twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இலங்கையில் எந்திரன் மோகம் குறைந்தது-தியேட்டர்கள் வெறிச்சோடுகின்றன

    By Sudha
    |

    கொழும்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்துள்ள எந்திரன் படத்திற்கு இலங்கையில் மோகம் குறைந்து விட்டதாக செய்திகள் கூறுகின்றன. பல தியேட்டர்களில் படம் எடுக்கப்பட்டு விட்டதாகவும், கூட்டம் குறைந்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

    இதுகுறித்து தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தி...

    இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் எதிர்பார்ப்புடனும், பெரும் ரசிகர் ஆரவாரத்துடனும் எந்திரன் திரையிடப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு தமிழ்ப் படத்திற்கு இந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் கிடைத்தது இதுவே முதல் முறையாகும்.

    ஆனால் தற்போது கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் எந்திரனுக்கு மவுசு குறைந்து விட்டது. இங்குள்ள பல்வேறு தியேட்டர்களில் எந்திரன் படத்தை எடுத்து விட்டனர். கூட்டம் குறைந்து போனதே இதற்குக் காரணம்.

    இதுகுறித்து யாழ்ப்பாணத்தில் இரு தியேட்டர்களுக்கு உரிமையாளரான தியாகராஜா என்பவர் கூறுகையில், படத்தைப் பார்க்க வரும் தமிழர்கள், இது தமிழ்ப் படம் போல இல்லையே, ஆங்கிலப் படம் போல இருக்கிறதே என்று கூறுகிறார்கள். அதை விட முக்கியமாக நமது கலாச்சாரத்திற்கும், இதற்கும் பொருத்தமாக இல்லையே என்பதுதான் அவர்களது முக்கிய கவலையாக உள்ளது.

    இந்த எண்ணம் சிலரிடம் மட்டும் ஏற்படவில்லை. ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்கள் மத்தியிலும் பரவியுள்ளதால் படத்தைக் காண வருவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதன் காரணமாக எங்களது இரு தியேட்ட்டர்களில் போட்டிருந்த எந்திரனை, ஒரு தியேட்டரிலிருந்து எடுத்து விட்டோம் என்றார்.

    பூபாளசிங்கம் என்ற தமிழர் கூறுகையில், இது தமிழ்ப் படம் போலவே இல்லை. வடிவேலு, கவுண்டமணி, செந்தில் போன்றோரின் காமெடி இல்லாமல் போனது படத்துக்கு மிகப் பெரிய பலவீனம். இங்குள்ள தமிழர்களுக்கு தமிழ்ப் படம் என்றால் அதில் காமெடியைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் எந்திரனில் இது இல்லாதது பெரும் பலவீனம் என்றார்.

    ஆரம்பத்தில் ரஜினி, ஐஸ்வர்யா படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்புடன் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்தது இல்லை என்பதால் ரசிகர்களிடையே ஆர்வம் குறைந்து போய் விட்டது என்றும் கூறினார் பூபாளசிங்கம்.

    இதை விட முக்கியமாக, எந்திரன் ரிலீஸான அடுத்த நாளே மலேசியாவிலிருந்து பெருமளவில் டிவிடிக்கள் வந்து குவிந்து விட்டனவாம். இதுவும் தியேட்டர்களுக்கு ரசிகர்கள் வருகை குறைந்து போனதற்கு முக்கியக் காரணமாம். யாழ்ப்பாணத்தில் எந்திரன் திருட்டு விசிடியும், டிவிடியும் தாராளமாக கிடைக்கிறதாம்.

    தமிழ் எந்திரன் நிலை இப்படியிருக்க, இந்தி ரோபோவுக்கு பெரும் ஏமாற்றம் மிஞ்சியுள்ளதாம். அதாவது இந்தி ரோபோவுக்கு சுத்தமாக வரவேற்பில்லையாம். இந்தியில் பார்ப்பதை விட தமிழிலேயே பார்க்கலாம் என்பதால் இந்தி ரோபோவைப் பார்க்க யாரும் ஆர்வம் காட்டவில்லையாம். மேலும், இந்திப் படம் என்றால் ஷாருக் கான் உள்ளிட்டோரின் படங்களைத்தான் அங்குள்ளவர்கள் எதிர்பார்க்கிறார்களாம். அதேசமயம், ரஜினியை தமிழ்ப் பட நடிகராக மட்டுமே பார்ப்பதாகவும், அதிலும் காமெடியில் கலக்கும் ரஜினியைத்தான் அதிகம் ரசிப்பதாகவும் தியாகராஜா கூறுகிறார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X