For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாட்டுக்கு நாடே அடிமை!

  By Shankar
  |

  - கவிஞர் மகுடேசுவரன்

  ஹேமநாத பாகவதர் என்னும் பாடகார் "என் பாட்டுக்கு இந்தப் பாண்டிய நாடே அடிமையென்று எழுதிக் கொடுப்பீரா ?" என்று வரகுண பாண்டியனைப் பார்த்துக் கேட்டார். ஒரு பாணர் ஓர் அரசரைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறார். அதற்கு வரகுண பாண்டியனும் சினக்காமல் முகஞ்சிவக்காமல் "பாண்டிய நாட்டிலும் இசை வல்லார் உளர்..." என்று பதில் கூறுகிறார். ஏனென்றால், பாடல்களுக்கு நாம் நம்மையே எழுதிக் கொடுத்துவிடுவோம். அம்மட்டிலும் நமக்குப் பாடல்கள் மீது மாளாக்காதல்.

  தொன்று தொட்டு இன்றைக்கு வரைக்கும் பாடல்கள்தாம் நம் ஓய்ந்த நேரத்தையும் பணி நேரத்தையும் பான்மை குன்றாமல் பாதுகாத்து வருகின்றன. தமிழ்மொழியே பண்மொழிதான். பாட்டுக்குரிய மொழிதான். இதில் எழுதப்பட்டவை அனைத்தும் ஓசையமைப்புக்குள் இருத்தி எழுதப்பட்டவையே. பிற்கால அச்சு இயந்திர வாய்ப்புகள்தாம் மொழியில் யாப்புக்கட்டுக்கு அப்பாற்பட்ட உரைநடை எழுத்துகள் எழுதப்படக் காரணமாயிற்றே தவிர, அதற்கு முந்திய காலம்வரை இங்கே எல்லாமே பாடல்கள்தாம். இசைச் சொற்கள்தாம். அந்தத் தொன்மன இயக்கம்தான் இன்றைக்கு நம்மைத் திரைப்பாடல்களின் பெரும் சுவைஞர்களாக ஆக்கி வைத்திருக்கிறது.

  Music, the life giver

  திரைப்பாடல்கள் தமிழர் வாழ்வில் நீங்கா இடம்பிடித்துவிட்டன. உள்ளம் உயிர் உணர்வு எங்கு நீக்கமறக் கலந்துவிட்டன. நம் மக்களிடம் திரைப்பாடல்களுக்கு நிகரான பேரிடத்தைப் பிடித்த இன்னொரு கலையிலக்கிய வடிவம் இல்லவே இல்லை என்று துணிந்து கூறலாம். இது ஏதோ இன்றைக்கு வாய்த்த ஓர் அமைப்பு என்று கருதிவிடவேண்டா.

  Music, the life giver

  வானொலி மட்டுமே இருந்த காலத்தில் திரைப்பாடல்களை நாளொன்றுக்கு அரை மணி நேரம் ஒலிபரப்புவார்கள். அவ்வரைமணி நேரத்திற்காக இரண்டு மணி நேரம், ஏன், நாள் முழுக்கக் காத்திருந்தவர்கள் நாம். திருவிழாவாகட்டும், திருமண விழாவாகட்டும், பூப்பு நன்னீராட்டு ஆகட்டும் எங்கும் ஒலிபெருக்கையைக் கட்டி திரைப்படப் பாடல்களை ஒலிக்கவிட்டோம். அவ்வளவு ஏன், இழவு வீட்டில்கூட ஒலிபெருக்கியைக் கட்டி "போனால் போகட்டும் போடா..." என்று பாடவிட்டோம். அவ்வளவு ஆழ்ந்தும் அகன்றும் தமிழ் மக்கள் வாழ்க்கையோடு திரைப்பாடல்கள் வேர்விட்டுப் பரவிவிட்டன. அதற்கு நிகராகப் பரவிய வேறொன்று இல்லைதானே ?

  Music, the life giver

  பாடல்கள் ஏன் மக்களுக்குப் பிடித்துப்போயின ? ஏனென்றால் அதில் அவர்கள் தம் வாழ்க்கை ஒப்பு நோக்கிக் கொள்ள முடியும். அவர்கள் வாழ்வில் நேர்ந்த துயரத்தையும் இன்பத்தையும் இனங்காண முடியும். அவர்கள் உற்றவை, பட்டவை, மகிழ்ந்தவை, துவண்டவை என்னென்னவோ அவற்றை ஒரு பாடல் சொல்லும். "மின்னாமல் முழங்காமல் வருகின்ற மழைபோல்..." காதல் தனக்குத் தோன்றிவிட்டதை ஒரு பெண் பாடுகிறாள். காதலுற்ற எல்லாப் பெண்டிர் நிலையும் அதுதான். "சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை..." என்னும் வரியைக் கேட்டதும் அதன் சுவைஞன் தான் காதலுற்ற பொழுதை நினைவில் மீட்டுகிறான். அவனுக்கு நேர்ந்ததை அந்தப் பாட்டு வரி விளக்கிச் சொல்லிவிட்டது. "கடல்நீர் நடுவே பயணம் போனால் குடிநீர் தருபவர் யாரோ ? தனியாய் வருவோர் துணிவைத் தவிர துணையாய் வருபவர் யாரோ ?" என்று ஒரு மீனவன் பாடும்பொழுது மீனவர் கூட்டத்திற்கு மட்டுமில்லை, கேட்கும் யார்க்குமே நெஞ்சு விம்மும். 'சமரசம் உலாவும் இடமே...' என்னும் பாட்டு வரி சுடுகாட்டைச் சொல்லும்போது அது பேருண்மையாகிவிடுகிறது. திரைப்பாடல்கள் இப்படித்தான் மக்களைக் கொள்ளைகொண்டன.

  ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் நம் மக்கள் தொகையில் எண்பதுக்கும் மேற்பட்ட விழுக்காட்டினர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அவர்களுடைய பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்களே. தாலாட்டும் ஒப்பாரியும் ஏற்றப்பாட்டும் ஓடப்பாட்டும் நடவுப்பாட்டுமாய் வாழ்ந்தவர்கள். நாட்டுப்பாடல் வடிவங்களை மீறிய பாடல்களை அவர்கள் செவிமடுக்கவில்லை. எண்ணிப்பாருங்கள், தமிழ் என்பதே பாட்டுமொழிதான். அதில் எழுதப்பட்டிருந்தவை அனைத்துமே ஓசையொழுங்கு உடைய செய்யுள்களே. ஆனால், அவற்றைப் பாமரர்க்கு எடுத்துக் கூறிப் பாடவைக்க ஒருவருமில்லை. ஏதேனும் திருவிழாக்களில் உயர்வகைக் கூத்து வடிவங்களில் குறவஞ்சியோ பள்ளுப்பாடல்களோ பாடப்பட்டிருக்கலாம். அத்தகைய சிறு வாய்ப்புகளைத் தவிர நம் மக்களுக்குப் பாடவே கேட்கவோ வேறு பாடல்கள் கிட்டவில்லை. அதனால் மக்களே தமக்குள்ளாக பாட்டுக் கட்டிப் பாடிக்கொண்டிருந்தார்கள். "நீதான் நல்லாப் பாட்டுக் கட்டுவியே.... என் மருமகளைப் பத்தி ஒரு பாட்டுச் சொல்லு பார்க்கலாம்..." என்று அவர்களுக்குள்ளாகவே ஒரு பாணரை ஆக்கி வளர்த்தனர். சித்தர்கள் எழுதியவையும் ஞானப்பாடல்களே. பாரதியார் எழுதியவையும் இசைப்பாடல்களே. முறையாய் இசை கற்றவர்களுக்கான கீர்த்தனைகளைத்தாம் பாரதியார் எழுதிச் சென்றார். அவர் வகுத்த பாதையில் பாரதிதாசனும் எண்ணற்ற இசைப் பாடல்களை எழுதியவர்தாம். அவர்களைப் போலவே மக்களிடையேயும் பாடல் இயற்றிப் பாடியவர்கள் இருந்திருக்கிறார்கள்.

  Music, the life giver

  இப்படியொரு பண்பாட்டினராக இருந்த மக்களிடம் அறிவியல் வளர்ச்சியால் ஒரு கூத்துக் கதையின் பாடல்கள் 'பதிவுநிகழி'களாக வந்தடைந்தன. அவையே நாம் பெற்ற முதல் திரைப்படப்பாடல்களாக இருக்க வேண்டும். ஒரு நாடகத்தைப் பதிவு செய்து மீண்டும் ஒளிப்பெருக்கிக் காட்ட முடிந்தது. அதுதான் திரைப்பட வளர்ச்சியின் முதற் கட்டம். நாம் பாடல்களின் மக்கள் என்பதால் நம்மிடம் வந்து சேர்ந்த அத்தகைய காட்சிகள் யாவும் பாடல் காட்சிகளே. ஒரு கூத்துக் கதையானது பாடல்களின் தொகுப்புதான்.

  Music, the life giver

  அந்தப் பாடல்கள் பதிவுநிகழிகளாக நம்மை வந்தடைந்ததும் வெற்றிடம் நீங்கியது. அஃதாவது நமக்கு விருப்பமான பாடல்கள் பதிவு செய்யப்பட்டு மீண்டும் மீண்டும் ஓட்டிக் கேட்டுக்கொள்ளத்தக்க கருவியோடு வந்துவிட்டன. அன்றிலிருந்து நம் சுவைப்பின் பெரும்பகுதியைப் பாடல்களுக்குக் கொடுத்துவிட்டோம். இசைத்தட்டுகள், ஒலிப்பேழைகள், குறுவட்டுகள், நினைவிக்கோல்கள், பதிசில்லுகள் என்று திரைப்பாடல்களின் பதிவேற்றமும் கேட்பும் எளிதாகின. நம் திரைப்பாடல் இரசனையும் ஈடுபாடும் சுவைப்பும் நிகரிலாத் தரத்தில் இருக்கின்றன. அதனால்தான் இராமநாதனும் சுதர்சனமும் இராமமூர்த்தியும் விசுவநாதனும் வெங்கடேஷும் இளையராஜாவும் இரகுமானும் இப்புலத்தில் தோன்றினார்கள். அந்த மரபு வளத்தால்தான் பின்னிருவர் உலக மேடைகளிலும் செம்மாந்து நிற்கின்றார்கள்.

  English summary
  Music is the life giver, even a country is ready to become slave for music.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X