twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாசத்துக்குரிய பங்காளி வடிவேலுவுக்கு ஒரு கடிதம்!

    By Shankar
    |

    வடிவேலு - ஆட்சியும் வீழ்ச்சியும்...

    பத்திரிகையாளர்களுடன் நெருக்கமான அன்பையும் நட்பையும் எப்போதும் வைத்திருக்கும் திரைப் பிரபலங்களில் வைகை ப்புயல் வடிவேலுவும் ஒருவர். அதுவும் "வாங்க பங்காளி " என்று அவர் அழைக்கும் அன்பில் யாரும் உருகிப் போவார்கள். அவர் படங்களை இப்போது அதிகம் பார்க்க முடியாமல் இருப்பது ரசிகர்களைபோலவே மீடியாவில் இருப்பவர்களுக்கும் பெரிய வருத்தமே.

    இப்போது எலி படத்தில் அவர் நடிப்பதாக அறிவிப்பு வந்திருப்பதில் எல்லோருக்கும் மகிழ்ச்சியே.

    இன்று வடிவேலு இருக்கும் நிலைக்கு முழுக்க முழுக்க வடிவேலு மட்டும்தான் காரணமே தவிர, வேறு யாரும் இல்லை. அதற்கு சாட்சியான சில சம்வங்களைப் பார்க்கலாம்.

    இன்று வரைக்கும் வடிவேலுவின் சினிமா வரலாற்றில் அவர் கதையின் நாயகனாக நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் இம்சை அரசன் 23 ம் புலிகேசிதான். ஆனால் அதற்கு கதையில் இருந்த தொடர்ச்சியான காமெடி பெரிய பலமாக இருந்தது. அதோடு வடிவேலுவின் வெள்ளந்தியான நடிப்பும் படத்திற்கு பலம் கூட்டியது. ஆனால் இந்த உண்மையை மறந்து படத்தின் இந்த இமாலாய வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்ற எண்னம் வடிவேலுவுக்குள் எழ ஆரம்பித்தது. அங்கிருந்து தொடங்கியது அவரின் திரைச்சரிவு.

    A open letter to actor Vadivelu

    அந்த அதீத நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்திரலோகத்தில் நா.அழகப்பன் என்ற படம். ஆனால் அந்த படம் எடுக்கத் தொடங்கியதிலிருந்து இயக்குனராக தம்பி ராமையாவிற்கு வடிவேலு மூலம் கொடுக்கப்பட்ட நெருக்கடி தலையீடுகள் எண்ணிலடங்காதவை. காமெடியாக உருவாக்கப்பட்டிருந்த முழுக்கதையையும் மாற்றி தன்னை ஒரு ஹீரோவாகவே காட்ட வேண்டும் என்று பெரும் நெருக்கடி கொடுத்தார் வடிவேலு. ஆனால் தம்பி ராமையா 'பங்காளி முழு ஹீரோவாக நீங்கள் நடித்தால் மக்கள் ரசிக்க மாட்டார்கள். காமெடியனாக இருந்தால்தான் சிறப்பாக இருக்கும்' என்று சொல்லியும் அவரின் தலையீட்டால் படம் பப்படம் ஆனது. பெரும் கேலிக்குள்ளானது. இதில் பாதிக்கப்பட்டது வடிவேலு அல்ல. மீண்டும் தனக்கு இயக்குநராக வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பில் படமெடுத்த இயக்குநர்தான் பாதிக்கப்பட்டார்.

    அதன் பிறகு வடிவேலு சிங்கமுத்து பஞ்சாயத்து பரபரப்பானது. ஒட்டு மொத்த மீடியாக்களும் வடிவேலுவுக்கு ஆதராவாகத்தான் இருந்தன. தனக்கு நெருக்கமான வார இதழ் நிருபரிடம் வடிவேலுவே "பங்காளி நீங்க எழுதுன பேட்டிதான் எனக்கு பெரிய உதவியா இருந்துச்சு" என்று மனம் திறந்து கூறினார். அப்படியிருந்த வடிவேலு அடுத்த செய்த தவறுதான் அவரின் சினிமா வாழ்க்கையையே கேள்விக்குறியாக மாற்றி விட்டது.

    சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக அவர் புறப்படத் தயாராக இருந்தபோது, அந்த நெருக்கமான நிருபர் அவருக்கு போன் செய்து "அண்ணே கொஞ்சம் யோசிங்கண்ணே.. கலைஞர்களுக்கு அரசியல் தேவையில்லைண்ணே. இப்போதைக்கு கூட்டம் கூடுவதைப் பார்க்கும்போது சின்ன சபலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் அதன் முடிவு உங்களை ஏதோ ஒரு கட்சிக்கு எதிரியாக உட்கார வைத்து விடும்" என்று சொன்னார். ஆனால் அதைக் கேட்கும் நிலையில் வடிவேலு இல்லை. ஆனால் முடிவு அந்த நிருபர் சொல்லி வைத்தது போலவே அமைந்தது. பாவம் திமுகவின் அரசியல் லாபத்திற்காக தன்னுடைய சினிமா கேரியரை இழந்து நின்றார் வடிவேலு.

    A open letter to actor Vadivelu

    ஆனால் எந்தக் கட்சிக்காக அவர் தெருத் தெருவாக அலைந்து வாக்குச் சேகரித்தாரோ அந்த கட்சியின் குடும்பத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சினிமாக்களிலும், அந்த குடும்பத்து உறுப்பினரான உதயநிதி தான் நடிக்கும் படித்திலும் சந்தானத்திற்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்களே தவிர, தங்கள் கட்சிக்கு பாடுபட்ட வடிவேலுவுக்கு எந்த வாய்ப்பும் தரவில்லை. இதுதான் அரசியல் என்று எல்லோருக்கும் தெரிந்திருந்து, வடிவேலுக்கு சொல்லியும் அவர் கேட்கவில்லை.

    அதன் பிறகும் நடந்த சம்பவங்கள் இன்னும் மோசமானவை. சினிமா கொஞ்சம் கொஞ்சமாக வடிவேலுவைப் புறக்கணிக்க ஆரம்பித்தது. அந்த நிலையிலும் அவர் தனக்கான கேரியரைத் தவற விடும் காரியத்தில்தான் இருந்தாரே தவிர, இம்மியளவு கூட தன்னை மாற்றிக் கொள்ளவில்லை. தன்னைத் தேடி வந்த சில படங்களையும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று நடிக்க மறுத்து திருப்பி அனுப்பினார். அதற்கும் தயாராக இருந்த சிலருக்கு தன்னுடைய சம்பளமாக பல கோடிகளைக் கேட்டு அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி அனுப்பி வைத்தார்.

    அப்போதும் அவருக்கு நெருக்கமான அந்த பத்திரிகையாளர் மீண்டும் அக்கறையோடு "அண்ணே எனக்கு ஒரு ஐடியா தோணுது.. நீங்கள் புலிகேசி படத்தோட செகண்ட் பார்ட்டில் நடிக்கலாமே" என்று யோசனை சொல்ல அது அவருக்கு பளிச்சென்று உரைத்திருக்கிறது. "ஆமா பங்காளி நல்ல ஐடியாவாக் இருக்கு" என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அங்கும் சம்பளம் பஞ்சாயத்து நடந்தது.

    ஆனால் அதற்குள் தெனாலிராமன் ஐடியாவை வைத்துக்கொண்டு ஒருவர் வந்து அவருக்கு சம்பளத்தையும் அதிகப்படுத்தி பேச அதற்கு ஒப்புக்கொண்டு விட்டார் வடிவேலு. இந்த தகவல் அந்த நிருபருக்கு போய் அவர் தெனாலிராமன் கதையில் நடித்தால் ஏற்படும் சாதக பாதகங்களை எடுத்துச் சொன்னார்.

