twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தை மார்க்கெட்டிங் செய்யும் எம்பிஏ மாணவர்கள்!!

    By Shankar
    |

    பெரிய நிறுவனங்கள் அடிக்கடி புதுப்புது பொருட்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்கின்றன. அப்போது அதை மக்களிடம் கொண்டுசெல்ல மார்க்கெட்டிங் நிபுணர்கள் பலர் மூளையைக் கசக்கி யோசனைகளைக் கொட்டுகிறார்கள். ஒவ்வொரு திரைப்படமும் ரிலீஸ் ஆகும்போதும் இப்படித்தான் யோசித்து மார்கெட்டிங் செய்ய வேண்டியிருக்கிறது.

    ஆனால் சினிமா தொழிலும் நிர்வாகவியலும் இதுவரை இணைந்ததில்லை.

    ஊடகத்துறையில் புதிய முத்திரை பதிக்க களம் இறங்கியிருக்கும் 'மின்வெளி மீடியா ஒர்க்ஸ்' நிறுவனம் 'கிருஷ்ணவேணி பஞ்சாலை" திரைப்படத்தைத் தயாரிக்கிறது.

    பஞ்சாலைத் தொழில் சார்ந்த வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடக்கின்றன.

    தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதல்முறையாக, இந்தப் படத்தை வெளியிடும்போது எம்.பி.ஏ. மாணவர்களைக் கொண்டு மார்க்கெட்டிங் யுத்திகளைப் பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

    இதற்கான பயிற்சியை மாணவர்கள் பெறுவதற்காக செப்டம்பர் 7 மற்றும் 8 ஆகிய இரண்டு நாட்கள் சென்னையில் கருத்தரங்கு நடைபெற்றது. தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பி.ஏ. மாணவர்கள் வந்திருந்தனர்.

    முதல் நிகழ்வாக, ஒன்லி சக்ஸஸ் நிறுவனத் தலைவர் வித்யாசாகர் மற்றும் சக்தி அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி தந்தனர்.

    அடுத்து 'மின்வெளி மீடியா ஒர்க்ஸ்" நிறுவனத் தலைவரும், 'கிருஷ்ணவேணி பஞ்சாலை" திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநருமான தனபால் பத்மநாபன் முன்னிலையில் நடைபெற்ற அமர்வில் பிரபல திரைப்பட இயக்குநர் பாலுமகேந்திரா, சட்டமன்ற உறுப்பினரும் மாஃபா நிறுவனருமான பாண்டியராஜன், ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் சந்திரமோகன் பாணி, 'ஸ்டுடியோ கிரீன்" தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த பிரபு ஆகியோர் பேசினர்.

    ''இன்றைய சூழலில் நல்ல படங்களையும், குறைந்த பட்ஜெட் திரைப்படங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல இதுபோன்ற இளம் ரத்தங்களும் புதிய சிந்தனையும் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், திரையுலகின் பல்வேறு சாதனையாளர்களோடு பழகும் வாய்ப்பை இந்தப் பயிற்சி மாணவர்களுக்குக் கொடுக்கும்"" என்றார் தனபால் பத்மநாபன்.

    'மாஃபா' பாண்டியராஜன்

    ''தற்போது திரைப்படத் துறையில் ரூ. 70000 கோடி வரை முதலீடு செய்யப்பட்டு வருகிறது. வரும் காலங்களில் இது ரூ. 2 லட்சம் கோடியாக உயரும். இந்தத் துறையில் எதிர்காலத்தில் உள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ள இந்தப் பயிற்சி உதவும்"" என்றார் மாஃபா பாண்டியராஜன்.

    ரிலையன்ஸ் சி.இ.ஓ. சந்திரசேகர் பாணி, ''மிகவும் வாய்ப்புள்ள துறையில் நீங்கள் அடியெடுத்து வைத்துள்ளீர்கள். தரமான படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். மாணவர்களை வைத்து திரைப்படத்தை சந்தைப்படுத்துவது புதிய முயற்சி. தனபால் பத்மநாபனை இதற்காக பாராட்ட வேண்டும்"" என்றார்.

    'ஸ்டுடியோ க்ரீன்" பிரபு, ''கிருஷ்ணவேணி பஞ்சாலை" படத்தின் பாடல்களைக் கேட்டேன். சிறப்பாக வந்திருக்கிறது. படமும் சிறப்பாக வந்திருக்கும் என்று இதன்மூலம் தெரிந்துகொண்டேன்"" என்றார்.

