twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் மரியாதை... நடிகர் திலகத்தை இயக்குநர் இமயம் இயக்கியது இப்படித்தான்! #31YearsOfMuthalMariyadhai

    By Shankar
    |

    முதல் மரியாதை படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 31 ஆண்டுகள் ஆகிவிட்டன! இப்போதுவரை...

    'பூங்காற்று திரும்புமா
    ஏம் பாட்ட விரும்புமா...
    பாராட்ட...
    மடியில் வசுத்தாலாட்ட
    எனக்கொரு தாய்மடி கிடைக்குமா...'

    என்ற பாடல் வரிகள் இன்றும் ஏதோ ஒரு பயணத்தில்... பின்னிரவு வானொலியில் என காதுகளில் தாலாட்டாய் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறது.

    31 years of Mudhal Mariyadhai - A flashback

    இந்தப் படம் வெளியாகி சிறந்த பிராந்திய மொழிப் படத்துக்கான தேசிய விருதையும், படலாசிரியருக்காக கவிஞர் வைரமுத்துக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. ஃபிலிம்ஃபேர் நடிகர் திலகம் சிவாஜியையும் ராதாவையும் சிறந்த நடிகர், நடிகையாகத் தேர்வு செய்தது.

    கல்யாணமான ஒரு நடுத்தர வயது ஆள்,இளம்பெண்ணோடு காதல் கொள்கிறார் என்பது அப்போதைய காலகட்டத்தில் எவருமே எதிர்பார்க்காத ஒரு முயற்சி! அந்த வயது ஆட்கள் ஒரே நாளில் அடுத்தடுத்த காட்சிகளுக்குப் போய் கண்ணீர் சிந்திய கதையெல்லாம் உண்டு.

    திருப்பிய பக்கமெல்லாம் சிவாஜியின் நடையும், ராதாவின் சிரிப்பும் பற்றித்தான் பேச்சு! அந்தச் சிரிப்புக்குச் சொந்தக்காரர் ராதிகா என்பது அப்போது எவருக்கும் தெரியாது. காதல் தோல்வியடைந்த இளசுகள் மைக் செட் போடும் அண்ணன்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி ரிபீட் கேட்டார்கள். ஒட்டு மொத்த திரையுலகமும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவை அண்ணாந்து பார்த்தது.

    31 years of Mudhal Mariyadhai - A flashback

    இவை யாவுமே படம் வெளிவந்த பிறகு நடந்த வரலாற்றுச் சுவடு. ஆனால், படம் தொடங்கி ரிலீஸ் ஆகிறவரை பாரதிராஜா பட்டபாடு சொல்லி மாளாது!

    நடிகர் திலகம் சிவாஜி பொதுவாகவே கதை கேட்காமல் எந்தப் படத்தையும் ஒப்பு கொள்வதில்லை! அவரிடம் போய் பாரதிராஜா, 'அண்ணே... இதுதான் படத்தோட ஐடியா, நீங்க நடிச்ச நல்லா இருக்கும்' என்று நான்கு வரியில் படத்தின் கதையைச் சொல்லியிருக்கார். அப்போது பீக்கில் இருக்கிறார் இயக்குநர். அவர் மீது கொண்ட நம்பிக்கையில் நடிகர் திலகமும் ஒப்புக்கொள்கிறார்.

    மைசூர் அருகே ஒரு கிராமத்தில் முதல் நாள் படப்பிடிப்பு. எல்லோரும் ஸ்பாட்டில் ஆஜர். இயக்குநரும் வந்து சேர்கிறார். அப்போது நடிகர் திலகம் திரிசூலம் ராஜசேகர் கெட் அப்பில் மேக்கப் போட்டுக்கொண்டு ஸ்பாட்டுக்கு வருகிறார். அதைப் பார்த்ததும் இயக்குநருக்கு செம மூட் அவுட்! படப்பிடிப்புக் குழுவை விட்டுத் தள்ளி வெகுதூரம் போய் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைக்கிறார். பற்ற வைக்கிறார்...கிறார்... சிகரெட் பாக்கெட் காலியாகிறது.

