இப்படி ஒரு ஏரியல் ஷாட்டா? IMPOSSIBLE; அரண்டு போன ராம் கோபால் வர்மா..எப்படித்தான் எடுத்திருப்பார்கள்?
திரைப்படங்களில் சில ரசிகர்கள் படத்தை பார்த்துவிட்டு சிலாகித்து சொல்லும்போது அந்த ஃபைட்டுக்கே கொடுத்த காசு சரியாபோச்சு, அந்த பாட்டுக்கே சரியா போச்சு, அந்த சீனுக்கே சரியாப்போச்சு என்பார்கள். சில படங்களில் காட்சி அமைப்புக்காக கேமராமேன்கள் பேசப்படுவார்கள். ரசிகர்களே அப்படி வியக்கும்போது, பலர் வியப்படையும்படி படம் கொடுத்த இயக்குநரையே வியக்க வைத்துள்ளது ஒரு படத்தின் ஏரியல் ஷாட். அது குறித்து பார்ப்போம்.

ரசிகர்கள் பலவிதம்
திரையுலகில் படத்தை மட்டும் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் உள்ளனர். பாட்டுகளை ரசிக்கும் ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகரின் சண்டைக்காட்சி, பஞ்ச் டயலாக்குகளை ரசிக்கும் ரசிகர்களும் உள்ளனர். சில ரசிகர்கள், சினிமாவில் கால்பதிக்க துடிப்பவர்கள் படத்தின் டெக்னிக்கல் சமாச்சாரங்களையும் ரசிப்பார்கள், விமர்சிப்பார்கள்.

நுணுக்கமாக ரசிக்கும் ரசிகர்கள்
அப்படி விமர்சிப்பவர்கள் அதிகம் பேசுவது காட்சி அமைப்பு, கேமரா கோணம், டைரக்ஷன் போன்றவைகளாகத்தான் இருக்கும். இயக்குநர், கதாசிரியர், கவிஞர், இசையமைப்பாளர் என்ன உருவாக்கினாலும் அதை ரசிகன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது கேமராமேன்களே. அதனால்தான் தமிழ் திரையுலகில் கேமராமேன்களையும் ரசிகர்கள் கவனித்து போற்றியுள்ளனர்.

ஜாலம் காட்டிய பழம்பெரும் கேமராமேன் ஏ.வின்சென்ட்
அந்த காலத்தில் இயக்குநர் ஸ்ரீதர் படங்களை ரசித்த ரசிகர்கள் அவரது படத்தில் கேமரா கோணத்தை வெகுவாக ரசிப்பார்கள். காரணம் கேமராவுக்கு பெயர்பெற்ற மார்கஸ் பார்ட்லே ( சாந்தி நிலையம் படம்) , ஏ.வின்சென்ட் (பல படங்கள் ஸ்ரீதருக்காக செய்துள்ளார்) போன்றோரின் கேமரா செய்யும் ஜாலம் அப்படி ரசிக்கும்படி இருக்கும்.

கருப்பு வெள்ளையில் கலக்கிய இயக்குநர் ஸ்ரீதர் குழு
இயற்கை எனும் இளையக்கன்னி பாடலில் ஜெமினி, காஞ்சனா பாடும் பாடல் இந்திப்படத்துக்கு ஒப்பாக கலர் காம்பினேஷனில் கலக்கும். இதற்கு சற்றும் குறையாத ஒளிப்பதிவு வின்சென்டின் ஒளிப்பதிவு ஆகும். கருப்பு வெள்ளைப்படத்தில் ஸ்ரீதருக்காக அவர் கலக்கி இருப்பார். குறிப்பிடத்தக்க படங்களாக சொல்ல வேண்டுமானால் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை சொல்லலாம். அதன் லைட்டிங்கே ரசிகர்களை பயபட்ட வைக்கும்.

