்.


ஆனால்... இவை இரண்டையும் விட முக்கியமாக இது பா.இரஞ்சித் படம்.


இந்தியன், கமல் படம் என்பதைத் தாண்டி ஷங்கர் படம் என்பதைப்போல....


ரமணாவும் துப்பாக்கியும், விஜயகாந்த் படம் விஜய்ப படம் என்பதைத் தாண்டி ஏ.ஆர்.முருகதாஸ் படம் என்பதைப் போல...


முள்ளும் மலரும், ரஜினிகாந்த் படம் என்பதைத் தாண்டி மகேந்திரன் படம் என்பதைப் போல...


கபாலியையும் ரஜினியையும் இரஞ்சித்தையும் திரையில் பார்க்கும் எதிர்பார்ப்பு நிமிடத்திற்கு நிமிடம் எகிறிக்கொண்டே இருக்கிறது.


பார்க்கலாம்.... காலத்தின் கணக்கு என்னவென்று... காலத்தின் கையில் இருப்பது என்னவென்று... அதிவிரைவில்...


- முருகன் மந்திரம்


திரைப்பட பாடலாசிரியர்

English summary
Here is Lyricist Murugan Manthiram's critical comments on Rajinikanth's Kabali songs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil