twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திரையுலகத்தின் 'தாயுமானவர்' திரைப்பட பாடலாசிரியர் அறிவுமதியின் பிறந்த நாள் இன்று.. ரசிகரின் வாழ்த்து!

    |

    சென்னை: கவிஞர் அறிவுமதியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்து சதீஷ் என்ற அந்த ரசிகர் பதிவிட்டிருப்பதாவது,

    சிறுவயதில் வெறும் இசைக்காக மட்டும் பாடல்களை கேட்டு பழக்கப்பட்டிருப்போம். பாடல் வரிகளையோ, அதில் பொதிந்திருக்கும் அழகியல்களையோ , அதை எழுதியவர்கள் யாரென்பதையோ அவ்வளவாக அறிந்திருக்கமாட்டோம்.வயது கழிய கழிய அன்று கேட்ட அதே பாடல்களில் வரிகளின் இனிமை புலப்பட ஆரம்பிக்கும்.அந்த வரிகளின் நுண்ணர்த்தங்களை ரசித்து உணரும் நிலையில் அது புதிய ஒளியுடன் நம்மை ஈர்க்கும் .

    A fan wishing Poet Arivumathi on his birthday

    அதை எழுதியவர்கள் மீது மிகப்பெரிய பிரமிப்பும் மரியாதையும் வரும். அப்படி அறிமுகமாகிய பாடலாசிரியர்கள் வெறும் கவிஞர்களாக கலைஞர்களாக மட்டுமல்லாமல் உயர்ந்த குணம் படைத்த மனிதனாகவும் இருக்கும் பொருட்டில் அவர்கள் மீது ஏற்படும் அன்பும் மரியாதையும் அளப்பறியாதது. அப்படி பாடலாசிரியராக, கவிஞராக, இலக்கியவாதியாக அறிமுகமாகி உயர்ந்த மனிதமாக கண்டடைந்த ஒருவர் தான் கவிஞர் அறிவுமதி அவர்கள்.

    கருப்பு சேலையில் சிலை போல நின்று சிலிர்க்கவைக்கும் நிவேதா பெத்துராஜ்!கருப்பு சேலையில் சிலை போல நின்று சிலிர்க்கவைக்கும் நிவேதா பெத்துராஜ்!

    இசைக்கு அணியாய் தன்தமிழை ஆபரணமாய் சூட்டி அழகுபார்க்கும் பாடலாசிரியராய்,'நட்புக்காலத்தில்' ரசிக்கவைத்த, வலி புத்தகத்தில் உருகவைத்த hikoo கவிதைகளை படைத்த கவிஞராய் , உயிர்நட்பிற்காக தன் இயற்பெயரையே மாற்றிக்கொண்ட நட்பின் இலக்கணமாய் திகழ்பவராய் ,தமிழுக்காகவும் தமிழர் உரிமைக்காகவும் என்றும் உரத்த குரல் கொடுக்கும் ஒருவராய் , 73 அபிபுல்லா சாலையின் நிழல்தரும் ஆலமரமாய், இயக்குனர் பாலாவின் 'இவன் தான் பாலா ' , நா.முத்துக்குமாரின் 'வேடிக்கை பார்ப்பவன் ' போன்ற புத்தகங்களில் அவர்கள் எழுத்து வழியாக திரைக்குப் பின்னால் மிளிரும் பேரொளியாக அறிந்துகொண்ட ஒருவராய் , இவை அத்தனைக்கும் மேல் ஆண்டாண்டுகாலமாய் ஆங்கிலத்தில் மட்டுமே பிறந்தநாள் வாழ்த்துப்பாடி பழக்கப்பட்ட நமக்கு சர்க்கரைத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பா படைத்தவராய்.... இப்படி ஒவ்வொரு படிநிலைகளாய் அறிய அறிய அன்பின் ,பிரமிப்பின் , மரியாதையின் உச்சம் தொட்ட ஒருவர் தான் கவிஞர் அறிவுமதி அவர்கள் .

