For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'தலைவர்' விஷாலுக்கு ஒரு தயாரிப்பாளரின் கடிதம்!

  By Shankar
  |

  நாளொரு அதிரடி அறிவிப்புகள்.. பின் அது சரியில்லை என பின்வாங்கல்... ஒரு ஆணித்தரமான செயல்பாடு இல்லாமல் திணறுகிறது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

  ஜூன் முதல் தேதி முதல் படப்பிடிப்பு நடைபெறாது என அறிவித்த சங்கம், தயாரிப்பாளர்களுக்குள்ளேயே கிளம்பிய எதிர்ப்புகள், இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த தவறியதால் மற்ற சங்கங்களின் எதிர் நடிவடிக்கைகள் இவற்றால் இப்போது படப்பிடிப்புக்குத் தடையில்லை என்ற முடிவை அறிவித்துள்ளது சங்கம்.

  இந்த சினிமா உலகம் எத்தனை பசி வயிறுகளை உள்ளடக்கியது தெரியுமா? இன்று வேலை கிடைத்து சம்பளம் பெறுபவர்கள் மீண்டும் வேலையும், சம்பளமும் பெற நடுவில் ஒரு மாதமோ இரண்டு மாதமோ சும்மா இருக்க வேண்டியிருக்கும். மற்ற எல்லா துறைகளிலும் ஒரு நாள் வேலை தேடிவிட்டு வாழ்நாள் முழுக்க வேலை செய்யலாம். ஆனால் சினிமாவில் மட்டும்தான் தினமும் வேலை தேடி அலைவதைப் பார்க்க முடியும்.

  A letter to Vishal

  எத்தனை சங்கங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் தயாரிப்பாளர் சங்கம்தான் தாய் சங்கம். ஒரு தாய் எடுக்கும் முடிவு மற்றவர்களின் சுகதுக்கங்களை சீர்தூக்கி பரிசீலித்து எடுக்க வேண்டியது மிக மிக அவசியம்.

  அவ்வாறு செய்யும்போது அனைத்து சங்கங்களையும் அழைத்து முறையாகப் பேசி இந்த முடிவு அவசியம் என்பதை வலியுறுத்தி சம்மதம் பெற்று அறிவித்திருக்க வேண்டியது. அல்லது அறிவித்துவிட்டோம்.. என்ற பின்பாவது அழைத்துப் பேசி சம்மதம் பெற்றிருக்கலாம். இப்போது வந்திருக்கிறது பின்வாங்கல் அறிவிப்பு.
  உபரி இணைப்பாக மேலும் சில புதிய சாத்தியமற்ற திட்டங்களின் அறிவிப்பும் வந்திருக்கிறது.

  அதாவது இணையதளங்களில் டிக்கெட் விற்கும் தளங்களுக்குப் போட்டியாக தயாரிப்பாளர் சங்கமே அதே போன்றதொரு தளத்தை நடத்தும் என்றும்,
  திருட்டி விசிடியைத் தடுக்க ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றும், கேபிள் டிவியில் புதுப்படம் வெளியாவதைக் கண்காணித்துத் தடுக்க ஆங்காங்கே மினி அலுவலகங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்க நிர்வாகக் குழு.

  நல்ல எண்ணங்கள். ஆனால் சாத்தியமற்றவை.

  இங்கும் கூட்டு ஆலோசணை இல்லாமல் தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  டிக்கெட் விற்கும் இணையதளங்கள் கிட்டத்தட்ட 200 கோடிகளிலிருந்து 600 கோடி வரை முதலீடு செய்திருக்கின்றன. இத்தகைய பெரும் முதலீடு நமது சங்கத்தில் சாத்தியமா?

  மேலும் வீட்டிலிருந்து படம் பார்க்கக் கிளம்பும் ஒரு குடும்பம் திரையரங்கு சென்று டிக்கெட் இல்லாமல் திரும்புவதைத் தடுக்கிறது. சென்று திரும்பும் நேரம் பண விரயத்தைத் தடுக்க அவர்கள் அதிகமா செலவிடும் 30 ரூபாயை பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் அதைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நமது சங்கத்தின் மூலம் இணையதள டிக்கெட் விற்பதாலோ அதிகபட்சம் என்ன நடந்துவிடும்?