இந்தப்பாடலை மறக்க முடியுமா? டெக்னிக்கலாகவும் கலக்கிய பாடல்
சுமைதாங்கி படத்தில் மயக்கமா கலக்கமா பாடலை கேட்டு நெகிழும் ரசிகர்கள் படத்தில் காட்சியை பார்க்கும்போது ஜெமினி கணேசனை விதவிதமாக காட்டுவதும், ஒருபக்கம் அவர் போகும்போது மறுபக்கம் நிழல் தனியாக போவதுபோல் ஜாலம் காட்டி இருப்பார் வின்சென்ட். டிராலி ஷாட்டிலும், கிரேன் ஷாட்டிலும் தனி முத்திரை பதித்தவர் அவர்.

பல ஜாலங்களை அந்த காலத்திலேயே செய்த பிலிமோட்டோகிராபர்கள்
ஓடம் நதியினிலே பாடலிலும், நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் சொன்னது நீதானா? பாடலில் கேமரா கட்டிலில் அமர்ந்திருக்கும் கதாநாயகன் முத்துராமனை நோக்கி சென்று பின் அவரது முதுகுக்கு பின் சென்று அப்படியே கட்டிலுக்கு அடியில் புகுந்து வெளியே வந்து தரையில் அமர்ந்து வீணை வாசித்தப்படி பாடும் கதாநாயகி தேவிகாவை நோக்கி சென்று அப்படியே மேலே எழும்பும்.

எப்பா என்னா வெயிட்டு அந்த காலத்து கேமரா அதில் சாகசமா?
நினைத்துப்பாருங்கள் இன்றைய கேமரா போல் இல்லை அந்த காலத்து கேமராக்கள். அதிக எடை கொண்டது, பிலிம் ரோல் லோடு செய்யப்பட தனி பகுதியுடன் ஒருவர் சாதாரணமாக தூக்க முடியாத அளவுக்கு இருக்கும். அதை வைத்து இப்படிப்பட்ட காட்சியை எடுக்க எவ்வளவு கஷ்டம் என்பது யோசித்து பாருங்கள். இதேப்போன்று எம்ஜிஆர் படங்களில் சண்டைக்காட்சிகளில் கேமரா கோணத்தை எம்ஜிஆர் நிர்ணயிப்பார் என்பார்கள். அதனால்தான் இன்றும் அவரது சண்டைக்காட்சிகள் ரசிக்கப்படுகின்றன.

கிரேன் ஷாட், ட்ராலி ஷாட், ஏரியல் ஷாட் கலக்கிய தமிழ் படக்குழுவினர்
இதேபோல் பல படங்களில் அவரது கிரேன் காட்சி, குளோசப் காட்சிகள், ட்ராலி காட்சிகளுக்கு வரவேற்பு அதிகம். இவரைப்போலவே கேமராவில் ஜாலம் புரிந்தவர் இயக்குனர், கேமராமேன் கர்ணன். ஓடும் குதிரையாகட்டும், துரத்தும் காட்சிகளாகட்டும் இவர் ரிஸ்க் எடுத்து செய்தது அந்தக்காலத்தில் மிகப்பிரபலம், தண்ணீருக்குள் கேமராவை வைத்து தமிழில் முதன்முறையாக எடுத்தவர் அவர். மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன் படத்தில் கடைசியில் நடக்கும் சண்டைக்காட்சியை பிரம்மாண்டமாக படமாக்கி இருப்பார்.

கண்ணனின் இரண்டு கண்கள் கொஞ்சிய பாரதிராஜா
அதன் பின்னர் பாரதிராஜாவின் கேமராமேன் கண்ணனின் அழகான டிராலி ஷாட்கள் ரசிகர்கள் நெஞ்சங்களை கொள்ளைக் கொண்டது. அஷோக்குமார், பாலுமகேந்திரா போன்றோர் கவிதை வடித்தனர். நவீன வரவுகளின்போது பிசி.ஸ்ரீராம் போன்றவர்கள் உலக தரத்திற்கு தமிழ் சினிமாவை கொண்டுச் சென்றனர். கேமராவில் நவீனத்தை புகுத்தியவர்கள் பலர் உண்டு. கமல்ஹாசன் போன்றோர் நவீனத்தை எப்போதும் வரவேற்று புகுத்தியுள்ளனர். சேரன் போன்றோரும் நவீனத்தை கொண்டு வந்தனர்.

