For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நடிகர் சங்க கண்டனக் கூட்டம்- நடிகர், நடிகைகள் பேச்சு

  By Staff
  |

  நடிகைகள் மீது அவதூறு கற்பித்து வெளியிட்ட செய்தியைக் கண்டித்து நடிகர் நடிகைகள் நேற்று நடத்திய கண்டனக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினர்.

  விபசார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை புவனேஸ்வரி போலீசில் அளித்த வாக்குமூலத்தில், 'பல பெரிய நடிகைகளும் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்" என்று கூறியிருப்பதாக தினமலர் நாளிதழ் படங்களுடன் செய்தி வெளியிட்டது.

  அந்த நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கும்படியும், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், அடுத்து எடுக்கப் போகும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கவும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் அறிவித்தபடி நேற்று மாலை 5.30 மணிக்கு கண்டனக் கூட்டம் தொடங்கியது.

  தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில் உள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் இந்தக் கண்டனக் கூட்டம் நடந்தது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது.

  நடிகர்களில் ரஜினி, விஜய்காந்த் மற்றும் தாமு தவிர, பேசிய அனைவருமே மிகவும் ஆவேசமாக பேசினர். தினமலர் தவிர பல்வேறு பத்திரிக்கைகளையும் அவர்கள் விமர்சித்துப் பேசினர். 'ராஸ்கல்ஸ்", 'பாஸ்டர்ட்ஸ்" போன்ற வார்த்தைகள் சரளமாக உபயோகப்படுத்தப்பட்டன.

  நடிகர், நடிகையரின் பேச்சிலிருந்து சில பகுதிகள்...

  விஜய்காந்த்:

  நடிகர் - நடிகைகளை அவதூறாக எழுதும்போக்கு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. பத்திரிகைகளுக்கு சமூகப் பொறுப்பு அதிகம் உள்ளது. அதை உணர்ந்து செயல்பட வேண்டும். இத்தகைய அவதூறுகளைத் தவிர்க்க வேண்டும்.

  காவல் துறை கட்டுப்பாடுகளுடன் செய்திகளை கொடுக்க வேண்டும். நான் நடிகர் சங்க உறுப்பினர். நடிகர் சங்கத்துக்கு கட்டுப்பட்டவன். நடிகர் சங்கம் சாதாரண அமைப்பு கிடையாது. கட்டுக்கோப்பானது.

  நடிகர் சங்கத்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

  விவேக்:

  எனக்கு கோபத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அந்த செய்தியை நினைத்தால் உடம்பு கொதிக்கிறது. எவன்டா அவன் எங்களைப் பத்தி தப்பா எழுதறவன்… டேய்… எங்களைப் பத்தியா மேட்டர் போடுறீங்க… இப்ப நான் போடறேன் மேட்டர்… உங்க ஆயா, அம்மா, மனைவி, அக்கா - தங்கச்சிகளை அனுப்புங்கடா… அவங்களை மார்ப்பிங்ல (Morphing) ஜட்டியோட நான் மாத்தி தர்றேன்… அதைப் போடு உன் பத்திரிகையில!

  மஞ்சுளா என்பவர் எத்தனை பெருமைக்குரிய நடிகை தெரியுமா உங்களுக்கு… கலைக்காக அந்தக் குடும்பம் செய்துள்ள சேவை கொஞ்சமல்ல. எம்ஜிஆர் - சிவாஜியுடன் நடித்த பெருமைக்கு சொந்தக்காரர் மஞ்சுளா. அவங்க குடும்ப பின்னணி தெரியுமா உங்களுக்கு… அவங்க சொந்தக்காரங்களுக்கு தெரிஞ்சா உங்களை பீஸ் பீஸாக்கிடுவாங்கடா… அவங்க மாப்பிள்ளை எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா… இந்த செய்தி அவருக்கு எவ்வளவு தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும்… இப்ப சொல்றேன்… இனி எனக்கு எந்த பத்திரிகைக்காரன் தயவும் தேவையில்லை. அதிலும் இந்த ...பய தினமலர் வேண்டவே வேண்டாம்….

  ஸ்ரீபிரியா:

  என்னால சரியா பேச முடியல. அழுகைதான் வருது. அதனால் எழுதிக் கொண்டு வந்ததைப் படித்து விடுகிறேன்.