    நடிகர் திலகம் உட்பட மொத்த யூனிட்டுக்கும் அதிர்ச்சி! முதல் ஷாட் வைக்க வேண்டிய முகூர்த்த நேரமும் கடந்துவிட்டது. நடிகர் திலகம் ஏதோ குழப்பம் என்பதை மட்டும் உணர்கிறார் .அப்போது உதவி இயக்குநராக இருந்த சித்ரா லட்சுமணனை அழைத்து 'அந்தக் கருவாயனுக்கு என்ன பிரச்சினையாம்!?' எனக் கேட்கச் சொல்கிறார். அண்ணன் சித்ராவும் இயக்குநரிடம் போய் அமைதியாக நிற்கிறார். இயக்குநர் 'பேக்கப்' என்று ஒற்றை வார்த்தை சொல்கிறார். இயக்குநர் சொன்னால் சொன்னதுதான்!

    யூனிட் ஆட்களுக்கு இப்போது ப்ரேக் ஃபாஸ்ட் சாப்பிடுவதா வேண்டாமா என்று தயக்கத்தோடு நிற்கிறார்கள். இந்தக் கலவரங்கள் எதுவும் தெரியாத கமலாம்மா ஸ்பாட்டிலேயே 'சுடச் சுட' இட்லி தயார் பண்ணி நடிகர் திலகத்திற்கு கொண்டு வந்து சாப்பிடச் சொல்கிறார். நடிகர் திலகமும் மேக் அப்பைக் கலைத்துவிட்டு நார்மல் தோற்றத்தோடு அமர்ந்திருக்கிறார். டைரக்டரையும் சாப்பிட வரச் சொல்லுங்க என்று கமலாம்மா சொல்ல, தகவல் இயக்குனருக்கு தெரிவிக்கப்படுகிறது .தட்ட முடியாமல் சாப்பிட வருகிறார். நடிகர் திலகம் உட்கார்ந்திருந்த அந்தக் காட்சியைப் பார்த்ததும் உற்சாகமாகி, 'அண்ணே...இதான் எனக்கு வேணும்! இப்படியே இருங்க ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம்' என்று சாப்பிட மறந்து படப்பிடிப்புக்கு தயாராகிறார் இயக்கநர்.

    நடிகர் திலகத்திற்கு பேரதிர்ச்சி! மேக் அப், விக் இல்லாமல் நடிச்சா தன்னோட ரசிகர்கள் எப்படி ஒத்துக்குவாங்க என்று இயக்குநரிடம் எவ்வளவோ சொல்கிறார். அண்ணே, 'நான் சொல்றேன்...நல்லா வரும் வாங்க', என்று சொல்ல படப்பிடிப்புத் தொடங்குகிறது.

    31 years of Mudhal Mariyadhai - A flashback

    பக்கம் பக்கமாக வசனம் இருக்கும் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை! அண்ணே, இப்படி உட்காருங்க இத மட்டும் சொல்லுங்க என்று அவருக்கே உரிய ஸ்டைலில் படப்பிடிப்பு போகிறது. ஒருநாள், 'அண்ணே,லைட் போகப்போகுது... சீக்கிரம் வாங்க என்கிறார். அண்ணே, அந்த மரத்துல கை வச்சு நில்லுங்க... அப்படியே திரும்பி நடந்துவாங்க...' என இயக்குநர் சொல்ல, 'டேய் நான் சிவாஜிடா... என்ன காட்சி, எதுக்கு நடக்கணும்.. என்ன சிச்சுவேஷன்னு கூட சொல்லாம நடன்னா என்னடா அர்த்தம்' என்று ஒரு கட்டத்தில் பொங்கியிருக்கிறார். ஆனால் அசரவில்லை இயக்குநர். மொத்தப் படப்பிடிப்பும் இப்படியே நடந்து முடிகிறது.