கமலின் தசாவதார முயற்சி
புதுமைகளை தனது படங்களில் எப்போதும் புகுத்தும் கமல்ஹாசன் 2008 ஆம் ஆண்டில் தசாவதாரம் படத்தில் ஒரு புதுமையான விஷயத்தை புகுத்தியிருப்பார். முகுந்தா முகுந்தா என வரும் பாடலில் தெருவில் நடப்பவர்களை காட்சிப்படுத்தும் கேமரா அப்படியே மேலே சென்று மொட்டை மாடி வழியாக பெரிய சாளரத்தின் வழியாக வீட்டின் உள்ளே நுழையும், அங்கே நூற்றுக்கணக்கான மக்கள் அமர்ந்திருப்பார்கள். கேமரா அவர்களை கடந்து அப்படியே போய் அங்கு கட்டப்பட்டிருக்கும் திரைக்கு மேலே போகும் திரைக்கு அந்தப்பக்க உள்ள மூதாட்டி (அவரும் கமல்தான்) வரை போகும். Follow Focus Camera என அழைக்கப்படும் இந்த டெக்னாலஜியை தமிழ் சினிமாவில் கமல் அறிமுகப்படுத்தியிருப்பார்.

லைட்டிங், பிலிம் ரோல் கேமராவில் இத்தனை சாதனைகளா?
இதேபோல் பல படங்களை உதாரணம் சொல்லலாம், லைட்டிங்கை வைத்தே மிரட்டி இருக்கும் பல கேமராமேன்கள் உண்டு, அந்த காலத்தில் டெக்னாலஜி வளராத நிலையில் பிலிம் ரோலை வைத்துக்கொண்டு ஜாலம் காட்டிய அவர்களின் திறமைக்கு சல்யூட் அடித்துத்தான் ஆகவேண்டும். இவ்வளவு பீடிகைக்கு காரணம் அந்தக்காலத்தில் செய்த விஷயங்களை நிகழ்த்திய அற்புதங்களை இன்று நினைத்துக்கூட பார்க்க முடியாது என இன்றைய திரையுலகினர் ஒப்புக்கொள்வார்கள். அப்படி லேட்டஸ்டாக ஒப்புக்கொண்ட ஒரு பிரபல மனிதரை பிரமிக்க வைத்த சம்பவத்தை இப்போது பார்ப்போம்.

பிரம்மாண்ட க்ரைம் இயக்குநர் ராம்கோபால் வர்மா
தெலுங்கு திரையுலகில் பிரம்மாண்டம், க்ரைம் கதைகளை படமாக்கி புகழ்பெற்று பின்னர் பாலிவுட்டில் கால்பதித்த இயக்குநர் ராம் கோபால் வர்மாவையே மிரளவைத்த காட்சிப்பதிவைப்பற்றித்தான் பேசப்போகிறோம். இயக்குநர் ராம்கோபால் வர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு படக்காட்சியை பதிவு செய்துள்ளார். அது 1964 ஆம் ஆண்டு கியூபா நாட்டின் திரைப்படத்தில் எடுக்கப்பட்ட ஒரு காட்சி.

