twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த வெற்றிடத்தை நிரப்புவது யார்?

    By Shankar
    |

    - கவிஞர் மகுடேஸ்வரன்

    எம்ஜிஆர், சிவாஜி என்னும் இரண்டு பெரும் நாயகர்களோடு திரையுலகம் சிறப்பாகச் செயல்பட்டபோது அவர்களுக்கு நம்பியார், பி.எஸ். வீரப்பா, அசோகன், ஆர்.எஸ். மனோகர், எஸ்.வி. இராமதாஸ் போன்ற கனமான எதிர்நாயகர்கள் அமைந்தார்கள். நாயகப்பான்மையை முன்னிறுத்தி எடுக்கப்படுகின்ற கதைகளில் எதிரியாய் வருகின்றவர் நாயகனுக்கு நிகராகவோ, நாயகனை விஞ்சிய வலிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும். அப்போதுதான் நாயகனின் எதிர்ப்போராட்டத்திற்கு அழுத்தம் கிடைக்கும். படம் சூடுபிடிக்கும். "நல்ல வில்லன் பாத்திரம் அமைந்துவிட்டாலே போதும், படம் பாதி வெற்றி," என்பார்கள். சண்டைக்காட்சியில் நடிக்கின்ற பெயர் தெரியாத கலைஞரும்கூட நாயகனை வலுவாக எதிர்த்து அடிவாங்கி விழவேண்டும். இல்லையெனில் நாயகப் பண்புகளுக்கு வலிமை சேராது. அரங்காராவ், தங்கவேலு, வி.கே. இராமசாமி போன்ற நகைச்சுவை நடிகர்கள்கூட பற்பல திரைப்படங்களில் எதிர்நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். நாகேஷ், கவுண்டமணி போன்றவர்களும் தீயவர்களாய் நடித்திருக்கிறார்கள். அப்படங்களும் விரும்பிப் பார்க்கப்பட்டன. குடும்பக் கதையில்கூட எதிர்மறைக் குணப்பாங்குள்ள ஒருவரைக் காட்டுவது இன்றியமையாதது. ஒன்றை அல்லது ஒருவனை எதிர்த்துப் போராடுவது, அந்தப் போராட்டத்தில் பலவாறாகத் துன்புற்று இறுதியில் வெல்வது என்பதுதான் நாயகக் கதைகளின் ஒருவரிச் சுருக்கம்.

    A vacuum for anti heroes in Tamil

    தீயவன் எனப்படும் வில்லனாக, எதிர்நாயகனாக நடிப்பது நாயகனாக நடிப்பதைவிடவும் கடினம். நாயகனைக்கூட மக்கள் எளிதில் ஏற்றுக்கொள்வார்கள். தீயவனாக ஒருவனை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திரைக்கதையின் வழியே பார்வையாளர்களின் மனங்களை உழுது பண்படுத்தினால்தான் ஒருவரை எதிர்நாயகனாக ஏற்றுக்கொள்வார்கள். "அடப்பாவி... நீ அவ்வளவு கெட்டவனா... நீ நல்லாவே இருக்கமாட்டே...," என்று வாய்விட்டுத் தூற்றுமாறு அந்தக் கதையும் பாத்திரமும் அமைய வேண்டும். அப்படிப்பட்ட இடத்தைப் பிடித்த பிறகு இன்னொரு படத்தில் நல்லவனாகவே நடித்தாலும் "இவன் ஏதாச்சும் கெடுதல் பண்ணுவான் பாரேன்...," என்றவாறே பார்த்துக்கொண்டிருப்பார்கள். திரளான பார்வையாளர்களின் உளவியல் கூறுகளான இவற்றைப் பயின்ற பின் திரைப்படம் எடுக்க வருவது நல்லது.