  A letter to Vishal

  சங்கம் வியாரிகளை அதிகமாக உருவாவதை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர,
  முட்டுக்கட்டை போடக்கூடாது. அந்த இணைய தளங்களின் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடப்பதாக அறிந்தால் அதை முறைப்படுத்தலாம். அல்லது மேலும் பல இணையதளங்களை போட்டியாக களமிறக்க ஆவண செய்யலாம். போட்டி அதிகமாகும் பட்சத்தில் சில இணையதளங்கள் குறைந்த கட்டண சதவீதத்தை எடுத்துக்கொண்டு டிக்கெட் விற்க முன் வரலாம். ஆனால் ஒன்று இந்த இணையதளங்களை இணைக்கும் அல்லது கண்காணிக்கும் பாலமாக ஒரு தளத்தை நிறுவலாம். அது பயனுள்ளதாக இருக்கும்.

  பல வியாபாரிகள் இருப்பதுதான் தயாரிப்பாளர்களுக்கு வருமானத்தைப் பெருக்கும் என்பதை உணர்ந்துகொள்ளுதல் முக்கியம்.

  பல திரையரங்குகளில் கூடும் கூட்டத்திற்கும் பின் தயாரிப்பாளரிடம் சொல்லப்படும் கணக்குக்கும் நிறைய வித்தியாசம் வருகிறது. இதைக் கணினி முறைப்படுத்த வேண்டும். இங்குதான் தயாரிப்பாளர்கள் பெரும் நட்டத்தையும் இழப்பையும் சந்திக்கிறார்கள். அதை சரிசெய்தாலே போதும். பாதி பிரச்சனைகளிலிருந்து மீண்டுவிடலாம். என் படத்திற்கு பத்து டிக்கெட்தான் விற்றது என்ற உண்மை நிலவரமாவது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரை அடையவேண்டும். அது அவர்கள் ஆறுதல் கொள்ள வழிவகுக்கும்.

  இணையதள டிக்கெட் விற்பனையை அதிகப்படுத்துங்கள். அதைக் கண்காணிக்கும் லகானைக் கையில் வையுங்கள். இதுவே சாலச் சிறந்த முடிவாக இருக்கும்.
  கேபிள் டிவியை கண்காணிக்கும் அலுவலகம் அமைப்போம் என்கிறீர்கள். எல்லா கேபிள் டிவிகளும் லோக்கல் அரசியல்வாதிகளால் நடத்தப்படுகின்றன. அலுவலகங்களுக்கும் அலுவலர்களுக்கும் உரிய பாதுகாப்பு இருக்குமா என்ற கேள்விக்குறி மிகப் பெரியதாக முன் நிற்கிறது. இது உயிர்ப் பலிகள் வரை கூட போய் நிற்கலாம் என்ற எதிர் சிந்தனையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் வைத்திருக்கும் பாதுகாவலர்கள் என்னைக்கூட பயந்துகொண்டே மிரட்டுபவர்களாக இருக்கிறார்கள். எப்படி லோக்கல் ஆட்களை சமாளிப்பார்கள் என்று தெரியவில்லை.
  அதற்குப் பதிலாக கேபிள் டிவி நடத்துபவர்களை அழைத்து முறையான பேச்சு வார்த்தைகளும், முறையான விதிமுறைகளையும் உருவாக்கித் தந்தால் தயாரிப்பாளர்களுக்கும் ஏதோவொரு வருமானத்துக்கும் வழிவகுக்கும். அலுவலகங்கள் அமைக்கும் செலவு, ஊழியர்களுக்கு சம்பளம் போன்றவையும் மிச்சப்படும்.

  திருட்டி விசிடி இணையதளங்களில் படம் திருட்டுத்தனமாக வெளியிடுவதைத் தடுக்க அரசின் உதவி கண்டிப்பாக தேவை. அரசின் கனிவு இல்லையென்றால் இந்த இரண்டும் சாத்தியமில்லை. அனைத்து சங்கங்களும் ஒன்று கூடிப் பேசி தாயாய்ப் பிள்ளையாய் இணைந்து நின்று அனைவரும் ஒரு பெரும் பேரணியாய் திரண்டு சென்று கோரிக்கை வைத்து ஆள்பவர்களை சாதகமாக்க அல்லது சாத்தியமாக்க முயற்சிக்கலாம். இத்தகைய முறையில் சினிமாவை சிதைப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு கிடைத்தால் போதும்.

