twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழர்களின் ஓட்டுக்களை கேட்க சோனியாவுக்கு தகுதியே இல்லை - திரையுலகம் தீர்மானம்

    By Staff
    |

    Bharathiraja
    சென்னை: சோனியா காந்தி தமிழகத்திற்கு வரக் கூடாது. தமிழர்களின் ஓட்டுக்களைக் கேட்க அவருக்கு தகுதியே கிடையாது. மீறி அவர் தமிழகம் வந்தால் எங்களின் முழு எதிர்ப்பையும் காட்டுவோம் என்று பாரதிராஜா தலைமையிலான திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் தீர்மானம் போட்டுள்ளது.

    திரையுலகினர் பலரும் திரண்டு, புதிதாக திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற புதிய அமைப்பினைத் தொடங்கியுள்ளனர். ஈழத்தில் போர் நிறுத்தம் கோரி தொடர் போராட்டம் நடத்த இந்த அமைப்பு தீர்மானித்துள்ளது.

    முதல் கட்டமாக நேற்று பிரமாண்ட உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. திடீரென அறிவிக்கப்பட்ட போராட்டமாக இருந்தாலும் பெரும் திரளான திரையுலகினர் இதில் கலந்து கொண்டனர்.

    இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோரும் வந்து ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

    கூட்டத்தின் இறுதியில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை பாரதிராஜா படித்தார். தீர்மானங்கள் விவரம்:

    வரலாறு மன்னிக்க இயலாத துரோகம்..

    இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல், அழித்தொழிக்கும் இந்த இனப்போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்.

    இப்போதும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த நொடி போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆணையிட முடியும். இன்று இந்தியாவை ஆண்டுகொண்டிருக்கும் ஆளும்கட்சி அதை செய்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளை கேட்பதுதான் நியாயமானது. நேர்மையானது.

    அடிவயிற்றில் பசியோடு எரியும் உலைக்கு அரிசி போடாமல், செத்தபிறகு வாய்க்கரிசி போட வரும் கேவலத்தை உலகின் எந்த இனமும் ஏற்காது. தமிழர்கள் வாழ்வை, உயிரை காப்பாற்ற தவறிய உங்களுக்கு தமிழர்களின் வாக்குகளை கேட்கும் தார்மீக தகுதி இல்லை என்று நாங்கள் ஒருமனதாக சொல்கிறோம்.

    மன்மோகன், சோனியா, பிரணாப் வரக் கூடாது..

    போர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப்முகர்ஜியும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் தாங்களாகவே தமிழகத்துக்கு வந்து வாக்கு கேட்கும் முயற்சியை மனசாட்சியின் பேரால் நிறுத்திக்கொள்ள வேண்டும் என ஒருமித்த குரலில் முன்மொழிகிறோம்.

    இந்த எங்களது உணர்வுப்பூர்வமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழகம் வந்தால், எங்கள் முழு எதிர்ப்பை காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம்.

    எங்கள் தீர்மானத்தில் ததும்பும் உணர்வுகளை அறிந்துகொண்டு, உணர்ந்துகொண்டு, புரிந்துகொண்டு உடனடி போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    தங்கபாலு, ப.சி, இளங்கோவனுக்கு எதிராக பிரசாரம்..

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு ஆகியோர் இலங்கை இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X