For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  கருணாநிதி-சிவாஜி இரட்டை குழல் துப்பாக்கி-பிரபு

  By Staff
  |

  Prabhu with Family
  கருணாநிதியும் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் மாதிரி செயல்பட்டவர்கள் என்றார் நடிகர் பிரபு.

  சீர்மரபினர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் இன மக்களுக்கு அவர்கள் வாழும் மாவட்டத்திலேயே சாதிச் சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கு மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் தேவர் சமுதாய அமைப்புகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடந்தது.

  இதில் நடிகர் பிரபு பங்கேற்றார். விழா அமைப்பாளர்களில் ஒருவராக அவர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தார்.

  அவர் பேசுகையில், "எனது பெரியப்பா கருணாநிதியின் மனதில் நமக்கு தனி இடம் உண்டு. அவர் மனோகரா உள்ளிட்ட பல திரைப்பட வசனம் மூலம் நமது சமுதாயத்தை உயர்த்தி உள்ளார். அந்த வசனத்தை உச்சரித்த பெருமை நடிகர் திலகம் சிவாஜிக்கு உண்டு. கருணாநிதியும் நடிகர் திலகம் சிவாஜியும் இரட்டைக்குழல் துப்பாக்கி போன்றவர்கள்.

  இப்போது எனது தந்தை இருந்திருந்தால் மகிழ்ந்திருப்பார். அவருடைய சார்பிலும் எனது குடும்பத்தின் சார்பிலும் முதல்வருக்கு நன்றி சொல்ல வந்துள்ளேன். எனது பெரியப்பா கருணாநிதியும் அவருடைய குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்றார் பிரபு.

  என்னை அர்ப்பணித்து விட்டேன்-கருணாநிதி:

  நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், எனக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்த விழா என்றார்கள். நான் உள்ளபடியே ஆச்சரியப்படுகிறேன். எனக்கு நன்றி தெரிவிப்பதா? அதுவும் தமிழ்நாட்டில் என்று ஆச்சரியப்படுகிறேன். தமிழ்நாட்டில் ஒரு சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கிறார்கள் என்றால், அதுவும் எனக்கு தெரிவிக்கிறார்கள் என்றால் நான் வியப்படைவதில் எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை.

  ஏனென்றால் நாள் தோறும் காயப்பட்டு, காயப்பட்டு, அடிபட்டு, அடிபட்டு அந்த ரணங்களை ஆற்றிக்கொள்ள முடியாமல் இது போன்ற விழாக்கள் மூலம் மருந்துகளை அளிக்கின்ற ஸ்ரீதர் வாண்டையார்களுக்கு, இதற்கு முன்பு நடைபெற்ற விழாக்களில் மருந்தளித்த அருமைத் தொழிலாளர் தோழர்களுக்கு, அருந்ததியர் சமுதாயத்தினருக்கு நான் வரிசை வரிசையாக நன்றி கூறவேண்டியவனாக இருக்கிறேன்.

  1969ம் ஆண்டு நான் முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, சட்டமன்றத்திலே உரையாற்றிய நேரத்தில் ஒருவர் சொன்னார்- அவர் சட்டமன்றத்திலே தான் பகை உணர்ச்சியோடு பேசுவார்-வெளியிலே எனக்கு நண்பர் தான்-இன்றைக்கும் நண்பர்தான்- ஒரு டாக்டர், அப்போது அதிமுகவைச் சேர்ந்தவர்-அவர் அன்றைக்கு பேசும்போது, கருணாநிதி தலைமையிலே இருக்கின்ற அரசு, 3ம் தர அரசு என்று குறிப்பிட்டார்.

  உடனே திமுகழக சட்டமன்ற உறுப்பினர்கள் கொதித்தெழுந்து ஆத்திரத்தை உமிழ்ந்தார்கள். நான் அவர்களையெல்லாம் அடக்கி உட்காரவைத்துவிட்டு அமைதியாக சொன்னேன்.