    பாலுமகேந்திரா

    இந்த அமர்வின் முத்தாய்ப்பாக இயக்குநர் பாலுமகேந்திரா பேச்சு அமைந்தது. ''வாழ்க்கையிலிருந்து, மக்களிடமிருந்து, மக்களுக்காக எடுக்கும் சினிமா நல்ல சினிமா. மொத்தத்தில் ரசனையோடு எடுக்கப்பட்டு போட்ட முதலீட்டை எடுக்கும் வகையில் ஓடக் கூடிய சினிமாவைச் சிறந்த சினிமா என்பேன்..."" என்றார் அவர்.

    இரண்டாம் நாள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் தனபால் பத்மநாபன் படம் எடுத்ததன் நோக்கம், தேவை, அனுபவம் குறித்து மாணவர்களிடம் பேசினார். படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மேற்கொண்டுவரும் வழிகளையும் விளக்கினார். இதைத்தொடர்ந்து படத்தின் மார்க்கெட்டிங் மேலாளர் பிரகாஷ் எந்தெந்த வகையில் படத்தினை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்று திரையில் பவர்பாயிண்ட்டுடன் கூடிய விளக்கங்களை அளித்தார்.

    'பிரைம் பாயின்ட்" சீனிவாசன் பல்வேறு சந்தைப்படுத்துதல் முறைகளை விளக்கினார். சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களின் பலத்தையும், அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளும் விதத்தையும் அவர் சொன்னார். மேலும் சந்தைப்படுத்துவதில் ஏற்படும் தோல்விகளையும், அதற்கான தகவல் தொடர்பின்மை உள்ளிட்ட காரணங்களையும் விளக்கமாகப் பேசினார்.

    மதுரையைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர் ராமகிருஷ்ணன், ''என்னுடைய 25 வருட அனுபவத்தில் இதுபோன்ற ஒரு மார்க்கெட்டிங் முயற்சியைப் பார்த்ததில்லை. புதுமையான முயற்சிகளுக்கு ரசிகர்கள் நிச்சயம் ஆதரவளிப்பார்கள்"" என்றார்.

    எம்ஜிஆர்

    முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் தனி செயலரும், அறிவியல் அறிஞருமான வி.பொன்ராஜ் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். அவர், ''எம்.ஜி.ஆர்.தான் மாஸ் ஊடகமான திரைப்படத்தை சரியாகப் பயன்படுத்திகொண்டார். நவீன வசதிகள் மக்களிடம் நம்மைக் கொண்டு செல்வதிலும், சந்தைப்படுத்துதலிலும் பெரிதும் உதவிவருகின்றன. இதைப் பயன்படுத்தி பெரிய அளவில் வெற்றி பெறமுடியும். இந்தப் பயிற்சியை உங்கள் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகக் கொண்டால் பல வாய்ப்புகள் தேடிவரும்"" என்றார்.

    'கிருஷ்ணவேணி பஞ்சாலை" படத்தின் கதாநாயகன் ஹேமச்சந்திரன் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 'இயக்குநரிடம் திட்டு வாங்கியதுண்டா", 'காதல் காட்சிகளில் சங்கடம் இருந்ததா", 'காதல் முன் அனுபவம் உண்டா" என்று மாணவர்கள் கேட்ட துடுக்குத்தனமான கேள்விகளுக்கும் சிரித்துக்கொண்டே அவர் பதில் அளித்தார்.

    வேலைவாய்ப்பு

    ''இந்த ஒருமாத 'இன்டர்ன்ஷிப் ப்ராஜக்ட்" முடிந்ததும் அதில் மாணவர்களின் செயல்பாடு குறித்து மதிப்பிட்டு விருதுகள் வழங்கப்படும். தொடர்ந்து அவர்கள் வேலைவாய்ப்பு பெற நிறுவனங்களுக்கு அறிமுகம் செய்துவைப்போம்"" என்றார் தனபால் பத்மநாபன்.

    வேலைவாய்ப்பு பற்றிய இந்த இன்ப அதிர்ச்சியோடு, ஜெயிக்க முடியும் என்ற புதிய உத்வேகமும் உற்சாகமும் மாணவர்கள் முகங்களில் தெரிந்தது. இந்தப் பயிற்சி, எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்டியாக - கேரியர் கைடன்ஸாக இருந்தாக - பல மாணவர்கள் மகிழ்ச்சி பொங்க கூறினர்.

    English summary
    Large corporates often introduce new products to the market. Marketing experts do a lot of
 brainstorming, resulting in innovative ideas. Similar is the case, whenever a new movie is released. But the film industry and the business schools have never worked together. Minveli Media Works is producing the film, “Krishnaveni Panjaalai” to create an identity for itself in the industry. This movie which is woven around the life of cotton mill workers is in the final stages of production. For the first time in the Tamil film industry, this film is implementing the marketing strategies with the MBA students.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X