»   »  திரையிசை நம்மைக் கவர்வது ஏன் ?

திரையிசை நம்மைக் கவர்வது ஏன் ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

- கவிஞர் மகுடேசுவரன்

உலகமெங்கும் திரைப்படங்கள் என்பவை காட்சிக் கட்டமைப்பில் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது இந்தியத் திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டன. அதிலும் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாடல்களுக்கே தலையாய இடம்.

தென்னிந்தியத் திரைப்படங்களின் பாடல்களை மொழிவாரியாகத் தனித்துக் காணவும் வேண்டியதில்லை. தமிழில் ஒரு பாடல் வெற்றி பெற்றால் அதே பாடல் மெட்டு தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று தென்னக மொழிகளில் ஒரு சுற்று வந்தே தீரும்.

Why film music attract us so much?

ஆந்திரத்திற்கு நீங்கள் சுற்றுப் பயணம் செய்தால் இளையராஜாவின் பெரும்பான்மையான பாடல்கள் தெலுங்கு வரிகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். தெலுங்குத் திரையுலகையும் இளையராஜா தம் இசையால் கட்டிப்போட்டு வைத்திருந்தார் என்பது முதற்காரணம். தெலுங்குத் திரைப்படக் கருத்தாளர் ஒருவரோடு உரையாடுகையில் சிரஞ்சீவியின் நாயக பிம்பம் இளையராஜாவின் இசையால் கட்டமைக்கப்பட்டதே என்று அடித்துக் கூறினார். அவருடைய கூற்று எனக்கு வியப்பேற்படுத்தியது.

தம் நூலொன்றில் மணிரத்னம் ஒரு கூற்றைக் கூறுகிறார்: "தெலுங்குப் படங்களுக்குத் தந்த மெட்டுகளையும் நமக்குத் தந்த மெட்டுகளையும் இளையராஜா மறந்துவிடுவதுண்டு. நாம் அதை நினைவூட்ட வேண்டியிருக்கும்...," என்கிறார். அந்நூலில் இளையராஜாவிடம் தாம் கண்ட குறையாக அவ்வொரு காரணத்தைத்தான் மணிரத்னத்தால் முன்வைக்க முடிந்தது. இதன் உட்பொருள், இளையராஜா தெலுங்குத் திரையுலகையும் தமிழ்த் திரையை வென்றதுபோல் தம் இசையால் மெய்ம்மயக்கி வைத்திருந்தார் என்பதே. ஆக, தென்னிந்தியத் திரைப்படங்களை ஆட்டுவித்த இசைக்கு அதன் தோற்றுவாயில் நல்ல ஒற்றுமையுண்டு.

இளையராஜாவுக்கு அப்பால் இசையமைத்தவர்களைக் கருதினாலும் அவர்களும் உடனுக்குடனே தமிழால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அம்சலேகா என்ற இசையமைப்பாளர் கன்னடத்தில் எண்பதுகளில் கொடிகட்டிப் பறந்தார். அவர் இசையமைத்த கன்னடப் பாடல்கள் இடம்பெற்ற படமான 'பருவராகம்' தமிழிலும் மொழிமாற்றம் பெற்று வெற்றி பெற்றது. அம்சலேகாவின் இசை மண்ணிசையின்மீது மயக்கங்கொண்ட பாரதிராஜாவையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கத்து. ஆக, கன்னடப்போக்கும் தமிழுக்கு வந்திறங்குவது புதிதில்லை. மலையாளத்தில் சிறப்பாக இசையமைத்துக்கொண்டிருந்த சலீல் சௌத்ரியின் இசை தமிழர்களாலும் கேட்கப்பட்டது. "மழைதருமோ இம்மேகம் ?" என்ற பாடலால் புகழ்பெற்ற ஷ்யாமும் தமிழில் வலம் வந்தவர்.

மலையாளத்தில் தனித்தவோர் இசைப்போக்கு நிலவியிருக்கிறது. இன்றைக்கும் கேரளத்தில் சுற்றி வருவோமென்றால் அங்கே செவியில் விழும் பாடல் நம்மிடமிருந்து சென்ற அடையாளம் எதையும் கொண்டிருக்காது. புதிது புதிதாக ஏதோ ஒரு பாடல் மென்மையாகச் செல்லும். விரட்டு தாளங்கள் இடம்பெற்ற மலையாளப் பாடல்களை நான் கேட்டதே இல்லை. மலையாளத் திரையுலகின் நாயகர்கள் ஆடிப் பாடுவதை விடவும் நடந்தபடியே பாடி முடித்துவிடுவார்கள். இதன்வழியே நாம் உணரத்தக்க செய்தி யாதெனில், மலையாளத் திரையுலகம் மெல்லிசைப் பாடல்கள் முழுமையாய் நிறைந்திருந்தது என்பதே. இது இசைத்துய்ப்பில் மேலும் நல்ல சுவைஞர்களைக் கொண்ட அந்நில இயல்பால் விளைந்தது என்பதை விளங்கிக்கொள்கிறோம்.