ராம்கோபால் வர்மாவை மிரளவைத்த காட்சி
அதைப்பதிவிட்டு இது எப்படி எடுக்கப்பட்டது, இம்பாசிபிள் சான்ஸே இல்லைன்னு பிரமிச்சு போய் பதிவிட்டுள்ளார். மிகப்பெரிய இயக்குநரையே பிரமிக்க வைத்த அந்தக்காட்சி என்னதான் என்பதை பார்ப்போம். கியூபா அமெரிக்காவின் காலடியில் சின்னதாக இருக்கும் ஒரு சோஷலிச நாடு. அந்நாட்டில் 1964 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படத்தில் ஒரு காட்சி தான் அது.
ஒரு மிகப்பெரிய சவ ஊர்வலத்தை கேமரா படம் பிடிக்கிறது. சாதாரணமாக சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் குழுமியுள்ள சவ ஊர்வலத்தில் ஆரம்பிக்கும் கேமரா மெதுவாக பின்னோக்கி நகர்ந்து மெல்ல உயர்ந்து மேலே செல்கிறது. அது கிரேன் ஷாட் போல உள்ளது. மேலே மேலெ உயரும் கேமரா ஜூம் எதுவும் செய்யாமல் அப்படியே காட்சியை பதிவு செய்கிறது.

ஆயிரக்கணக்கான மக்களை ஏரியல் ஷாட்டில் படம் பிடித்த கேமரா
ஆயிரக்கணக்கான மக்கள் சாலையின் கடைகோடி வரை மக்கள் செல்வதை காட்டுகிறது. பின்னர் கேமரா பக்கவாட்டில் நகர்கிறது. இங்கதான் ட்விஸ்டே கிரேன் ஷாட், ட்ரோன் கேமிராக்கள் இல்லாத காலக்கட்டத்தில் கயிறுகட்டி தூக்கி இருக்கலாம் என நினைக்கலாம். ஆனால் திடீரென பக்கவாட்டில் நகரும் கேமரா பக்கத்தில் உள்ள கட்டிடத்துக்குள் நுழைகிறது. அதுதான் அனைவரையும் பிரமிக்க வைக்கிறது.

ராம் கோபால் வர்மாவை பிரமிக்க வைத்து ஜாலம் காட்டும் கேமரா காட்சிகள்
பக்கத்து கட்டிடத்திற்குள் நுழைந்ததோடு அல்லாமல் முன்னோக்கி கேமரா நகர்கிறது இதுரை கேமரா யாரையும் ஜூம் செய்யவில்லை. பின்னர் முன்னோக்கி நகரும் கேமரா அங்கு அமர்ந்துள்ள மக்களை கடந்து ஜன்னல் நோக்கி செல்கிறது. அங்கு தயாராக இருக்கும் சிலபேர் கியூபா கொடியை பிரித்து ஜன்னல் வழியாக பறக்க விடுகின்றனர். ஜன்னலுக்கு வெளியே சவ ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் செல்வது மீண்டும் தெரிகிறது.
1964 ஆம் ஆண்டில் இப்படி ஒரு காட்சி எடுக்கப்பட்டது எப்படி- இம்பாசிபிள் ...ராம்கோபால் வர்மா
இப்ப கேமிரா ஜன்னல் வழியாக முன்னோக்கி செல்கிறது. மக்கள் கூட்டத்தின் மேலே பக்கவாட்டில் மாடியில் மக்கள் நிற்பதை படம் பிடித்துக்கொண்டே அந்தரத்தில் ட்ரோன் ஷாட் போல் சாலையை நோக்கி செல்கிறது. கீழே மக்கள் சவ ஊரவலத்தில் செல்வதை காண்பிக்கிறது. கிரேன் ஷாட், ட்ரோன் ஷாட் போல் எடுக்கப்பட்ட இந்தக்காட்சி அப்படிப்பட்ட வசதிகள் இல்லாத அதிக எடைக்கொண்ட பெரிய கேமிராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதுதான் ஒரு தொழில்நுட்ப கலைஞராக ராம்கோபால் வர்மாவை பிரமிக்க வைத்துள்ளது. இம்பாசிபிள் என அவரே சொல்கிறார் என்றால் அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதம் எவ்வளவு கடினமானது, நுணுக்கமானது என்று தெரியுது. ராம்கோபால் வர்மா அந்தக்காட்சியை பதிவிட்டு போட்ட ட்விட்டர் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











