twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் தயாரிப்பாளர் சங்கம்

    By Shankar
    |

    Video Piracy
    சினிமாவுக்கு பெண்கள் கூட்டமே சுத்தமாக வரவிடாமல் செய்தது தொலைக்காட்சி. குறிப்பாக பிற்பகல் மற்றும் மாலை நேரத்து மெகா தொடர்கள்.

    இதனால் தொலைகாட்சியோடு பெரும் மல்லுக்கட்டு நடத்தி முடியாமல் தோற்றுப் போனார்கள் தயாரிப்பாளர்கள். தொலைக்காட்சி குறித்து இவர்கள் யாரிடம் முறையிட முயன்றார்களோ, அவர்கள் அத்தனை பேருமே பெரிய தொலைக்காட்சி முதலாளிகளாகவும் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    வேறு வழியின்றி அதே டிவிகாரர்களிடம் சரணாகதி அடைந்தார்கள். இப்போது, சினிமாக்காரர்களின் பெரிய வருவாய் ஆதாரம் தொலைக்காட்சிதான்.

    விஞ்ஞானத்தின் வளர்ச்சியை தங்கள் சினிமாவுக்கு மட்டும் பயன்படுத்த விரும்பும் சினிமாக்காரர்கள், அதன் வேறு பரிமாணங்களை பார்க்க மறுத்து கண்களை மூடிக் கொள்கின்றனர். இதன் விளைவுதான் திருட்டு டிவிடிகளின் பெருக்கம்.

    இன்றைக்கு புதிய படங்களை உடனுக்குடன் பார்த்துவிட முடியும். அதுவும் தரமான நல்ல பிரிண்ட்களே திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கின்றன.

    இதைத் தடுக்க யாராலும் முடியாது என்பதுதான் இன்றைய யதார்த்தமாக உள்ளது.

    அரசு என்னென்னவோ நடவடிக்கை எடுப்பதாக போக்குக் காட்டியும், நாளுக்குநாள் திருட்டு டிவிடியின் தரம் கூடுகிறதே தவிர, டிவிடி விற்பனை குறைந்ததாக தெரியவில்லை. இந்த உண்மையை தயாரிப்பாளர்கள் இன்னும் கூட உணர்ந்ததாகவே தெரியவில்லை. திருட்டு டிவிடி ஒழிப்புக்கும் கூட அவர்கள் இன்னும் அரச மரத்தடி பஞ்சாயத்தைத்தான் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

    இந்த விஞ்ஞான வளர்ச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கம் அவர்களுக்கில்லை. நிலைமை கைமீறிப் போகும்போதுதான் குய்யோ முறையோ என கூப்பாடு போடுவது மட்டுமே இவர்கள் வழக்கம் என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் நிஜமாகி வருகிறது.

    சமீபத்தில் வெளியான மூன்று புதிய படங்களுமே திருட்டு டிவிடியில் நல்ல தரமுள்ள பிரிண்டுகளாக வந்து சக்கை போடு போடுகின்றன.

    போதாக்குறைக்கு வெளிநாடுகளில் இயங்கும் சில இணையதளங்களும் இந்தப் படங்களை உடனுக்குடன் வெளியிட்டுவிட்டன. குறிப்பாக வேலாயுதம் படம் வெளியாகும் ஒரு நாளைக்கு முன்பே இணையதளத்தில் வந்துவிட்டது.

    "இந்த விஞ்ஞான முன்னேற்றங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது. மாறாக அவற்றை தமக்கு சாதகமாக மாற்றிக் கொள்வது எப்படி என்பதில் தயாரிப்பாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். சங்கத்தில் உள்ளவர்கள் இதற்கு தீர்வு காண முயற்சிக்காமல் தேவையற்ற விஷயங்களை பெரிதுபடுத்தி வருகிறார்கள்,", என்றார் இன்றைக்கு முன்னணி தயாரிப்பாளராக உள்ள, திருட்டு டிவிடியால் பாதிக்கப்பட்ட படங்களில் ஒன்றைத் தயாரித்த முக்கிய பிரமுகர் ஒருவர்.

    தன் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேசிய அவர் கூறுகையில், "இனி இணையதளங்கள்தான் எதிர்காலம் என்றாகிவிட்டது. எனவே யார் யார் சட்டப்பூர்வமாக இந்தப் படங்களை வாங்கி வெளியிட விரும்புகிறார்களோ அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ஒளிபரப்பு உரிமையைத் தரலாம். டிவி ரைட்ஸ் போல இன்டர்நெட் ரைட்ஸும் கொடுத்துவிடலாம். இது வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள விஷயம்தான். நமக்கும் வருமானமாவது கிடைக்கும். அதைவிட்டுவிட்டு, சகட்டு மேனிக்கு எல்லாரிடமும் காசு கேட்டுக் கொண்டிருப்பது சங்கத்தினரின் அறியாமையை வெளிச்சம் போடுவதாக உள்ளது," என்றார்.

    English summary
    Tamil Cinema is facing its tough time due to the increasing video piracy. All the three new Diwali releases have already released in internet and DVD format. Leading producers are discussing to curb the piracy in future.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X