twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் திரையுலகுக்கு பிரிட்டிஷ் தமிழ் பேரவை பாராட்டு!

    By Chakra
    |

    IIFA
    கொழும்பில் ஜூனில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணிப்பதாக, தமிழ் திரையுலகம் எடுத்திருக்கும் முடிவுக்கு பிரிட்டிஷ் தமிழர் பேரவை பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளது.

    பிரிட்டனில் வாழும் தமிழர்களின் பிரதிநிதியாகத் திகழும் இந்த அமைப்பின் சார்பில் ஸ்கந்ததேவா நேற்று வெளியிட்ட அறிக்கை:

    ஈழத்தில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் சனவரி முதல் மே வரை ஐந்து மாதங்கள் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரில் 40,000 வரையிலான அப்பாவிப் பொதுமக்கள் இலங்கை அரசினால் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, போர் காலத்தில் இலங்கையில் கடமையாற்றியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் இலங்கைக்கான பிரதிநிதி கோர்டன் வைஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்தத் தொகை இதனைவிட அதிகமாக அல்லது இரட்டிப்பாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

    இந்தப் படுகொலைகள் தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னணி பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களான பன்னாட்டு சர்ச்சைகள் குழு (International Crisis Group -ICG), பன்னாட்டு மன்னிப்புச் சபை (Amnesty International ), மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch ) போன்றன கோரிக்கை விடுத்து வருகின்றன.

    இதில் பன்னாட்டு சர்ச்சைகள் குழுவின் தலைவியாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் முன்னாள் ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) அம்மையார் இருப்பதுடன், இவர் பதவியில் இரந்தபோது பல போர்க்குற்ற விசாரணைகளை முன்னின்று நடத்தியதுடன், தனது பதவிக் காலத்தில் ஈழத்திற்குச் சென்று நேரில் நிலமைகளை அவதானித்த ஒருவராக இருக்கின்றார்.

    இவை தவிர ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் பான்-கி மூன், இலங்கை அரசின் எதிர்ப்பு, மற்றும்நேரில் விடுக்கப்பட்ட வேண்டுகையை மீறி, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக் குழுவொன்றை அமைக்கும் தனது முடிவில் மாற்றம் இல்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார்.

    இவ்வாறான நிலையில், தமது போர்க் குற்றங்களை மூடி மறைக்கும் வகையில் கொழும்பில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்த இலங்கை அரசு மிகுந்த பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

    இலங்கை அரசின் கபடத்தனத்தை நன்கு புரிந்துகொண்டும், ஆறாத மாறாத ரணங்களாக கனன்று கொண்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் மனங்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையிலும் இந்த விழாவில் கலந்து கொள்வதில்லை என தமிழ் திரையுலகம் எடுத்திருக்கும் முடிவை பிரிட்டிஷ் தமிழர் பேரவை வெகுவாக வரவேற்கின்றது.

    இதே நிலைப்பாட்டை இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலுள்ள இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம்,மராத்தி போன்ற திரைப்படத் துறையினர் குறிப்பாக வட இந்திய முன்னணி நட்சத்திரங்கள் எடுப்பதற்கு தென்னிந்திய திரையுலகம் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும், பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவை கொழும்பில் இருந்து இடம் மாற்றி வேறு இடத்தில் நடத்துவதற்கான ஒழுங்கினை மேற்கொள்ள தங்களால் இயன்றளவில் செயலாற்ற வேண்டும் எனவும் உரிமையுடன் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

    ஈழத்தில் இறுதிக் கட்ட இன அழிப்புப் போர் முன்னெடுக்கப்பட்டபோது தமிழ் திரையுலகம் கொதித்தெழுந்து உண்ணாநிலைப் போரராட்டம், மனித சங்கிலிப் போராட்டம், ஊர்வலங்கள் போன்ற பல போராட்டங்கள் நடத்தியதையும், தமிழ்நாட்டு உறவுகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசுக்கு அழுத்தம் கொடுத்ததையும் நாம் இந்த நேரத்தில் நினைவுபடுத்துவதுடன், தங்களின் தார்மீகக் கடமை தொடருவதையும் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.

    கொழும்பில் நடைபெறும் பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ள திரையுலகின் அனைத்து சங்கங்களை உள்ளடக்கிய தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், சின்னத்திரைக் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், விநியோகஸ்தர்கள், திரைத்துறைத் தொழிலாளர்கள், திரையுலக ஊடகவியலாளர்கள் மற்றும் அனைவருக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்," என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார் ஸ்கந்ததேவா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X