twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டம்மி குண்டுவெடிப்பில் சிக்கிய பாம் ரவி, மனைவி சீரியஸ்

    By Staff
    |

    சென்னை: சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி குண்டுகளைத் தயாரித்து வந்த பாம் ரவியின் வீட்டில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில்,காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உயிருக்குப் போராடி வருகின்றனர்.

    அவர்கள் தவிர மேலும் நான்கு பேரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேற்கு மாம்பலம் காந்தி வீதியைச் சேர்ந்த ரவி (வயது 42), சினிமா வட்டாரத்தில் பிரபலமானவர். இவரை பாம் ரவி என்றுதான் அழைப்பார்கள். சினிமா படப்பிடிப்புக்கு டம்மி வெடிகுண்டுகள் செய்வது இவர் தொழில்.

    மனைவி ரத்னாவுடன் வசித்த இவர் தனது வீட்டிலேயே ஏராளமான டம்மி வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்தாராம்.

    நேற்று இரவு 8 மணியளவில் பதுக்கி வைத்திருந்த டம்மி வெடிகுண்டுகள் திடீரென்று வெடித்தன. இதில் ரவியும் அவரது மனைவி ரத்னாவும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் வசித்து வந்த வீடு இடிந்து தரைமட்டமானது.

    அவர்களது வீட்டையொட்டி இருந்த ஒரு கடையும் நொறுங்கியது. ரவி வசித்து வந்த வீட்டின் மேல் மாடியும் பக்கத்தில் இருந்த இன்னொரு வீடும் இடிந்து தரைமட்டமானது. மொத்தம் 3 வீடுகளும், ஒரு கடையும் முற்றாக இடிந்து விழுந்தன.

    அதோடு அந்த காம்பவுண்டில் உள்ள மேலும் 10-க்கும் மேற்பட்ட வீடுகளும் சேதமடைந்தன. குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் மேற்கு மாம்பலம் காந்தி வீதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    குண்டு வெடிப்பில் காயமடைந்த ரவியும், அவரது மனைவி ரத்னாவும் உடனடியாக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதால் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அக்கம் பக்கத்து வீடுகளில் வசித்த லோகேஷ் (வயது 8), மகேஷ் (8), பாலாஜி (7), பத்மபிரியா (20) ஆகியோரும் காயம் அடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்தனர். லைசென்ஸ் இல்லாமல் டம்மி குண்டுகளை ரவி வைத்திருந்தது தெரிய வந்தது.

    வீட்டின் உரிமையாளர் மற்றும் அக்கம் பக்கத்தாரிடமும் விசாரித்து வருகிறார்கள்.

    சம்பவ இடத்தை சென்னை மேயர் மா.சுப்பிரமணியன், தியாகராயநகர் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன் ஆகியோரும் பார்வையிட்டனர்.

    ரவி- ரத்னா தம்பதிக்கு வருண் குமார் என்ற ஒரே மகன் உள்ளான். 7 வது படித்து வருகிறான் வருண் குமார்.

    ரவியும், ரத்னாவும் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த குண்டுவெடிப்பிலிருந்து வருண் குமார் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளான். சம்பவம் குறித்து அவன் கூறுகையில், நான் படுக்கை அறையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தேன். என் அம்மா சமையலறையில் சப்பாத்தி தயாரித்துக்கொண்டிருந்தார். அப்பா டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வீட்டுக்குள் இருந்து நெருப்புடன் புகை வந்ததை பார்த்து வெளியே வேகமாக ஓடினேன். சிறிது நேரத்தில் டம்மி வெடிகுண்டுகள் வெடித்து சிதறின. இதில் எங்கள் வீடு இடிந்து விழுந்தது. அதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தேன்.

    உடனே வீட்டுக்குள் ஓடிச்சென்று காயத்துடன் கீழே விழுந்து கிடந்த அப்பாவை வெளியே இழுத்து வந்தேன். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அம்மாவை வெளியே கொண்டு வந்தோம். நான் மட்டும் குண்டு வெடிப்பில் காயமின்றி தப்பியதற்கு என் தாய்-தந்தை செய்த புண்ணியம்தான் காரணம் என்றான்.

    ரவி வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் பாலு கூறுகையில், நான் வீட்டின் கீழ்தளத்தில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் இருந்தேன். குண்டு வெடித்த சமயத்தில் பிரிட்ஜ் சரிந்து கீழே விழுந்தது. இதைப் பார்த்ததும் வெளியே ஓடினேன். இல்லாவிட்டால் என் மீதும் கட்டிட இடிப்பாடுகள் விழுந்து நசுக்கி இருக்கும். பாம் ரவி டம்மி வெடிகுண்டு தயாரிப்பது எனக்கு தெரியும். டம்மி குண்டுதானே என்று நினைத்து அவருக்கு வீட்டை வாடகைக்கு கொடுத்தேன்.

    இப்போது வீடு முழுவதும் இடிந்து கிடப்பதை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது என்றார்.

    குண்டுவெடிப்பில் காயம் அடைந்த சிறுமி ராஜேஸ்வரியின் வளர்ப்பு தாய் விஜயா கூறும்போது, நான் ரவி வீட்டு முன்பு பூ வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் என்னுடன்தான் நின்று கொண்டிருந்தாள். பயங்கர சத்தத்தில் டம்மி வெடிகுண்டு வெடித்ததும் எனது மகள் பயந்து போனாள். பயத்தில் அவள் விவரம் தெரியாமல் குண்டு வெடித்த வீட்டுக்குள் ஓடினாள். அப்போது கட்டிட இடிபாட்டில் சிக்கி காயம் அடைந்தாள் என்றார்.

    இன்று சம்பவம் நடந்த வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது ரவி வீட்டில் இருந்து 2 கிலோ வெடிமருந்து, குழல் வெடிகுண்டுகள், டம்மி துப்பாக்கிகள், 8 காஸ் சிலிண்டர்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் இன்று அந்த வீட்டின் அருகே பொதுமக்கள் சென்று விடாமல் இருக்க கயிறு கட்டி உள்ளனர்.

    இன்று மாலை வீட்டை அதிகாரிகள் சோதனை செய்தபிறகு வீடு இடிக்கப்படுகிறது. குண்டு வெடிப்பில் விரிசல் அடைந்துள்ள 10 வீடுகளில் அதிகாரிகள் சோதனை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    பாம் ரவி 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். தொடக்கத்தில் மேற்கு மாம்பலத்தில் கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அப்போது சினிமா தொடர்புகள் ஏற்பட்டன. இதையடுத்து டம்மி குண்டு தயாரிப்பது குறித்து கற்றுக் கொண்டார்.

    அதில் கை தேர்ந்தவராக மாறியதால் தென்னிந்திய மொழிப் படங்கள் அனைத்திலும் பணியாற்றத் தொடங்கினார். இவரது மனைவி ரத்னா பெங்களூரைச் சேர்ந்தவர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X