  தாய் சங்கம் எல்லா சங்கங்களையும் அரவணைத்துப் பேசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது. எல்லோரின் ஆதரவையும் பெறுங்கள். அப்போதுதான் இவைகளை ஒழிக்கும் சாத்தியம் பிறக்கும்.

  எடுத்த உடனே வேலை நிறுத்தம் என்பது அரசாங்கத்தின் கவனத்தை அசைக்காது. மாறாக, உங்களை செயலிழக்கச் செய்யும் இயந்திரமாக அது மாறக்கூடும்.
  தன்னிச்சையாக நீங்கள் அறிவிக்க ஒரு அறிவிப்பு உள்ளது. அதை ஒரு நடிகராக தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக செய்ய முடியுமா பாருங்கள்..
  ஒரு நடிகர் சம்பளம், வருகிற போகிற செலவு, தங்கும் செலவு, உணவு என எல்லாவற்றையும் தயாரிப்பாளர்களே கொடுத்துவிடுகிறார்கள். பேசும் கோடிகளிலான சம்பளத்தில் ஒரு பைசா செலவில்லாமல் அப்படியே எடுத்துப் போகிறீர்கள்.
  ஆனால் நீங்கள் பயன்படுத்தும் கேரவேனுக்கான பணத்தை நீங்களே செலுத்தலாமே?
  நீங்கள் உங்களுக்கு மேக்கப் போடும் நீங்கள் கைகாட்டும் அந்த மேக்கப் மேனுக்கான செலவை நீங்களே ஏற்கலாமே? நீங்கள் வாங்கும் சம்பளத்திற்கான வரியையும் சேவை வரியையும் நீங்களே செலுத்தலாமே?

  நடிகர்கள், உங்களுக்கு புகழையும் பதவியையும் கொண்டு சேர்க்கும் இந்த சினிமாவுக்கு நீங்கள் செய்யும் பதில் நன்றி என்ன?

  கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இந்த சிறு செலவை ஏற்றுக்கொள்வது சுலபம். இதன் மூலம் பெருமளவு தயாரிப்புச் செலவு குறையும்.
  என்னதான் மேக்கப் யூனியன் கண்கொத்திப் பாம்பாக செயல்பட்டாலும் பல நடிகைகள் மும்பை இறக்குமதி ஆட்களுக்கு ஒரு நாள் சம்பளமாக பல ஆயிரங்களையும் விமானச் செலவையும் அள்ளிக் கொடுத்து அலங்கரித்துக்கொள்கிறார்கள். இது எத்தனை இலட்சங்களை கபளீகரம் செய்கிறது தெரியுமா?? இதை நடிகைகளே ஏற்கவேண்டும் என அறிவியுங்கள்.

  இந்த அறிவிப்பை முன்னோடியாக நின்று முதல் ஆளாக நீங்கள் அறிவியுங்கள்..
  எனது கேரவேனுக்கு நானே பணம் செலுத்துவேன். என் உதவியாளர்களுக்கு நானே சம்பளம் தருவேன். வரியையும், சேவை வரியையும் தயாரிப்பாளர்களை கட்டச் சொல்ல மாட்டேன்.. என அறிவியுங்கள்.

  கோடிகளில் அல்லது அம்பது இலட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் அனைத்து நடிகர்களையும் நடிகைகளையும் அறிவிக்கச் செய்யுங்கள் போதும்.
  அனைத்துத் தயாரிப்பாளர்களும் மகிழ்வார்கள். இந்த முடிவும் நடிகர்களின் சம்பளக்குறைப்புமே தயாரிப்பாளர்களுக்கு மிகப் பெரிய ஆறுதலாக அமையும். தொடங்கி வைப்பாரா தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், நடிகர் சங்கச் செயலாளருமான திரு. விசால்?

  எதிர் நோக்குகிறேன் ஆவலாய்!

  -சுரேஷ் காமாட்சி

  இயக்குநர் & தயாரிப்பாளர்

  English summary
  Producer & Director Suresh Kamatchi's letter to Producer Council President Vishal.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X