twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முரளி உடல் தகனம் செய்யப்பட்டது

    By Sudha
    |

    Actor Murali
    சென்னை: மறைந்த நடிகர் முரளியின் உடல் இன்று சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நெப்போலியன் மற்றும் திரையுலகினர் இன்று அஞ்சலி செலுத்தினர்.

    மாரடைப்பு காரணமாக நேற்று காலை நடிகர் முரளி அகால மரணமடைந்தார். திரையுலகை பெரும் அதிர்ச்சியிலும்,சோகத்திலும் ஆழ்த்தியுள்ள இந்த மரணம் அவரது குடும்பத்தை நிலைகுலைய வைத்துள்ளது.

    வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் முரளியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், வாகை சந்திரசேகர், ராதாரவி, சிவக்குமார், பார்த்திபன், சூர்யா, ஆனந்த்பாபு, அர்ஜூன்,கார்த்திக், சுரேஷ், மோகன், பிரசன்னா, ஷாம், கரண், சரவணன், விவேக், நாசர், ராஜேஷ், இளவரசு, சின்னி ஜெயந்த்,தியாகு, தலைவாசல் விஜய், நடிகைகள் குயிலி, ராதிகா, பாத்திமா பாபு, சத்யப்பிரியா, ரேவதி, சினேகா உள்ளிட்டோரும்,

    இயக்குநர்கள் சேரன், அகத்தியன், லிங்குச்சாமி, ஹரி, பாலாஜி சக்திவேல், தருண் கோபி, களஞ்சியம், விக்கிரமன் உள்ளிட்டோரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம.நாராயணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.

    நடிகர் கமல்ஹாசன் மன்மதன் அம்பு படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் இருப்பதால் அவர் நேரில் வர முடியவில்லை. இதனால் தொலைபேசி மூலம் முரளியின் மகன் அதர்வாவிடம் பேசி இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.

    மு.க.ஸ்டாலின் அஞ்சலி:

    இன்று காலை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் முரளி வீட்டுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.அவருடன் மத்திய இணை அமைச்சர் நெப்போலியனும் உடன் சென்றிருந்தார்.

    சரத்குமார், ராதாரவி, நடிகர்கள் சிவக்குமார், விக்ரம், வடிவேலு, அலெக்ஸ், இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, தயாரிப்பாளர்கள் காஜா மைதீன், கே.எஸ். சீனிவாசன், சித்ரா லட்சுமணன், எச். முரளி. நடிகைகள் கோவைசரளா, ரேகா ஆகியோரும் இன்று அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் இறுதிச் சடங்குகள் நடந்தன. அதன்பின்னர் முரளியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வேனில் ஏற்றப்பட்டது. பிறகு இறுதி ஊர்வலம் தொடங்கியது. அப்போது துக்கம் தாங்க முடியாமல் முரளியின் மனைவி ஷோபா, மகள் காவ்யா, மகன்கள் அதர்வா, ஆகாஷ் ஆகியோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    முரளியின் உடல் அடங்கி டிரக் முதலில் செல்ல நடிகர், நடிகையர்ஏறிக் கொண்ட இன்னொரு டிரக் பின்னால் சென்றது. ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பொதுமக்களும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

    பெசன்ட் நகர் மின் மயானத்தை அடைந்ததும் அதர்வா இறுதிச் சடங்குளைச் செய்து தந்தையின் சிதைக்கு தீ மூட்டினார். பின்னர் மின்சார டிரேயில் வைத்து முரளியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

    மயங்கி விழுந்த தங்கர் பச்சான்:

    முன்னதாக நேற்று முரளிக்கு அஞ்சலி செலுத்த வந்த இயக்குநர் தங்கர்பச்சான் மயக்கமடைந்தார். தங்கர், முரளியின் மிகநெருங்கிய நண்பர் ஆவார். நேற்று இறுதி அஞ்சலி செலுத்த அவர் வந்தபோது துக்கம் தாங்காமல் கதறி அழுதார். இதனால் அந்த இடமே உருக்கமாகிப் போனது. துக்கம் அதிகரித்து கதறி அழுததால் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை வெளியே அழைத்து வந்து அமர வைத்து மயக்கம் தெளிவித்தனர்.

    படப்பிடிப்புகள் ரத்து:

    முரளியின் இறுதிச் சடங்கையொட்டி இன்று முழுவதும் தமிழ்த் திரைப்பட படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக தயாரிப்பாளர் கவுன்சில் அறிவித்திருந்தது. அதன்படி படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை.

    தென்னிந்திய நடிகர் சங்கம் முரளியின் மறைவு குறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில்,

    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவருமான நடிகர் முரளி எதிர்பாராதவிதமாக இயற்கை எய்தியது குறித்து தமிழ் திரைப்பட உலகம் மீளா துயரத்தில் மூழ்கியுள்ளது.

    ஈடுசெய்ய முடியாத இழப்பினால் வாடும் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ரசிகர்கள் ஆகியோரின் வேதனையில் தென்னிந்திய நடிகர் சங்கம் பங்குகொண்டு, கனத்த நெஞ்சத்துடன் எங்கள் அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X