  'ரஜினி வருவதாக பொய் சொல்லிவிட்டு என் கல்யாணத்துக்கு வரவில்லை என்ற கோபம் இருந்தது. ஆனால் இன்று எங்களுக்கு ஒரு அவமானம் என்றவுடன் அவர் வந்திருப்பது பெருமையாக இருக்கிறது. 35 ஆண்டுகள் சினிமாவில் இருக்கிறேன். என்னை பற்றி தவறாக எழுதியவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களாக இருக்க மாட்டார்கள்.

  நாங்களும் சாதாரண பெண்கள்தான். எங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. குழந்தைகள் இருக்கிறார்கள். எங்களின் பெயரை வெளியிட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். எங்கள் வயிற்றெரிச்சல் அவர்களை சும்மா விடாது. எங்கள் உணர்வுகளை அவர்கள் புரிந்துகொள்ளவேயில்லை. திரைக்குப் பின்னால் நாங்களும் எவ்வளவோ கஷ்டப்படுகிறோம். ஏன்… உங்க வீட்ல… உங்களைச் சுத்தி இதெல்லாம் நடக்கிறதேயில்லையா?

  விபச்சாரத்தில் ஈடுபடுவதாக என் பெயரை வெளியிட்டிருக்கிறார்கள். நான் இதற்கு பிறகும் மவுனமாக இருந்துவிட்டால் அது என் கனவருக்கும், பிள்ளைகளுக்கும் நான் செய்யும் துரோகம் ஆகிவிடும். நான் கலங்கிப்போவதை பார்த்து நீ ரொம்ப தைரியமான பொண்ணு... எதுக்கு இப்படி கலங்குற என்று கேட்கிறார்கள். நான் தைரியமான பொண்ணுதான். ஆனால் நானும் மனுஷிதானே.

  இது போன்று எங்களை அவமானப்படுத்தும் உங்களையெல்லாம்..."

  சத்யராஜ்:

  எங்க ஊர்ல அந்த பத்திரிகைக்குப் பேரே இழவுப் பத்திரிகைதான். நான் சொல்லாததையெல்லாம் சொன்னதா செய்தி போட்டு வீணா சண்டை மூட்டி விட்டுட்டானுங்க. இப்ப ஸ்ரீபிரியா இங்கிலீஷ்ல சொன்ன பாஸ்டர்ட்ஸ் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதை ஆதரிப்பவர்கள் எல்லோரும் கையத் தூக்குங்க… (எல்லோரும் ஆரவாரத்துடன் கையைத் தூக்கினார்கள்) இதையே நம்ம தீர்மானமா போட்டு அந்தப் பத்திரிகைக்கும் அனுப்பி வைய்ங்க!

  நளினி:

  “ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மா நான். என்னைப்பற்றி இப்படியெல்லாம் எழுதுறாங்களே… என் பிள்ளைகள் மனசு என்ன பாடுபடும்.

  கணவனை பிரிந்தும் தனியாக வாழ முடியும் என்று என் பிள்ளைகளை காப்பாற்றிக்கொண்டிருக்கிறேன். இப்படியெல்லாம் செய்வது நியாமா?

  இது இத்தோடு நிற்கிற பிரச்சனையில்லை. இந்த பிரச்சனையை நாங்க சும்மா விடப்போவதில்லை. நான் தைரியமான பொண்ணு. அதனாலதான் இவ்வளவு வேதனையிலும் தாங்கிக்கொண்டு போராடுகிறேன்… இந்த செய்தி எழுதினவன் மட்டும் கிடைச்சான்...

  நடிகை சீதா

  “நெனச்சு நெனச்சு ரொம்ப வேதனையாருக்கு. என்னால தாங்க முடியல. எங்களுக்கும் குடும்பம் இருக்கு. பொறுப்பு இருக்கு என்பது ஏன் புரியமாட்டேங்குது. எங்க மனச ஏன் புரிஞ்சுக்கல. என்னால பேச முடியல.." என்றுசொல்லி கண்ணீர் விட்டார்.

  ஆர்.கே.செல்வமணி:

  “ஆந்திராவில் இப்படியெல்லாம் ஒரு கிசுகிசு செய்தி, அவதூறு செய்தி கூடப் பார்க்க முடியாது. அப்படி யாராவது எழுதினால் மீண்டும் பேனா பிடிக்கவே முடியாது… என் மனைவி இந்த பத்திரிகைக்கார …..களால் எவ்வளவு இம்சைக்கு உள்ளானார் தெரியுமா.