    "அண்ணே முதலில் இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து விட்டு அப்புறம் இந்த படத்தில் நடிக்கலாம். காரணம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தின் கதை முழுதும் எனக்கு தெரியும். முதல் பார்ட்டை விட அசத்தலான காமெடி இருக்கு.

    இப்போ தெனாலிராமன் வந்தால் புலிகேசி மாதிரி இல்லைன்னு ஒரு பேச்சு வரும். காரணம் தெனாலிராமன் கதை சின்ன குழந்தைகள் வரைக்கும் படிக்கும் பாடமாக பள்ளிக்கூடத்தில் இருக்கிறது. அதனால் சுவராஸ்யம் குறைவாக இருக்கும். அதனால் புலிகேசி 2-ல் நடித்தால் இன்னும் பெரிய வெற்றி கிடைக்கும். அதன் பிறகு வேண்டுமானால் தெனாலிராமனில் நடிக்கலாம்... இப்போது தெனாலிராமன் தோற்று விட்டால் மீண்டும் நீங்கள் சரித்திரப் படத்தில் நடிக்க முடியாமலே போய் விடும்" என்று சொல்லியும் சம்பளம் அதிகமாக கொடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக தெனாலிராமனில் நடிக்க ஒப்புக்கொண்டார்.

    படம் வெளிவந்தவுடன் வடிவேலுவின் பக்கத்தில் இருக்கும் நண்பர்களே அந்த நிருபருக்கு போன் செய்து "அண்ணே நீங்க சொன்ன் மாதிரியே நடந்து போச்சுண்ணே... நல்லது சொன்ன கேடக் மாட்டேங்குறாரேண்ணே" என்று வருத்தப்பட்டார்கள் என்பது வைகை புயலுக்கே தெரியாத உண்மை.

    இப்போது அதே கதாநாயக கனவுடன் எலி படத்தை அறிவித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற்று மீண்டும் அவர் கோடம்பாக்கத்தில் கோலோச்ச வேண்டும் என்பதுதான் நமது ஆசை.

    ஆனால் அவர் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் உணர மறுக்கிறார். அவரை ரசிகர்கள் பல வித கெட்டப்புகளில் ரசித்து கைத்தட்டியது எல்லாமே சிறு முதலீட்டுப் படங்களில் கதைக்கு இடையில் அவர் செய்த காமெடி வேடங்களைத்தான். அது மாதிரியான கேரக்டர்களைத்தான் மக்கள் ரசிக்க விரும்புகிறார்களே, தவிர அவர் ஹீரோவாக வந்து பஞ்ச் டயலாக் பேசும் காட்சிகளை அல்ல. இந்த உண்மையை எலி படமும் அவருக்கு உணர்த்தும்.

    என்.எஸ்கிருஷ்ணன், தங்கவேலு, சந்திரபாபு, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் என்று எத்தனையோ காமெடி ஜாம்பவான்கள் மக்களை சிரிக்க வைப்பதிலும் திரையுலகிற்கு தங்களை அர்ப்பணிப்பதிலும் மட்டும்தான் கவனம் செலுத்தினார்களே தவிர, பாவம் எல்லோரும் சம்பாதிப்பதில் கோட்டை விட்டனர். ஆனால் அவர்கள் இந்த உலகில் இல்லாவிட்டாலும் மக்கள் மனதில் குடியிருக்கிறார்கள்.

    வாழும் காலத்திலேயே புகழ் மங்கிப் போய் விடாமல் நாளை நாமும் எப்படி நினைவு கொள்ளப்பட வேண்டும் என்பதை இன்று நாம் நடந்து கொள்வதுதான் தீர்மானிக்கிறது என்பதை பாசத்திற்குரிய பங்காளி புரிந்து கோள்ள் வேண்டும் என்பதே நமது ஆசை. வீழ்ச்சிக் காலம் முடிந்து திரையுலகில் அவர் ஆட்சிக் காலம் மீண்டும் தொடங்கட்டும்!

    -தேனி கண்ணன்

    English summary
    Theni Kannan's open letter to comedy actor Vadivelu and his recent announcement Eli.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X