twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நாடகம் போட திரையுலகம் தயார்!

    |

    தமிழக அரசு, கோவையில் நடத்தவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் நாடகம் போடவும், கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் தாங்கள் தயாராக இருப்பதாக திரையுலகின் பல்வேறு சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், வினியோகஸ்தர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் ஆகிய அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டு கூட்டம் நடந்தது.

    அதன் பின்னர் அதன் நிர்வாகிகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது...

    உலக தமிழ் செம்மொழி மாநாட்டினை தமிழக அரசு சார்பில் 2010-ம் வருடம் ஜுன் மாதம் 24-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை கோவை மாநகரில் நடத்துவதற்கு முடிவெடுத்து, அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டில் தமிழ் திரையுலகம் கலந்துகொண்டு பங்களிக்கும் சீரிய எண்ணத்துடன் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    மொழிகளிலேயே மூத்த மொழி தமிழ் மொழி. பல்வேறு மொழிகளுக்கு வழிகாட்டியாக திகழ்கின்ற அன்னை மொழிதான் தமிழ் மொழி. பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பிருந்தே பேசப்பட்டு, எழுதப்பட்டு, காக்கப்பட்டு வரும் தமிழ் மொழி, காலத்திற்கேற்ப தொன்மை மாறாமல், எந்த ஒரு காலகட்டத்திலும் தன் தனித்தன்மையை விட்டுக்கொடுத்ததில்லை.

    சங்க காலம் முதல் இந்த கணினி காலம் வரை தன் ஆளூமையை விட்டுவிடாமல் இருந்து வரும் தமிழ் மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தவர், முதல்வர் கருணாநிதி.

    அறிஞர்கள், கவிஞர்கள், ஆசிரியர்கள், தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இதற்காக தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்கள். உலக தமிழ் மாநாடு பல காலகட்டங்களில் பல்வேறு இடங்களில் நடைபெற்று தமிழுக்கு புத்துணர்ச்சி கொடுத்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத-மறைக்க முடியாத ஒன்று.

    ஆனால் தமிழ் மொழி செம்மொழி என்று ஆன பிறகு, உலக தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற இருப்பது காலத்தால் என்றென்றும் சரித்திரத்தில் சாதனையாக போற்றக்கூடியது ஆகும். இந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டை தமிழ் திரையுலகமே திரண்டு வரவேற்கிறது.

    முதல்வர் இடும் பணிகளைச் செய்வோம்...

    தமிழக முதல்வரும், அரசும் இடும் பணிகளை எழுச்சியோடும், உணர்வுப்பூர்வமாகவும் செவ்வனே செய்ய தமிழ் திரையுலகமே தயாராக உள்ளது.

    தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, அனைத்து கலைத்துறை பணிகளையும் செய்ய தமிழ் திரையுலகம் தயாராக உள்ளது என்பதை உவகையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

    கலை மற்றும் இலக்கியம் சம்பந்தப்பட்ட பட்டிமன்றம், கருத்தரங்கம், கலைநிகழ்ச்சி, நாடகம் என இன்னும் பிற நிகழ்ச்சிகளை சிறப்புற செய்வதற்கு தமிழ் திரையுலகம் இன்று முதல் ஆர்வமுடன் தயாராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், துணைத்தலைவர் அன்பாலயா பிரபாகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், நடிகர் சங்க செயலாளர் ராதாரவி, இணை செயலாளர் செல்வராஜ், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், செயலாளர் ஜி.சிவா, வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் கலைப்புலி ஜி.சேகரன், சென்னை திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், பட அதிபர்கள் கோவைத்தம்பி, கே.பாலு, ஆர்.மாதேஷ், கே.எஸ்.சீனிவாசன், அழகன் தமிழ்மணி, ஷக்தி சிதம்பரம், ஆனந்தி பிலிம்ஸ் நடராஜன், ஜானி, சுப்பையா, என்.விஜயமுரளி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

    நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இதில் கலந்து கொள்ளவில்லை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X