twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'பெரிய படங்களை எடுக்காமல் நிறுத்திவிடுவதுதானே!' - ஒரு புலம்பலும் கோபமும்

    By Shankar
    |

    தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் முணுமுணுப்பு, 'சிறிய படங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. பெரிய படங்கள் சிறிய படங்களை நசுக்குகின்றன...' என்பதுதான்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றி பேசத் தவறுவதில்லை.

    சமீபத்தில் நடந்த 'படம் பார்த்து கதை சொல்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் இதுகுறித்து ஒப்பாரியே வைத்துவிட்டார். அவ்வளவு புலம்பல்!

    "இன்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு, தியேட்டர் கிடைக்காமல் தவிக்கின்றன. பெரிய பெரிய படங்களை ஒப்பந்தம் செய்யும் தியேட்டர் உரிமையாளர்கள், சிறிய படங்களை கண்டுகொள்வதில்லை. படத்தை ரிலீஸ் செய்ய முடியாத பரிதாப நிலையில், சிறு பட தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

    என் முதல் படமான பாரதி கண்ணம்மா'வுக்கு பெரிய தியேட்டர் கிடைக்காமல், நாகேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டு, 150 நாட்களுக்கு மேல் ஓடியது. பெரிய படங்கள் என்னும் யானைகள் மிதித்துக்கொண்டு ஓடுவதால், சிறு பட தயாரிப்பாளர்கள் படுகாயங்களுடன் காட்சியளிக்கிறார்கள்..," என்றெல்லாம் பேசினார்.

    தயாரிப்பாளர் சங்கத் தலைவரான எஸ் ஏ சந்திரசேகரன், "ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்றவர்களை வைத்து படம் பண்ணுவது எளிது. பூஜை போட்டாலே நான், நீ என்று பைனான்ஸ் தருவார்கள். தியேட்டர்காரர்களும் படத்தை திரையிட ஆர்வம் காட்டுவார்கள். சிறிய படங்களை தயாரிப்பதுதான் கஷ்டம். யாரும் பைனான்ஸ் தர மாட்டார்கள். வினியோகஸ்தர்கள் படம் பார்க்க இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று இழுத்தடிப்பார்கள்," என்றார்.

    இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பிரபல இயக்குநரிடம், இதுகுறித்து கருத்து கேட்க, அவர் பொரிந்து தள்ளினார் இப்படி:

    "இவர்கள் சுயநினைவோடுதான் பேசுகிறார்களா... புரியவில்லை. இங்குள்ள எல்லோருமே பெரிதாக படம் எடுக்க வேண்டும், எக்கச்சக்கமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களே. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு அமையவில்லை.

    இப்போது இவ்வளவு பேசும் சேரன், தேசிய கீதம், வெற்றிக் கொடிகட்டு என்றெல்லாம் எடுத்த போது, தன்னை சிறு முதலீட்டுப் பட இயக்குநர் என்றா கூறிக் கொண்டார். அன்றைக்கு அவர் ஒரு பெரிய பட்ஜெட் பட இயக்குநர்தான். நான்கு படங்கள் விழுந்து, பீல்ட் அவுட் என்றதும் இவருக்கு சின்ன பட்ஜெட் நினைப்பு வந்துவிட்டதுபோல. ஏன், ரஜினி படமோ, விஜய் படமோ இயக்கும் வாய்ப்பு வந்தால் இவர் மாட்டேன் என்று சொல்வாரா அல்லது சின்ன பட்ஜெட்டில் இயக்குவேன் என்று அடம் பிடிப்பாரா?

    அது பெரிய பட்ஜெட்டோ சின்ன பட்ஜெட்டோ நல்ல கதை, திறமையான இயக்கம், கச்சிதமான நடிப்பு என வரும் படங்கள் ஒருபோதும் தோல்வியைத் தழுவியதில்லை. இதை இயக்குநர் ஷங்கர் நிரூபித்தார். பெரிய பட்ஜெட்டில் அடுத்தவர்களுக்காக படமெடுத்தவர், தன் சொந்தத் தயாரிப்புகளை சின்ன பட்ஜெட்டில் எடுத்து ஜெயித்தார்.

    களவாணி என்ற படம் வந்தபோது கண்டு கொள்ள ஆளில்லை. ஆனால் அந்தப் படத்தின் தரம் அதனை பெரிய படமாக்கவில்லையா?

    அப்படியானால், பெரிய பட்ஜெட் படமே எடுக்காமல் விட்டுவிடுவதுதானே... சின்னச் சின்னதாய் மொக்கைப் படமெடுத்து ரசிகர்களை தியேட்டர் பக்கமே வரவிடாமல் விரட்டுவதுதானே... ஒரு இயக்குநர் தன் படைப்பை தரமாகத் தருவதில் மட்டும்தான் கவனமாக இருக்க வேண்டும். பட்ஜெட் பற்றி புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.

    இதே சேரன் எத்தனை தயாரிப்பாளர்களை போண்டியாக்கினார்... தற்கொலை செய்யும் வரை போனார் ஒரு தயாரிப்பாளர். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி, தான் எடுக்கும் படங்களை பெரிய வெற்றிப் படங்களாக்குவதுதானே!

    சினிமாவில் தோற்றவர்கள்தான் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஜெயிக்கும் வேகத்தில் உள்ளவர்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். சேரன்களுக்கு இது என்றைக்கு புரியப் போகிறதோ...," என்றார்.

    English summary
    Nowadays we often hear complaints on big budget films. Directors like Cheran complained that the big budget films destroyed small budget films. But a popular director denied this and slammed Cheran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X