    A fan wishing Poet Arivumathi on his birthday

    தமிழ்மொழி மீது அத்தனை தீராக்காதல் கொண்ட ஒருவர் திரைப்பாடல்கள் இயற்றும்போது அங்கே தமிழ் எட்டிப்பார்க்கும் தொனியே அழகு.
    'ஆசை அகத்திணையா
    வார்த்தை கலித்தொகையா
    அன்பே நீ வா வா
    நம் காதல் குறுந்தொகையா'
    (படம் : சிறைச்சாலை
    பாடல் :ஆலோலங்கிளித்தோப்பிலே )
    'குறிலாக நானிருக்க நெடிலாக நீ வளர்க்க
    சென்னைத் தமிழ் சங்கத்தமிழ் ஆனதடி'
    (படம் :திருமலை
    பாடல் : அழகூரில் பூத்தவளே )
    'கண்களில் நெய்தல் கண்டேன்
    உன் கைவிரல் அழகினில் முல்லை கண்டேன் '
    (படம் : தெனாலி
    பாடல் : அத்தினி சித்தினி பத்தினி )
    'ஒரு வரி நீ
    ஒரு வரி நான்
    திருக்குறள் நாம்
    உண்மை சொன்னேன் '
    (படம் : பிரியாத வரம் வேண்டும்
    பாடல் : பிரிவொன்றை சந்தித்தேன் )
    இப்படி தமிழ்படிந்த அழகின் சாட்சிகள் இவை.அதுவும் அழகூரில் பூத்தவளே பாடலில் 'அழகூரில் பூத்தவளே' என்று பெண்ணை ஆண்வர்ணிக்கும் விதமாக ஆரம்பித்து, அதே பெண் ஆணை வர்ணிக்கும் போது 'அன்பூரில் பூத்தவனே' என்று முடித்த விதம் அத்தனை அழகு!
    கோடி வார்த்தை தமிழில் கொட்டிக் கிடந்தாலும் I miss you என்ற உணர்வை நேரடியாக வெளிப்படுத்த வார்த்தை ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.

    ஆனால் அந்த missing உணர்வை துளி கூட உணர்வு மாறாமல் கவிஞர்கள் வார்த்தை வழியாக நம்மிடம் கடத்திவிடுவார்கள்.
    'உயிர்சுனை ஊற்றிலே
    நெருப்பினை ஊற்றினாய்..
    பௌர்ணமி கோப்பையில்
    இருள் குடித்தாய்...
    நீர்க்குமிழ் மீதிலே
    கடல்சுமை ஏற்றினாய் '
    (படம் : பிரியாத வரம் வேண்டும்
    பாடல் :விடைகொடு விடைகொடு விழியே )
    சுரந்து கொண்டேயிருக்கும் நீரூற்றில் நெருப்பின் அனல் வாட்டுமென்றால்,வெளிச்சம் நிரம்பி வழியும் பௌர்ணமி கோப்பையில் இருள் கசியுமென்றால், காற்றில் உடைந்து போகும் அத்தனை இலகுவான ஒரு நீர்க்குமிழ் கடல் சுமை கனக்குமென்றால்...
    அவள் அவனை எத்தனை ஆழமாக தனக்குள் புதைத்திருக்கிறாள் என்பதற்கும் , அந்த ஆழத்தின் பாலத்தில் பிளவுபோல் வரும் பிரிவு தரும் வலி எத்தனை ரணம் என்பதற்கும், அந்த missing உணர்வு எத்தனை வதை என்பதற்கும் இந்த வரிகளே ஒற்றை ஊமை சாட்சி.

    இந்த மூன்று வரிகளுமே பாடலில் பெண்ணின் நிலையிலிருந்து ஸ்வர்ணலதா குரலில் ஒலிக்கும்.அந்தக் குரலில் உணரும் போது பிரிவின் துயர் இன்னும் ஆற்றமுடியா ரணம்.அந்த ரணத்தை வரிகளில் நம்மை உணரவைத்தவர் கவிஞர் அறிவுமதி அவர்கள்.73 அபிபுல்லாஹ் சாலை...அது வெறும் முகவரி மட்டும் இல்லை. கவிதை இறகுகளால் இணைந்து, உற்ற உறவுகளாக உயரப் பறந்து கூட்டாக வசந்தங்கள் வளர்த்த வண்ணத்துப் பறவைகளின் சரணாலயம். அந்த சரணாலயத்தின் உயிர்த்துடிப்பு கவிஞர் அறிவுமதி அவர்கள் .
    தமிழ் ருசிக்கும் , கலை ரசிக்கும் யாவரும் உரிமையுடன் ஒட்டிக்கொள்ளும் அந்த விசாலகுணம் கொண்டவருக்கு சர்க்கரைத் தமிழ் அள்ளி தாலாட்டு நாள் சொல்லி வாழ்த்துகிறேன். தமிழ் சினிமாவின் தாயுமானவருக்கு இனிய தாலாட்டு நாள் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    A fan wishing Poet Arivumathi on his birthday. Arivumathi celebrates his birthday today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X