twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவலன் பட பேனர்கள் அகற்றம்-கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் புகார்

    By Sudha
    |

    சென்னை: இளைஞன் பட பேனர்களை மட்டும் அனுமதித்து விட்டு, காவலன் பட பேனர்களை போலீசார் அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்து, சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் விஜய் ரசிகர்கள் மனு கொடுத்தனர்.

    நடிகர் விஜய் நடித்த காவலன் படம் வருமா வராதா என்ற பெரிய இழுபறிக்கு பிறகு கடந்த ஜனவரி 15-ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் வெளியானது. பல இடங்களில் பல்வேறு காரணங்களால் பொங்கல் அன்று காலை காட்சி திரையிடப்படவில்லை. வெளிநாடுகளில் இந்தப் படம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    பொங்கலன்று வெளியான இப்படம் தமிழகம் முழுவதும் ஓடி வருகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 60 தியேட்டர்களில் படம் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் காவலன் படத்திற்கு பல்வேறு வகையான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பல்வேறு இடங்களில் தியேட்டர்கள் முன்பு விஜய் ரசிகர்கள் டிஜிட்டல் பேனர்கள் வைப்பதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

    சென்னை உதயம் தியேட்டர் எதிரே 70 அடி நீளத்திற்கு விஜய் படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர்களை விஜய் ரசிகர்கள் வைக்க முயன்ற போது போலீசார் அதை தடுத்து நிறுத்தினர்.

    இதை கண்டித்து நடிகர் விஜய் ரசிகர்கள் 100 பேர் சென்னை சாலிக்கிராமத்தில் இருந்து ஊர்வலமாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு புகார் மனு கொடுக்க வந்தனர்.

    அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விஜய் ரசிகர்களிடம், கூட்டமாக யாரும் உள்ளே செல்லக்கூடாது. யாராவது 2 பேர் உள்ளே செல்லலாம் என்றனர். இதை தொடர்ந்து விஜய் ரசிகர் மன்ற மாநில நிர்வாகிகள் சிலர் மனு கொடுக்க உள்ளே சென்றனர்.

    அந்த மனுவில், "நாங்கள் நடிகர் விஜயின் தீவிர ரசிகர்கள். அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போது தியேட்டர்கள் முன்பு அவரை வாழ்த்தி பேனர்கள் வைப்பது வழக்கமான ஒன்று. வேட்டைக்காரன், சுறா படங்கள் வெளியான போதும் இந்த நடைமுறையையே நாங்கள் பின்பற்றினோம்.

    3 நாட்கள் பேனர்கள் இருக்கலாம் என்பது தமிழக அரசின் விதிமுறை. ஆனால் நாங்கள் பேனர்களை வைக்கும் போதே போலீசார் தடுத்து விட்டனர். எங்களை பேனர்களை வைக்க விடாமல் செய்து விட்டனர். ஆனால் அருகிலேயே கலைஞரின் இளைஞன் பட பேனரை மட்டும் அவர்கள் அகற்றவில்லை.

    போலீசார் இது போன்ற நடவடிக்கை ரசிகர்களாகி எங்களை மனம் நோக வைத்துள்ளது. இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் ", என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    மனுவை கொடுத்து விட்டு வந்த ரசிகர்கள் கூறும்போது, "எங்கள் தலைவர் விஜய் நடித்த எந்த படத்திற்கு இது போன்ற பிரச்சினை வந்ததில்லை. இந்த படத்திற்கு தான் பிரச்சினை செய்கிறார்கள். பேனர்கள் வைக்க விடாமல் போலீசார் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். இது போன்ற செயல்களை போலீசார் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்றனர்.

    இதேபோல திருச்சியில் விஜய் ரசிகர்கள் என்ற பெயரில் போலியான டிக்கெட் அச்சடிக்க முயன்ற சம்பவமும் நடந்தேறியது பொங்கலுக்கு முன்பு. இதுபோல ஆங்காங்கு காவலன் படத்திற்கு பல்வேறு வகையில் இடையூறுகள் செய்யப்பட்டு வருவதாக ரசிகர்கள் குமுறல் வெளியிட்டு வருகின்றனர்.

    English summary
    Actor Vijay's hardcore fans lodged complaint in Chennai Police commissioner on the removal of Vijay's Kaavalan film banners and cut outs of their matinee idol from Chennai theaters.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X