    தேவையில்லாமல் வந்து மாட்டிக்கிட்டேன் என்கிற மனநிலையோடு இயக்குநர் சொன்னதை மட்டும் செய்துவிட்டு வருகிறார் நடிகர் திலகம். அவர் கேரியரில் இதுபோல் நடப்பது இதுதான் முதல் முறை! இயக்குநர் மீது ஏக வருத்தம்.
    சென்னைக்கு வந்து மொத்தப் படத்தையும் எடிட் பண்ணி ஒவ்வொரு ஆர்டிஸ்டாக டப்பிங் பேச வைக்கிறார் இயக்குநர். எல்லோரும் பேசியாச்சு. நடிகர் திலகம் மட்டும்தான் பாக்கி. அவர் எந்த மீட்டரில் பேச வேண்டும் என்று இயக்குநர் ட்ராக் பேசி வைத்திருக்கிறார். அண்ணன் வந்து அதை மட்டும் பேசிக் கொடுதால் போதும் என்று தகவல் போகிறது அன்னை இல்லத்துக்கு.

    நடிகர் திலகம் இயக்குநர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார் என்பது எல்லோருக்கும் புரிகிறது. சமாதானம் செய்து அழைத்து வருகிறார்கள். மொத்தப் படத்தையும் பார்க்க மறுத்துவிட்டு, அவர் பேச வேண்டிய ரீலை மட்டும் போடச் சொல்லி டப்பிங்கை முடித்துக் கொடுக்கிறார்.

    இந்தச் செய்தி சினிமா இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சாக இருக்கிறது. ஃபைனல் ட்ரிம்மிங் எல்லாம் முடிந்து பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா கைக்குப் போகிறது படம் .அமைதியாகப் படம் பார்த்த இசைஞானி எதுவும் கருத்துச் சொல்லாமல் எழுந்து போகிறார். இப்போது முதல் முறையாக இயக்குநருக்கு அதிர்ச்சி! உடன் படம் பார்த்தவர்கள், ரொம்ப ரிஸ்க் !அப்படியே விட்டுட்டா மேற்கொண்டு நஷ்டம் வராமல் தப்பிச்சுக்கலாம் என்று கருத்துச் சொல்லி இயக்குநருக்கு மேலும் பீதி கிளப்புகிறார்கள்.

    இரண்டே இரண்டு பேர் மட்டும் இந்தக் கருத்துக்கு எதிராக நிற்கிறார்கள். ஒளிப்பதிவாளர் கண்ணனிடம் உதவியாளராக இருந்த இளவரசு மற்றும் விநியோகஸ்தர் வடுகநாதன். இசைஞானி கருத்தே சொல்லாமல் கிளம்பிப்போனது, உடனிருப்பவர்களின் கருத்துக் கணிப்பு எல்லாமாகச் சேர்ந்து இயக்குநரின் இரவை நீ...ளச் செய்கிறது!

    அர்த்த ராத்திரியில் தொலைபேசி அழைப்பு! இசைஞானி லைனில் வருகிறார். 'பாரதி,காலையில் ஆறு மணிக்கு ஸ்டுடியோவுக்கு வந்திடு... நாம ரெண்டுபேர் மட்டும் இன்னொரு முறை படத்தைப் பார்ப்போம்' என்று சொல்கிறார். இருவரும் பார்க்கிறார்கள் .பார்த்து முடித்ததும், 'நீ கெளம்பு' என்கிறார். மூன்றே நாளில் ராக ராஜாங்கம் நடத்தி படத்தைக் காட்டுகிறார். அதுக்கப்புறம் என்ன? நடந்ததை நாடறியுமே!

    அதில் இந்தத் தலைமுறைக்குத் தெரியாத ஒன்று - படத்தை ஆளாளுக்கு அடிச்சுத் துவைத்த போது அசராமல் உங்கள் படைப்பு வீண் போகாது என்று உறுதியாக நின்ற வடுகநாதன், இளவரசு இரண்டு பேரையும் அழைத்து நன்றி சொல்லும் விதமாக தனது அடுத்த படத்தில் அவர்களைத் தயாரிப்பார் அந்தஸ்துக்கு உயர்த்தி 'முதல் மரியாதை' செய்தார். அந்தப் படம்தான் - 'புது நெல்லு புது நாத்து'!

    - வீகே சுந்தர்

    English summary
    An interesting flashback on Muthal Mariyadhai starred Sivaji Ganesan and directed by the legend Bharathiraja.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X