    A vacuum for anti heroes in Tamil

    எம்ஜிஆர் என்னும் நாயக மதிப்புக்கு நம்பியார் என்னும் எதிர்நாயக மதிப்பு தொடர்ந்து பயன்பட்டது. தேர்தல் பரப்புரைக்குச் சென்ற எம்ஜிஆரை அருகழைத்த பாட்டியம்மா அவர் காதுக்குள் சொன்னாராம். "உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்பே... எதுக்கும் அந்த நம்பியார்கிட்ட மட்டும் எப்பவும் சாக்கிரதையா இரு...," என்றாராம். எம்ஜிஆர், சிவாஜி போன்றார்களும் தத்தம் படங்களில் எதிர்மறைப் பண்புகளுடையவர்களாய் நடித்திருக்கிறார்கள். நினைத்ததை முடிப்பவன் என்னும் படத்தில் கொள்ளைக்காரனாகவும், நாளை நமதேயில் ஏவுவதைச் செய்யும் அடியாளாகவும் எம்ஜிஆர் நடித்திருக்கிறார். ஆனால், அவர் இறுதியில் திருந்திவிடுவார். தம் படங்களில் நல்லவனாக மட்டுமே நடிப்பது சிவாஜிக்கு நோக்கமில்லை. எல்லாக் குணப்பாங்குகளையும் வெளிப்படுத்தும் வேடங்களில் தயக்கமின்றித் தொடர்ந்து நடித்தவர் அவர்.

    A vacuum for anti heroes in Tamil

    எம்ஜிஆர், சிவாஜி என்னும் இருமைகளின் காலத்திற்குப் பின்னர் இரஜினிகாந்த், கமல்ஹாசனின் நாயகக்காலம் தொடங்குகிறது. அப்போது அவர்களுக்கும் வலிமையான எதிர்நாயக நடிகர்கள் தேவைப்பட்டார்கள். தொடக்கத்தில் இருவரும் எல்லாவகையான வேடங்களிலும் நடித்தார்கள். பாலசந்தரின் படங்களுக்கு நடிப்பில் திறமையானவர்கள்தாம் தேவைப்பட்டார்கள். அத்தேவையை நன்கு நிறைவேற்றியவர்கள்தாம் அவர்கள். ஆனால், அன்றைக்கு நிலவிய நாயக வெற்றிடம் புதியவர்கள் தழைப்பதற்கு வழிவிட்டது. அவ்வமயம் ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன் போன்றவர்கள் ஒரு சுற்று முடித்திருந்தார்கள். மேம்பட்ட திறமைகளோடு வளரும் புதிய நாயகர்களை மக்கள் தேடிக்கொண்டிருந்தார்கள். நடிப்பும் நடனமும் இளமையழகும் கமல்ஹாசனுக்கு உதவின. புதுத்தோற்றமும் ஒயிலான நடிப்பும் விரைவும் சுறுசுறுப்புமான உடலசைவுகளும் இரஜினிகாந்தைத் தூக்கிவிட்டன. இருவரும் முதன்மை நாயகர்கள் ஆனார்கள்.

    A vacuum for anti heroes in Tamil

    இரஜினிகாந்தும் கமல்ஹாசனும் முன்னிரண்டு இடங்களைக் கைப்பற்றியவுடன் அவர்களுக்கு வலிமையான எதிர்நாயகர்கள் தேவைப்பட்டார்கள். சிற்சில படங்களில் நம்பியார் போன்ற பழைய நடிகர்களே நடித்தார்கள். அதையும் மீறிய காத்திரமான எதிர்நாயக வேடத்திற்கு ஆட்பற்றாக்குறை ஏற்பட்டது. அந்த நாற்காலி ஆளின்றியே கிடந்தது. முரட்டுக்காளை என்னும் திரைப்படத்தின் வழி ஜெய்சங்கரும் எதிர்நாயகனாக மறுபடி நுழைந்திருந்தார். முந்நூறு படங்களில் நாயகனாக நடித்திருந்த ஜெய்சங்கர் பிற்காலத்தில் தீயவராக நடித்ததையும் மக்கள் ஏற்றுக்கொண்டது தனியே ஆராயவேண்டிய வியப்புப்பொருளாகிறது. எதிர்நாயகனுக்குரிய கடுமை, கொடுமை போன்றவை ஜெய்சங்கரிடம் இல்லை என்பதையும் நினைவிற்கொள்ள வேண்டும். அந்தப் போதாமைகளை இட்டு நிரப்ப புதியவர்கள் இருவர் வந்து சேர்ந்தார்கள். சத்யராஜும் இரகுவரனும்.

