For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாட்டு இயந்திரம் பாலு.. எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்த சுவாரஸ்யமான 11 அரிய தகவல்கள்!

  |

  சென்னை: எந்த ஒரு பின்னணி பாடகராலும் நடத்திக் காட்ட முடியாத சாதனையாக ஒரே நாளில் 21 பாடல்களை பதிவு செய்து சாதனை படைத்த எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்னும் பாட்டு இயந்திரம் இன்று நம்முடன் இல்லை.

  SPB-க்காக 2 மாதங்கள் காத்திருந்த MGR |Tamil Filmibeat

  எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமின்றி, இசை ரசிகர்களையும் சோகக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

  ஏகப்பட்ட சாதனைகளை தனது வாழ்நாளில் செய்து அசத்திய இசை அரசர் பற்றிய 11 சுவாரஸ்ய தகவல்களை இங்கே காண்போம்.

  எஸ்பிபியின் உடலை பார்த்து கதறி அழுத பாடகர் மனோ.. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் பிரபலங்கள் அஞ்சலி!

  படிப்பில் ஆர்வம்

  படிப்பில் ஆர்வம்

  அனந்தபூர் ஜே.என்.டி.யூ கல்லூரியில் பொறியியல் படிப்பை படிக்க ஆயத்தமானவர், ஏகப்பட்ட பாடல்கள் வாய்ப்புகள் வரவே, தனக்கு மிகவும் பிடித்தமான பொறியியல் படிப்பை தொடரமுடியாமல் இசை உலகிற்கு வந்தார். எங்கே வரவேண்டுமோ, எந்த கிரவுண்டில் அவர் சிக்ஸர் அடிக்கப் போகிறாரோ காலம் தன் கடமையை செய்து அவரை அழைத்து வந்தது. இசைப் போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு எஸ்.பி. கோதண்டபாணி இசை குருவானார்.

  இளையராஜா இசை குழுவின் தலைவர்

  இளையராஜா இசை குழுவின் தலைவர்

  எஸ்.பி. பாலசுப்ரமணியம் தலைவராக செயல்பட்ட இசைக் குழுவில் இளையராஜா கிட்டார் வாசிப்பாளராக இருந்தது மறக்க முடியாத தருணங்கள். 1966ம் ஆண்டு வரை இளையராஜாவுடன் ஏகப்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்திய எஸ்.பி. பாலசுப்ரமணியம் தெலுங்கில் ஸ்ரீ மரியாத ராமன்னா படத்திற்கு பாடல் பாட அவரது குருவான எஸ்.பி. கோதண்டபாணி அறிமுகப்படுத்தினார்.

  டி.எம்.எஸ்., பிபி ஸ்ரீனிவாஸுக்கு உடனடி மாற்று

  டி.எம்.எஸ்., பிபி ஸ்ரீனிவாஸுக்கு உடனடி மாற்று

  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ஆயிரம் நிலவே வா பாடல் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பழம்பெரும் பாடகர்களான டி.எம். சவுந்தர்ராஜன் மற்றும் பிபி ஸ்ரீனிவாஸ் ஆகியோரது குரலால் மயங்கி இருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உடனடி மாற்றாக எஸ்.பி.பி மாறியது குறிப்பிடத்தக்கது.

  மாயக் கூட்டணி

  மாயக் கூட்டணி

  இசையமைப்பாளராக இளையராஜா மாறிய பின்னர், அவரது இசையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஏகப்பட்ட பாடல்களை பாடியுள்ளார். "பாடு நிலாவே" என்ற பாடல் வரிகளை "பாடும் நிலாவே" என மாற்றி என்றென்றும் "பாடும் நிலா பாலு" என ரசிகர்கள் இதயங்களில் இருக்க வைத்த பெருமை இளையராஜாவையே சேரும். தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு மொழியிலும் இளையராஜா இசையில் பாடிய எஸ்.பி.பி., இரு தேசிய விருதுகளை இளையராஜா இசையில் பெற்றது மறக்க முடியாத ஒன்று.

