twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'விருதகிரியை தடுத்தால் நான் யாரென்று காட்டுவேன்!' - விஜயகாந்த் ஆவேசம்

    By Chakra
    |

    எனது விருதகிரி படத்தை சிலர் தடுக்க முயற்சிக்கிறார்கள். ஒருவேளை என் படத்தைத் தடுத்தால், நான் யார் என்று காட்டுவேன், என்று ஆவேசப்பட்டார் விஜயகாந்த்.

    தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் விருதகிரி. நாயகியாக மாதுரி நடித்துள்ளார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரித்துள்ளார்.

    இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்று இரவு நடந்தது. விஜயகாந்த் முதல் சி.டி.யை வெளியிட நடிகர் சத்யராஜ் பெற்றுக் கொண்டார்.

    விழாவில் விஜயகாந்த் பேசுகையில், "எனது முந்தைய படங்களான தர்மபுரி, சுதேசி, சபரி போன்ற படங்களை வெளியிட முடியாமல் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்தேன். அதே பிரச்சினைகள் விருதகிரி படத்துக்கும் பிரச்சினை ஏற்பட்டு உள்ளது.

    இந்த படத்துக்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. ரிலீஸ் செய்ய விடாமல் தடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த படத்தைத் தடுத்தால் விஜயகாந்த் யார் என்பதைக் காட்டுவேன். எனக்கு தொண்டர்கள் இருக்கிறார்கள். படத்தை எப்படி ரிலீஸ் செய்வதென்று தெரியும். பொறுத்திருந்து பாருங்கள்.

    விருதகிரி படம் 25 சதவீதம் சென்னையிலும், 25 சதவீதம் வெளிநாடுகளிலும் படமாக்கப்பட்டு உள்ளது.

    யாருடன் கூட்டணி...

    நான் அ.தி.மு.க.வையும், காங்கிரஸ் கட்சியையும் விமர்சிப்பதில்லை என பேசுகிறார்கள். பத்திரிகைகளிலும் எழுதுகிறார்கள். அப்படியென்றால் இந்த கட்சிகளுடன் நான் கூட்டணி அமைப்பேன் என்றும் கூறுகிறார்கள்.

    ஒரு விஷயத்தை தெளிவாக கூறிக்கொள்கிறேன். நான் யாரையும் நம்பி அரசியலுக்கு வரவில்லை. மக்களையும், தெய்வத்தையும் நம்பித்தான் அரசியலுக்கு வந்தேன். எனது மடியில் கனமில்லை. அதனால் எனக்கு பயமும் இல்லை.

    காங்கிரஸ் கட்சியிடம் நான் ரூ. 100 கோடி வாங்கிவிட்டதாக பேசுகிறார்கள். அ.தி.மு.க.விடமும் ரூ. 100 கோடி வாங்கி விட்டேன் என்கிறார்கள். அப்படி பணம் வாங்கி இருந்தால் விருதகிரி படத்தை ரிலீஸ் செய்ய இவ்வளவு கஷ்டப்படுவேனா... கேப்டன் டி.வி.யையும் எங்கேயோ கொண்டு போய் இருப்பேனே.

    தந்தை பெரியார் பெயரில் சமத்துவபுரங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றின் நிலைமை இப்போது என்ன என்பது அனைவருக்கும் தெரியும். 59 லட்சம் ஏழைகளுக்கு இலவச வீடுகள் கட்டித்தரப்படுவதாக சொல்லப்படுகிறது. அப்படியென்றால் 1967-ல் ஆட்சிக்கு வந்தவர்களால் இன்னும் வறுமையை ஒழிக்க முடியவில்லை என்றுதானே அர்த்தம்.

    நான் வறுமையை ஒழிப்பேன் என்று பேசி வருகிறேன். அப்படியென்றால் தனி மனித வருமானத்தை பெருக்குவேன் என்றுதான் அர்த்தம். பிச்சைக்காரர் ஒழிப்பு திட்டம், கண்ணொளி திட்டம் போன்றவற்றால் பயன் அடைந்தவர்கள் யார் என்பதை காட்டுங்கள். நான் எங்கேயும் உண்மையைதான் பேசுவேன்...," என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X