  சரத்குமார்:

  "செல்வமணி ஒரு விஷயத்தை மறந்துவிட்டார். ரோஜாவுக்கு எய்ட்ஸ், எனக்கு எய்ட்ஸ் என்றெல்லாம் செய்தி போட்டார்கள். அதனால் எத்தனை பாதிப்பு எங்களுக்கு தெரியுமா? தினமலர் அவதூறு செய்தி வெளியானதும் நடிகை ஸ்ரீபிரியாவும் சீதாவும் தற்கொலைக்கு முயன்றார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்… ஒருவேளை இந்தப் பட்டியலில் என் மனைவி ராதிகா பெயர் இடம்பெற்றிருந்தால்… அய்யோ… நினைக்கவே முடியவில்லை. அவரை இந்நேரம் உயிரோடே பார்த்திருக்க முடியாது (சொல்லி விட்டு அழுதார்).

  இந்தப் பிரச்சினைகள் வராமல் தடுக்க விரைவில் நாங்களே ஒரு புதிய பத்திரிகை ஆரம்பிக்கப் போகிறோம். இதுதவிர, இம்மாதிரி அவதூறுகளைச் சந்திக்கவென்றே ஒரு வக்கீலை சங்கத்தில் நியமிக்கவும் முடிவு செய்துள்ளோம்...!

  சூர்யா:

  "சமுதாயத்துக்கு வழிகாட்டியாக பத்திரிக்கைகள் இருக்க வேண்டும். வயிற்றை கழுவுவதற்காக இப்படி அவதூறு எழுதுகிறார்கள். இவர்களை சும்மா விடக்கூடாது. நடிகர் சங்கம் சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க குழு அமைக்க வேண்டும். அதற்கான செலவை நான் ஏற்கிறேன். அந்த குழுவைக் கொண்டு அவதூறு எழுதுபவர்களை நசுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்படியொரு கூட்டம் நடக்கக் கூடாது. அந்த அளவுக்கு நடவடிக்கை இருக்க வேண்டும்...

  அருண் விஜய்:

  “எனக்கு வந்த ஆத்திரத்துக்கு அந்த செய்தியை எழுதிய ரிப்போர்ட்டர் மற்றும் அலுவலகத்தில் உள்ள நான்கு பேரையாவது அடித்து துவம்சம் செய்து இழுத்து வந்து எங்கம்மா (மஞ்சுளா) காலடியில் போட்டிருப்பேன். ஆனால் சங்கம் என்னைத் தடுத்து விட்டது..."

  தாமு:

  "நண்பர்களே… ஆவேசம் வேண்டாம். பத்திரிகைகள் தயவு நமக்குத் தேவை. நான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வரக் காரணம் பத்திரிகைகள்தான். நான் மட்டுமல்ல… இன்னும் பல கலைஞர்களை பத்திரிகைகள்தான் உயிரோடு வைத்திருக்கின்றன. அவர்களைத் திட்ட வேண்டிய அவசியமில்லை. எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் உண்மை அதுதான். பத்திரிகை நண்பர்களுக்கும் சினிமாவின் தயவு தேவையாக இருக்கிறது. எனவே முடிந்தவரை இணக்கமாகப் போக வேண்டும். ஆதாரமில்லாத அவதூறுகளைத் தவிர்க்கலாமே" என்றார்.

  இயக்குநர் விக்ரமன், லதா, விஜயகுமார் என நிறையப் பேர் பேசினார்கள். கவுண்டமணி, ஷர்மிளி, ஷகிலா போன்றோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

  கமல்ஹாசனைத் தவிர விஜய், அஜீத், நமீதா போன்ற முன்னணி நடிகர் - நடிகைகளும் இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

  கூட்டத்தின் முடிவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தினமலருக்கு இனி ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்பது அதில் ஒன்று.

  தினமலர் குடும்ப நிகழ்ச்சிகள், அவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எதிலும் சினிமாக்காரர்கள் பங்கேற்பதில்லை, தவறாக விமர்சிக்கப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் தனித்தனியாக மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வது, பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவிடம் புகார் செய்து அந்த நாளிதழையே தடுப்பது போன்ற தீர்மானங்களை நிறைவேற்றினர்.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X