  பாலசந்தர் பிடிவாதம்

  பாலசந்தர் பிடிவாதம்

  தெலுங்கில் பாலசந்தர் இயக்கத்தில் ஹிட்டான மரோசரித்ரா படத்தை பாலிவுட்டில் இயக்கினார் பாலசந்தர். கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த ஏக் தூஜே கே லியே படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களையும் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான் பாட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். அந்த பிடிவாதம் தான் அந்த படத்தின் தேரே மேரே பீச்மெயின் பாடலுக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.

  எஸ்.பி.பியும் ரஹ்மானும்

  எஸ்.பி.பியும் ரஹ்மானும்

  ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அந்த படத்திற்காக காதல் ரோஜாவே பாடலை பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை தொடர்ந்து தனது படங்களில் பாட வைத்தார் ஏ.ஆர். ரஹ்மான். எந்திரன் படத்தின் புதிய மனிதா பாடலுக்காக, 7 வித்தியாசமான குரல் டோன்களை பயன்படுத்தி எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடியதாக ரஹ்மான் வியந்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

  ஆசிட் டெஸ்ட்

  ஆசிட் டெஸ்ட்

  சிறு வயதில் இருந்தே இசையை முறையாக கற்றவர் கிடையாது எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்நிலையில், தெலுங்கில் வெளியான சங்கராபரணம் படத்தின் பாடல்களை பாட கே.ஜே. யேசுதாஸ் மற்றும் பால முரளி கிருஷ்ணாவை விட்டு விட்டு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தை தேர்வு செய்தார் இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன். அந்த படம் தனக்கு ஒரு ஆசிட் டெஸ்ட்டாகவே அமைந்தது என எஸ்.பி.பி பல பேட்டிகளில் கூறியுள்ளார். அந்த படத்திற்காக பாட வேண்டும் என அவர் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சி தேசிய விருதை வெல்லும் அளவுக்கு இசை அன்னை அவருக்கு கர்நாடக இசை திறனையும் வாரி வழங்கி விட்டார் என்றே சொல்ல வெண்டும்.

  பாட்டு இயந்திரம்

  பாட்டு இயந்திரம்

  உலகில் எந்தவொரு பாடகரும் செய்ய இயலாத சாதனையாக 12 மணி நேரத்தில் 21 பாடல்களை கன்னட இசையமைப்பாளர் உபேந்திர குமார் இசையில் பாடி இசை உலகையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தமிழில் ஒரே நாளில் 19 பாடல்களையும், இந்தியில் ஒரே நாளில் 16 பாடல்களையும் பாடி அசத்தியது வரலாறு என்று தான் சொல்ல வேண்டும்.

  கின்னஸ் சாதனை

  கின்னஸ் சாதனை

  ஒரு நாளில் சராசரியாக 3 பாடல்கள் வீதம், ஒரு வருடத்தில் 930 பாடல்கள் என பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் 16 இந்திய மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். இசையோடு தான் அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் கடந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

  இசையமைப்பாளர்

  இசையமைப்பாளர்

  பின்னணி பாடகர், நடிகர் என்பதை எல்லாம் தாண்டி எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளராகவும் 46 படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது ஆச்சர்யத்தின் உச்சம். படமாட்டி சந்தியாராகம், துருப்பு வெள்ளே ரெயிலு உள்ளிட்ட படங்களின் இசை பெரும் பாராட்டுக்களை பெற்றன.

  கமல், ரஜினிக்கு வாய்ஸ்

  கமல், ரஜினிக்கு வாய்ஸ்

  இவற்றுக்கெல்லாம் மேலாக, கமல், ரஜினிகாந்த், சல்மான் கான், மோகன், கிரிஷ் கர்நாட், ஜெமினி கணேசன், கார்த்திக், ரகுவரன் மற்றும் சில நடிகர்களுக்கு டப்பிங் கலைஞராகவும் குரல் கொடுத்து இருக்கிறார் எஸ்.பி. பாலசுப்ரமணியம் என்பது பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய விஷயம். தெலுங்கில் டப் செய்யப்பட்ட தசாவதாரம் படத்திற்கு கமலின் 7 கதாபாத்திரங்களுக்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார்.

  English summary
  SP Balasubramanyam is a gifted singer who has got that power of mesmerizing the audience with his magical voice texture.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X