  அவர் சொன்னதில் எந்த தவறும் இல்லை, உண்மையைத்தான் சொன்னார். இது மூன்றாம்தர அரசு கூட அல்ல-நாலாந்தர அரசு. பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர என்கிற 4 வர்ணத்தில் நாங்கள் சூத்திரர்களுக்கான அரசு- ஆகவே இது நாலாந்தர அரசு என்று அன்றைக்கு நான் சொன்னேன்.

  ஏன் இதை குறிப்பிடுகிறேன் என்றால், இங்கே அமர்ந்திருக்கின்ற நீங்கள் எல்லாம், நான்காவது வகுப்பை சேர்ந்தவர்கள்தான். பெரியார் இந்த இழிவு நம்மைவிட்டு நீங்குகிற வரையில் நமக்கு விடுதலை இல்லை என்று அடிக்கடி கூறுவார். அந்த விடுதலையை பெற வேண்டுமென்ற நோக்கத்தோடு திராவிட இயக்கம் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

  எந்த வீரரின் வரலாற்றிலும் எல்லோருடைய பங்களிப்பும் உண்டு. தேவர்களுடைய பங்களிப்பு மாத்திரமல்ல, வேறு சில சமுதாயத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் உண்டு. கட்டபொம்மனின் கோட்டையை காப்பாற்ற கடைசியாக தன்னுடைய உயிரையே தற்கொலை செய்து கொண்டு வெள்ளைக்காரனின் பீரங்கி மேடையை தகர்த்தெறிந்த சுந்தரலிங்கம் யார் என்பதும், அவன் ஒரு ஆதிதிராவிடன் என்றோ பிரிந்து நிற்காமல் அனைவரும் ஒன்றாக நின்று அந்த சுதந்திர போராட்டத்தை தமிழகத்திலே நடத்தியிருக்கிறார்கள்.

  களரி என்று ஒரு ஆயுதம். அதை வைத்துக் கொண்டுதான் சின்னமருதும், பெரியமருதும் பல பகைவர்களையெல்லாம் வீழ்த்தினார்கள் என்று வரலாறு சொல்கிறது.

  களரி என்பது முக்குலத்தோர், மூவேந்தர், மூவேந்தர் பரம்பரையினர் வைத்திருந்த ஒரு அற்புதமான ஆயுதம். அதன் சிறப்பு என்னவென்றால், துப்பாக்கியால் சுட்டால் அதுநேராக சென்று, அந்த குண்டு ஒருவரை வீழ்த்தும். வாளால் வெட்டினால், தலையையோ கையையோ வெட்டி வீழ்த்தும்.

  ஆனால் களரி மறவர் பெருங்குடி மக்களும், தேவர் பெருங்குடி மக்களும், அந்தப்படை வீரர்களும், தளபதிகளும் பயன்படுத்திய அந்த களரியின் சிறப்பு என்னவென்றால் அது சென்று தாக்கிவிட்டு மறுபடியும் யாருடைய கையில் இருந்து புறப்பட்டதோ அந்த கைக்கே திரும்ப வந்துசேரும்.

  அப்படி அமைக்கப்பட்ட அற்புதமான வடிவம் அந்த களரிக்கு உண்டு. அதை வைத்து பயின்ற ஒரு மாபெரும் சமுதாயம் -அது தான் இன்றைக்கு மூவேந்தர் என்ற பெயரோடு விளங்குகிறது.

  இங்கே தலைமை உரையாற்றிய செல்வராஜ் சொன்னார் -நீ வாழ நான் என்னைத் தருகிறேன் என்றார். நான் அவருக்கு திரும்ப சொல்கிறேன். தனிப்பட்ட ஒரு கருணாநிதி வாழ, நீ உன்னைத் தர வேண்டாம். நான் சொல்ல விரும்புகிறேன், இந்த சமுதாயம் வாழ நான் என்னையே தந்துவிட்டேன். தந்து கொண்டே இருப்பேன் என்றார் கருணாநிதி.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X