For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - சகலகலா வல்லவன்

  By Ka Magideswaran
  |

  -கவிஞர் மகுடேசுவரன்

  சகலகலா வல்லவன் வெளியானபோது அதன் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. ஒரு திரைப்படத்தின் பல்சுவைத்தன்மையான பாடல்களுக்கு அப்படத்தின் பாடல் தொகுப்பு நல்லெடுத்துக்காட்டு. ஏவிஎம் நிறுவனத்திற்கு இசைத்துக்கொடுத்த பாடல்களில் எல்லாம் இளையராஜாவிடமிருந்து கூடுதல் கவனம் வெளிப்பட்டிருப்பதைக் காணலாம்.

  முரட்டுக்காளையின் பாடல்களில் வழக்கமான சூழல்தன்மை இருந்தது. அதற்கு மாறாக, சகலகலா வல்லவனின் பாடல்களில் துள்ளலும் கொண்டாட்டமுமே நெஞ்சை அள்ளின. திரைப்படத்தின் ஐந்தாறு பாடல்களில் ஒன்று சோகப்பாடலாக இருப்பது வழக்கம். சகலகலா வல்லவனில் சோகப்பாட்டே இல்லை. படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் முதல்பாட்டே திருவிழாக்கொண்டாட்டமான “அம்மன் கோவில் கிழக்காலே… அன்னவயல் மேற்காலே…” என்னும் பாடல்தான்.

  a movie of celebration sakalakala vallavan

  சகலகலா வல்லவன் வெளியான காலகட்டம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அரைக்கால் சட்டையணிந்த என் சிறுவம். திருப்பதிக்குச் செல்வதற்காக சேலம் நகரத்தின் திருவள்ளுவர் பேருந்து நிலையத்திற்குப் போகிறோம். அவ்வழியில் இருந்த திரையரங்கத்தின் பெயர் 'சென்ட்ரல்’ என்பதாக நினைவு. அத்திரையரங்கின்முன் சாலை கொள்ளாத அளவுக்குக் கூட்டம்.

  அரங்கின் முகப்பில் “இளமை இதோ இதோ…” பாடும் கமல்ஹாசனின் குறுந்தாடிப் படம். அதற்கு மாலைகள். கூட்டம் தேங்கி நில்லாமல் அரங்கிற்குள் நுழைவதற்காக முயன்று ஏறிக்கொண்டிருந்தது. எப்படியோ அந்தக் கூட்டத்தை விலக்கி எங்களை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நகர்ந்தார் என் தந்தையார். சகலகலா வல்லவன் திரைப்படத்திற்காக ஓர் அரங்கின் முன்னம் கூடியிருந்த கூட்டத்தைக் கண்டு அன்று மலைத்தது உண்மை.

  சிறிது காலம் திரைப்படம் எடுத்தலை நிற்பாட்டி வைத்திருந்த ஏவிஎம் நிறுவனம் மீண்டும் படமெடுக்க நுழைந்தபோது அவர்கள் தேர்ந்தெடுத்த முதன்மை நடிகர்கள் இரஜினிகாந்தும் கமல்ஹாசனும். திரைத்துறையின் பெருநிறுவனமான அவர்கள் களத்திலுள்ள முதன்மை நடிகர்களை வைத்துத்தான் தம் படங்களை எடுத்தாக வேண்டும். சந்தை மதிப்பில்லாத இரண்டாம் நிலை நாயகர்களை வைத்துப் பெரும்பொருட்செலவிலான படங்களை எடுப்பது அறிவுடைமை ஆகாது. எம்ஜிஆர் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலில் வெற்றி பெற்றுவிட்டார். சிவாஜியோ தம் அகவைக்கேற்ற வேடங்களில் மட்டுமே நடித்தார். அத்தகைய நிலையில் உறுதியான சந்தை மதிப்புடைய பெரிய நடிகர்கள் உருவாகியிருக்கவில்லை. அதனாலேயே ஏவிஎம், தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் படமெடுத்தலைத் தள்ளிப் போட்டிருந்தன.

  சிறிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் புற்றீசலைப்போல் வெளியாகின. அவற்றில் கதைவலுமிக்கவை வெற்றி பெறுவதும் பிற படங்கள் தோற்றுப்போவதும் தொடர்கதையாயின. அந்நிலையில்தான் கமல்ஹாசனும் இரஜினிகாந்தும் புதிய கதாநாயகர்களாக வளர்ச்சிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்கள். இருவரும் சேர்ந்தும் பிரிந்தும் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. இந்தித் திரையுலகில் முரட்டுக் கதாநாயகர்கள் முன்னணிக்கு வந்த போக்குக்கொப்ப தமிழில் இரஜினிகாந்த் முன்னேறிக்கொண்டிருந்தார். மேல்வகுப்பு மக்களின் நாயகரான கமல்ஹாசன் கல்யாணராமனின் வெற்றிக்குப் பிறகு அனைத்துத் தரப்பினராலும் விரும்பி ஏற்கப்பட்டவரானார். புதிய வரவுகள் பெறுகின்ற வெற்றியால் நலிவிலிருந்து திரைத்தொழில் மீட்கப்பட்டிருக்கிறது என்பதை ஏவிஎம் நிறுவனத்தினர் விளங்கிக்கொண்டனர்.

  ஏவிஎம்மின் அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் திரைத்தொழிலில் ஈடுபட முன்வந்தனர். அவர்களுடைய தேர்வுதான் இரஜினிகாந்தும் கமல்ஹாசனும். இரஜினிகாந்தினை வைத்து முரட்டுக்காளை என்னும் பெருவெற்றிப் படத்தை எடுத்து முடித்தவர்கள் கமல்ஹாசனுக்கு அதனை விஞ்சிய ஒரு படத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள். அந்தப்படம்தான் சகலகலா வல்லவன். இரஜினிகாந்திற்கு மக்களிடத்தில் இருந்த மனப்பதிவு முரடன், அடிதடிக்கு அஞ்சாதவன், பாசத்திற்குக் கட்டுப்படுபவன் என்பதுதான். அதை அப்படியே முரட்டுக்காளை நாயகனின் பண்புகள் என்றாக்கினர். அழகன், ஆடல்பாடல்களில் வல்லவன், காதலால் பெண்மனத்தை வெல்பவன், கலைகள்பல அறிந்தவன் என்னும் மனப்பதிவு கமல்ஹாசனைப் பற்றியது. அதையே சகலகலா வல்லவனில் வேலு என்பவனின் குணநலன்கள் ஆக்கினர். ஒரு படத்தின் வெற்றிக்கு அதன் வெளிப்போக்குகளோடு ஒத்திசைந்து எவ்வளவு நுணுக்கமாய்த் திட்டமிட்டு உழைக்கிறார்கள், பாருங்கள் !

  நேர்மையான கிராமத்து இளைஞன் வேலு, தாய் தந்தை தங்கை என்று அளவான குடும்பம், அவனுக்கு அவ்வூர்ப் பண்ணையாரம்மாவுடன் முரண்பாடு, அதை மனத்திற்கொண்டு பண்ணையாரின் மகன் வேலின் தங்கையைக் கெடுத்துவிடுவது, தங்கைக்குப் பண்ணையாரின் மகனையே கட்டிவைக்கும் பொருட்டு வேலு அமெரிக்க நாகரிக இளைஞனாக வேடமிட்டு ஏமாற்றுவது, அம்முயற்சியில் பண்ணையாரின் மகள் கீதா வேலிடம் காதற்படுவது, இருவர்க்குமான திருமணம், திருமணத்தின் பின்னர் ஏற்படும் கட்டில் ஊடல்கள், இறுதியாய் இடர்கள் யாவும் தீர்ந்து ஏற்படும் நல்முடிவு – இதுதான் சகலகலா வல்லவனின் கதை.

