twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமைச்சர் பரிதி இளம்வழுதி மகன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு லஞ்சம் கேட்டதாக சென்சார் அதிகாரி கைது

    By Sudha
    |

    Rajasekhar
    சென்னை: தமிழக செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி ஹீரோவாக நடிக்கும் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் தர லஞ்சம் கேட்டதாக கூறி தணிக்கை வாரிய மண்டல அதிகாரி ராஜேசகரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

    சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள 5-வது மாடியில் திரைப்பட தணிக்கைக்கான மண்டல அலுவலகம் உள்ளது. அதில் மண்டல அதிகாரியாக இருந்து வருபவர் ராஜசேகர்.

    ஜூன் மாதம் 17ம் தேதி இவர் இப்பொறுப்புக்கு வந்தார். வந்தது முதல் லஞ்சக் கடலில் குதித்துள்ளார். தணிக்கைச் சான்றிதழ் தருவதற்கு லஞ்சம் கேட்க ஆரம்பித்தார். இதுகுறித்து திரைத்துறையினர் புலம்பி வந்தனர். ஆனால் நேற்று திடீரென இவர் கையும் களவுமாக பிடிபட்டார்.

    காதல் சொல்ல வந்தேன் என்று ஒரு படம். இப்படத்தில் பரிதி இளம்வழுதியின் மகன் பாலாஜி கதாநாயகனாக நடித்துள்ளார். மேக்னா ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தை தணிக்கைக்கு அனுப்பினர். அப்போது தணிக்கைச் சான்றிதழ் தர ரூ. 1 லட்சம் கேட்டுள்ளார். முதல் கட்டமாக ரூ. 25,000 தருமாறும் தயாரிப்பாளர் ஜெயக்குமாரிடம் கூறியுள்ளார்.

    இதையடுத்து ஜெயக்குமார் சிபிஐயிடம் புகார் கொடுத்தார். அவர்கள் பொறி வைத்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் ராஜசேகரைப் பிடித்த சிபிஐயின் அலுவலகமும், தணிக்கை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவனிலேயேதான் உள்ளது. தங்களுக்குப் பக்கத்திலேயே லஞ்சம் தலைவிரித்தாடுவதைக் கேட்டு கொதிப்படைந்த சிபிஐ அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கி ராஜசேகரை மடக்கிப் பிடித்து விட்டனர்.

    நேற்று மாலை 3 மணி அளவில் படத்தயாரிப்பு நிர்வாகி கோவிந்தராஜ், ராஜசேகரிடம் பணத்தைக் கொடுத்தபோது பிடிபட்டார். கோவிந்தராஜ் ரூ. 10,000 மட்டுமே அப்போது கொடுத்தார்.

    பின்னர் ராஜசேகரின் அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரவு அவரை அலுவலகத்திற்குக் கூட்டிச் சென்று துருவித் துருவி விசாரித்தனர்.

    சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ராஜசேகரின் வீட்டிலும் சோதனை போடப்பட்டது.

    எம்.எஸ்.சி விவசாயப் படிப்பை முடித்தவர் ராஜசேகர். தஞ்சையைச் சேர்ந்தவர். இந்திய வனப் பணி (ஐ.எப்.எஸ்) முடித்து விட்டு பஞ்சாப் கேடரில் பணியாற்றி வந்தவர்.

    இவரது மனைவி கோவை விவசாயப் பல்கலைக்கழகத்தின் திருவள்ளூர் கிளையில் பேராசிரியையாக உள்ளார்.

    சில வருடங்களுக்கு முன்பு இதே சாஸ்திரி பவனில் வைத்து லஞ்சம் வாங்கிக் குவித்த பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் சிக்கினார். தற்போது அதே அலுவலக வளாகத்தில் தணிக்கை அதிகாரி பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை தணிக்கை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கியதாக பிடிபட்டதில்லையாம். இதுதான் முதல் முறையாகம்.

    அமைச்சர் மகன் ஹீரோவாக நடிக்கும் படத்திற்கே லஞ்சம் கேட்டதால்தான் தற்போது சிக்கியுள்ளார் தணிக்கை மண்டல அதிகாரி.

    சொத்துப் பத்திரங்கள் பறிமுதல்

    இந்தநிலையில் ராஜசேகர் வீட்டில் நடத்திய அதிரடி சோதனையின்போது பல லட்சம் மதிப்புள்ள சொத்து ஆவணங்களை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    அவரது வீட்டில் விடிய விடிய நடந்தசோதனையின்போது, ராஜசேகரின் பெயரில் நான்கு வங்கி கணக்கு புத்தகமும், அவரது மனைவி யோகலட்சுமி பெயரில் 2 வங்கி கணக்கு புத்தகமும், ரூ.60 ஆயிரம் ரொக்கப்பணமும் மற்றும் சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    ராஜசேகர் மற்றும் அவரது மனைவியின் வங்கிக் கணக்குகளை முடக்குவதற்கும் சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X