கன்னடத்திற்குச் சென்றால் இராஜ்குமாரின் பாடல்கள் நம்மூர் எம்ஜிஆர்-சிவாஜி பாடல்களைப்போல் கோலோச்சுகின்றன. இன்றைக்கும் பெங்களூரு மைசூருப் பகுதிகளில் எங்கே வண்டியை நிறுத்தி நின்றாலும் இராஜ்குமாரின் பாடல்களைக் கேட்கலாம். நாம் நம் பழைய பாடல்களிலிருந்து விலகி இளையராஜாவின் பாடல்களில் நின்றுகொண்டிருப்பதைப்போல கன்னடர்கள் இன்னும் வெளிவரவில்லை. அவர்களுடைய நாயகராக மறைந்த விஷ்ணுவர்த்தன் இன்றும் நினைவில் நிற்கின்றார். சீரங்கப்பட்டணத்தில் நான் கண்ட காட்சி - ஒரு மளிகைக் கடைச் சுவரின் பெரும்பகுதி விஷ்ணுவர்த்தனின் படங்களால் சட்டமிட்டு மாட்டப்பட்டிருந்தன. ஒரு நடிகரின் கலைத் தேனீக்களாய் இவர்கள் தம்மை முன்வைத்துக்கொள்வதில் ஏதோ ஒரு நிறைவைக் காண்கின்றனர். அந்நடிகர் வாயசைத்த ஒரு பாடல் அச்சுவைஞரின் உள்ளத்தில் வேறெதனாலும் தோற்றுவிக்க முடியாத நல்லெழுச்சியை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை. ஆக, தென்னிந்தியாவில் எங்கே திரிந்தாலும் அங்கே திரைப்படப் பாடல்களைக் கேட்டபடி வாழ்க்கை நகர்கிறது என்பது புரிகிறது. வட இந்தியாவிலும் இதே நிலைமைதான். இங்கே திரியும் வட இந்திய இளைஞர்கள் பலரும் சீனக் கைப்பேசியில் பாடல்களைக் கேட்டபடிதான் அலைகின்றனர்.

நமக்குள் பாடல்களுக்காக ஏங்கும் ஒரு மனம்தான் இயங்குகிறது. அது நம் பாடுகளைப் பாடல் வரியென்னும் தோணியைப் பற்றிக்கொண்டு கடக்க முயல்கிறது. உணர்ச்சிகளை முறைப்படுத்தி வழியச் செய்யும் அணைக்கட்டாக நாம் இசையைப் பற்றிக்கொள்கிறோம். நம்முடைய தொல்மனம் இசையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான நல்ல சான்று நம் இலக்கியங்கள் அனைத்தும் யாப்பமைப்பில் கட்டப்பட்ட செய்யுள்கள் என்பதே.

நாம் இயற்றியவை அனைத்தையும் இசைக்கலாம் என்று முன்பே கூறியிருந்தேன். எழுத்தறியாப் பாமரர் கூறும் சொற்றொடரிலேயே கூட ஓர் இசையொழுங்கு அமைந்திருப்பதைப் பார்க்கலாம். 'வந்தா என்ன போனா என்ன' என்று பேசுவதிலேகூட ஓர் இசைத்தன்மை மறைந்திருந்திருக்கிறது. நம்முடைய மொழி பண்மொழி என்பதுகூட நாம் இசை வேட்கையுடையவர்களாக இருப்பதற்குக் காரணம் எனலாம். அதனால்தான் இன்றைக்கும் நம்முடைய கலை ஈடுபாடுகள் பலவும் இசையை ஒட்டியதாக இருக்கின்றன. நம்முடைய திரைப்படங்களும் அவ்வாறே இசையை முதன்மையாய்க் கொண்டு அமைந்ததில் வியப்பில்லை. நம் திரைத்துறையில் இசையமைப்பாளர்களே தொடர்ந்து முத்தாய்ப்பான பணியைச் செய்யும் வாய்ப்பு பெற்றவர்கள் ஆகிறார்கள். நாமும் திரையிசைப் பாடல்களைத் தொடர்ந்து விரும்பிக் கேட்கிறோம். பன்முறை கேட்ட பாடலே என்றாலும் இன்னொரு முறை கேட்பது நமக்குத் திகட்டுவதே இல்லை.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Film music is inseparable in South Indian people's life, particularly Maestro Ilaiyaraaja's songs are playing a role like basic necessities food and water.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more