  முழுக்க முழுக்க கமல்ஹாசனின் திறன்களை வைத்தே எடுத்துச் செல்லப்பட்ட முழுநீளப்படம். சிருங்கார இரசத்திற்கு என்றைக்கும் எடுத்தாளத்தக்க இரண்டு பாடல்கள். நேத்து இராத்திரி யம்மா, நிலா காயுது நேரம் நல்ல நேரம். புத்தாண்டின் இரவில் தவறாது ஒலிக்கும் பாடல் “இளமை இதோ இதோ…!” அந்தப் பாட்டில் புத்தாண்டுக்குரிய எந்த வாழ்த்தும் இருப்பதில்லை. நாயகனின் திறன்களே எடுத்துக் கூறப்படும். பாடலுக்கு முன்பாக வசனமாக வாழ்த்து சொல்லப்படும். ஆனால், அந்தப் பாட்டு இன்றைக்கும் நமக்குப் புத்தாண்டு வாழ்த்துப் பாட்டுத்தான்.

  சகலகலா வல்லவனில் எல்லாரும் களித்துப் பார்த்த பகுதி அதன் இரண்டாம் பாகத்தில் வரும் வேலு-கீதா கட்டிலறை விளையாடல்கள்தாம். “ஆனது ஆகிவிட்டது… நான் காதலித்த பழைய சாம் ஆகவே நீ மாறிவிடு… நாம் சேர்ந்து வாழலாம்...” என்று கீதா இறங்கி வருகிறாள். “அது இயலாது. நீ என்னோடு கிராமத்துக்கு வந்து அந்த வாழ்க்கையை வாழ்வதற்கு ஒப்புக்கொண்டால்தான் நமக்குள் எல்லாம்…” என்பது வேலின் பிடிவாதம். அவ்வாறான உரையாடல்களோடு உரசல், தீண்டல், கால்போடல் என்று கட்டிலறைக் காட்சிகள் தொடரும். ஒரு கட்டத்திற்கு மேல் தன்னால் பொறுக்க இயலாமல் வேலு கூறியவாறே ஊர்ப்புறத்திற்கு வருவதாக கீதா ஒப்புக்கொள்வாள். அந்த ஒப்புதலுக்குப் பிறகு வேலு அவளை அணைக்கச் சென்று தயங்கிப் பின்வாங்குவான். “எனக்கு ஒரு சந்தேகம்… நீ இப்ப வரேன்னு சொல்லி உன் ஆசையெல்லாம் தீர்த்துக்கிட்டு அப்புறம் கிராமத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டீன்னா ?” என்பது வேலின் கேள்வி. அதற்குக் கீதா கூறும் பதில்தான் அந்தக் காட்சிகள் அனைத்தையும் அவற்றின் விரசரசத்தைத் தாண்டி ஏற்புடையதாக்குவது. “யோவ்… இதெல்லாம் ஒரு நாளில் தீர்ந்து போகிற சமாச்சாரமா ?” என்பாள் அவள். “ஆமாமா… நான் ஒரு மடையன்…” என்றவாறே மனைவியை அணைவான் வேலு.

  தொடங்குவதும் தெரியாமல் முடிவதும் தெரியாமல் தொய்வின்றி முழு வீச்சில் கதைகூறும் திரைப்படங்கள் ஐயத்திற்கிடமின்றி வெற்றி பெறுகின்றன. சகலகலா வல்லவன் அத்தகைய திரைப்படம். நாடகப் பாங்கு மிகுந்த எளிய வணிகக் கதைதான். ஆனால், அப்படம் பெருந்திரளான மக்களுக்குப் பிடித்துப் போயிற்று. கமல்ஹாசன் என்னும் பன்முக ஆற்றல்மிக்க நாயகனால்தான் சகலகலா வல்லவனைப்போன்ற ஒரு படத்தைத் தரமுடியும். சகலகலா வல்லவன்தான் உதிரிப்பூக்கள் போன்ற படங்களின் வரவைத் தடுத்து நிறுத்தி மக்களின் இரசனைப்போக்கை மாற்றிவிட்டது என்று குறைகூறுவோர் உளர். கலைவெற்றி என்பது விட்டுக்கொடுப்பதன் வழியாக ஈட்டப்படுவதன்று. மக்கள் மனங்களைக் கவர்வதன் வழியாக ஈட்டப்படுவது. ஒன்றுக்கு இன்னொன்று தடையாகாது. கலைகள் கொண்டாட்டத்தின் பெருவழியில் சென்றால் அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.


  English summary
  Article about the movie of celebration sakalakala vallavan
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X