For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஜய் காங்.கில் சேர்ந்தால் படங்களைப் புறக்கணிப்போம்: கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்

  By Staff
  |

  Vijay
  நடிகர் விஜய் காங்கிரசில் சேர முடிவு செய்தால், அவரது படங்களை புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சாக புறக்கணிப்போம் என கனடாவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக அக் கழகம் விடுத்துள்ள அறிக்கை:

  தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.

  அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன் வந்தாலோ, அப்படியொரு முடிவு எடுத்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம்.

  இந்தியா வழங்கிய ராணுவ உதவிகள்...

  மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது.

  இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு இலங்கையின் தற்காப்புக்கு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல்கள், டாங்கிகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார்.

  சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) 'பீஷ்மா' ரக டாங்கிகளை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளவாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில்தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  இதற்கு முன்னர் 2007 ஜூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, புலிகளை அழிக்க சிங்கள பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

  இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சொன்னார்.

  இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார்.

  இந்தியா இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் -திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.

  தமிழர்களை அழிக்க நினைக்கும் ராகுல்

  இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.

  எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X