»   »  செக் மோசடி வழக்கு: ஸ்ரீதேவிக்கு கோர்ட் கண்டிப்பு

செக் மோசடி வழக்கு: ஸ்ரீதேவிக்கு கோர்ட் கண்டிப்பு

Subscribe to Oneindia Tamil
Sridevi
மும்பை: செக் திரும்பி வந்த வழக்கில் நடிகை ஸ்ரீதேவி கண்டிப்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போட்டோ பிலிம் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களான மது குப்தா மற்றும் சுஷில் குப்தா ஆகிய இருவரும் ஸ்ரீதேவிக்கு கடன் கொடுத்திருந்தனர். இந்த கடன் தொகையை திருப்பிச் செலுத்த, கடந்த ஆண்டு இரு தவணைகளாக ரூ. 92 லட்சத்திற்கு ஒரு காசோலையும், ரூ. 8.41 லட்சத்திற்கு ஒரு காசோலையும் ஸ்ரீதேவி கொடுத்தார்.

ஆனால் இவை வங்கியிலிருந்து திரும்பி விட்டன. இதையடுத்து ஜூஹு காவல் நிலையத்தில் மது மற்றும் சுஷில் குப்தா இருவரும் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸார் ஸ்ரீதேவி மீது வழக்கு பதிவு செய்தனர்.

குர்லா நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு அவர் வராததால், ஸ்ரீதேவிக்கு நீதிமன்றம் ஜாமீனில் வரக் கூடிய பிரிவின் கீழ் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதை ரத்து செய்யக் கோரி செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகினார் ஸ்ரீதேவி.

இந்த மனுவை விசாரித்த செஷன்ஸ் நீதிமன்றம், குர்லா நீதிமன்றத்தை அணுகி பிடிவாரணட்டை ரத்து செய்யக் கோருமாறு கூறியது.

இதையடுத்து குர்லா நீதிமன்றத்தில் ஸ்ரீதேவி சார்பில் பிடிவாரண்ட்டை ரத்து செய்யுமாறும், நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறும் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி ஜக்தாப், மார்ச் 7ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் கண்டிப்பாக ஸ்ரீதேவி நேரில் ஆஜராக வேண்டும். வழக்கு குறித்து விளக்கம் தர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Please Wait while comments are loading...