»   »  சமாதானம் பேசலாம் - சரத்

சமாதானம் பேசலாம் - சரத்

Subscribe to Oneindia Tamil

தினமலர் மற்றும் பத்திரிகையாளர் சங்கங்கள் தரப்பிலிருந்து யாராவது சமரசம் பேச வந்தால் சமாதானமாய் போவது குறித்து முடிவெடுப்போம் என நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

நடிகைகள் குறித்து தவறாக எழுதி ஆபாசமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டிய நடிகர், நடிகைகள், இப்போது அவர்களே ஆபாசமாக பேசி புதிய சிக்கலை தாங்களாகவே இழுத்துக் கொண்டுள்ளனர்.

விபச்சாரத்தில் ஈடுபடும் நடிகைகள் குறித்து தினமலர் செய்தி வெளியிட்ட பிறகு நடிகர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் கண்டனக் கூட்டத்தில் முக்கிய நடிகர் -நடிகைகள் ஆபாசமாகப் பேசியது போன்றவை இப்போது அவர்களுக்கே எதிராய் திரும்ப ஆரம்பித்துள்ளது.

விவேக், ஸ்ரீபிரியா, சேரன், சத்யராஜ், செல்வமணி போன்றோர் தரக்குறைவாக, படு ஆபாசமான வார்த்தைகளால் ஒட்டு மொத்த பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரே கேவலமாகப் பேசினர்.

நடிகர் - நடிகைகள் பற்றிய செய்தியால் நாள் முழுக்க வருத்தப்பட்டதாகச் சொல்லும் ரஜினிகாந்தின் முன்னிலையில்தான் இத்தனை ஆபாசப் பேச்சுக்களும் மேடையில் அரங்கேறின.

அதை விட உச்சமாக பாஸ்டர்ட் என்று நாம் இங்கே சொல்லித் திட்டியுள்ளோம். அதை எத்தனை பேர் ஆதரிக்கிறீர்கள் கையை உயர்த்துங்கள் என்று சத்யராஜ் கூறியபோது, ரஜினி உள்பட அனைவருமே கையை தூக்கினராம்.

கூட்டம் முடிந்த பிறகு, அந்த நிகழ்ச்சியின் மொத்த வீடியோவும் அனைத்துப் பத்திரிகையாளர் அமைப்புகளின் கைகளுக்கும் போய் விட்டது.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகள் பேசிய விதம், பயன்படுத்திய வார்த்தைகள் அப்பட்டமான குற்றம் என்பதால் உடனடியாக சட்ட நடவடிக்கை கோரத் துவங்கியுள்ளனர் பத்திரிகை சங்கத்தினர்.

விவேக், ஸ்ரீபிரியா, சேரன் மற்றும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்களைக் கைது செய்யக் கோரி பத்திரிகையாளர்கள் புகார் மனு தரத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், சமாதான முயற்சிகளுக்கு தான் தயாராக இருப்பதாக சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர், பெரிய அளவில் தங்கள் பத்திரிகையில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அந்தப் பத்திரிகையின் உரிமையாளர், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் அந்த மன்னிப்பைக் கோர வேண்டும் என்றும் முதல்வரிடம் தெரிவித்துள்ளதாகவும், இதுகுறித்து தினமலர் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகளிடமிருந்து யாராவது பேச வந்தால் வரவேற்போம் என்றும் சரத்குமார் கூறியுள்ளார்.

ஆனால் பத்திரிகையாளர் அமைப்புகள் இதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

இதற்கிடையே சினிமா பத்திரிகையாளர்களும் அனைத்து சினிமா நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்பது குறித்து ஆலோசித்து வருகின்றனர். இதனால் ஆடிப்போயுள்ள நடிகர்கள், சமாதான முயற்சிக்கு மீண்டும் முதல்வர் கருணாநிதியை அணுக முயற்சித்து வருகின்றனர்.

Please Wait while comments are loading...