    A vacuum for anti heroes in Tamil

    தங்கைக்கோர் கீதத்தில் கொடுமைக்காரனாக ஏற்கப்பட்ட சத்யராஜ் தொடர்ந்து தீயவராக நடித்தார். ஒரு கட்டத்தில் 'வில்லன் என்றாலே சத்யராஜ்தான்' என்னும்படி நிலைமை மாறியது. நான் சிவப்பு மனிதன், காக்கிச் சட்டை என்று இரண்டு நாயகப் படங்கள் ஒரே நாளில் வெளியானது. இரண்டிலும் சத்யராஜ்தான் எதிர்நாயகனாக நடித்திருந்தார். கடலோரக் கவிதைகள் வெற்றி பெற்ற பின்னர் சத்யராஜ் நாயகப் படங்களுக்கு முன்னேறிவிட்டார். அவ்வமயம் தோன்றிய வெற்றிடத்தை இட்டு நிரப்பியர் இரகுவரன். இரஜினிகாந்த் படங்களில் இரகுவரனின் எதிர்நாயகப் பாத்திரங்கள் புகழ்பெற்றன. மிஸ்டர் பாரத், ராஜா சின்ன ரோஜா, மனிதன், பாட்சா என்று அப்பட்டியல் நீள்கிறது. இரஜினிகாந்த் படங்களில் இரகுவரன் தோன்றிக்கொண்டிருக்க கமல்ஹாசனுக்கு நாசர் அமைந்தார். குருதிப்புனல், தேவர்மகன் என்று அது வேறு வரிசை. அவர்களோடு நிழல்கள் ரவி, சரண்ராஜ், ஆர்பி விஸ்வம், கிட்டி, சலீம் கௌஸ், வினுச்சக்கரவர்த்தி போன்றவர்களும் பல படங்களில் நடித்தார்கள். மூன்றாவது இடத்தில் விஜயகாந்த் முன்னேறியபடி இருந்தார். அவர்க்கு எதிர்நாயகன் தேவைப்படுகையில் சரத்குமார், மன்சூரலிகான் போன்றவர்கள் வந்தார்கள். ஜெய்சங்கரைப் போலவே அக்னி நட்சத்திரம் என்ற படத்தில் மறுநுழைவு செய்த விஜயகுமாரும் கெட்டவராக நடிக்கத் தவறவில்லை. அந்தப் போக்கு நடிகர் சுமனைத் தீயவனாக நடிக்க வைத்ததுவரை தொடர்ந்தது.

    A vacuum for anti heroes in Tamil

    தொண்ணூறுகளில் பிரகாஷ்ராஜ் என்ற எதிர்நாயகன் கிடைத்தார். கில்லி திரைப்பட வெற்றியினால் சத்யராஜுக்குப் பிறகு பெருவாரியான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடிகர். ஆனால், அவர் மொழிகடந்த நடிகரானார். புதிய தலைமுறை நாயகர்களுக்கு ஆசிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே போன்ற பல நடிகர்கள் எதிர்நாயகர்களாக நடித்தார்கள். பிறமொழியில் ஏற்கப்பட்ட எண்ணற்ற நடிகர்கள் இங்கே தீயவனாக இரண்டொரு படங்களில் நடித்தார்கள். ஓரிரண்டு படங்களுக்குப் பிறகு அவர்களைக் காணவில்லை.

    A vacuum for anti heroes in Tamil

    எதிர்நாயகத் திறமைக்கு இங்கே வெற்றிடம் நிலவுகிறது. சத்யராஜ், இரகுவரன், நாசர், பிரகாஷ்ராஜ் போன்றோர் கைப்பற்றிய அவ்விருக்கை ஆளில்லாமல் இருக்கிறது. நடிப்பில் புதுமையாய் எதையேனும் செய்தால் அவ்விடத்தைக் கைப்பற்றலாம். அந்த இடத்தைப் பிடித்துவிட்டால் போதும், அந்நடிகரின் காட்டில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அடைமழை பெய்யும்.

    English summary
    Poet Magudeswaran says that there is a vacuum for anti hero roles in Tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X