»   »  விவேகம்... ஒரு எழுத்தாளரின் பார்வை இது!

விவேகம்... ஒரு எழுத்தாளரின் பார்வை இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முதல் வரியிலேயே சொல்லி விடுகிறேன்.. நான் எந்த நடிகரின் ரசிகனும் இல்லை. சினிமாவின் ரசிகன் மட்டுமே.

விவேகம் படத்திற்கு நிறைய எதிர்மறை மற்றும் நேர்மறை விமரிசனங்கள் ஊடகங்களில் உலா வருகின்றன...சிலவற்றைப் பார்த்தும் படித்துமகூட எந்த முன்முடிவுகளும் இல்லாமல்தான் படம் பார்த்தேன்.

A writer's view on Vivegam

அஜித் ரசிகர்களுக்கு இந்தப் படம் தலை வாழை இலையில் முழுமையான விருந்துதான். மற்றவர்களுக்கும் ஒரு நீட்டான நல்ல ஆக்‌ஷன் த்ரில்லர்தான்.

ஹாலிவுட் படங்களுக்கு நிகராக தமிழில் ஒரு படம் செய்ய முடியும் என்று கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்திக் கொள்ளலாம் இந்த டீம். பாகுபலி சரித்திர பிரமாண்டம் என்றால் விவேகம் ஆக்‌ஷன் காட்சிகளில் பிரமாண்டம்.

ஒரு மாஸ் எண்ட்டெர்டெய்னருக்கு இருக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் இருக்கின்றன. அத்தனை பேர் சுட்டாலும் ஹீரோ மீது ஒரு குண்டுகூடப் பாயவில்லை என்று கிண்டல் செய்வது இந்த வகைப் படங்களுக்கு பொருந்தாது. ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும்.. எம்.ஜி.ஆர் துவங்கி, ரஜினி, விஜய் என்று அத்தனை மாஸ் ஹீரோ படங்களிலும் இதேக் கேள்வியைக் கேட்கலாம். மாஸ் ஹீரோ என்றால் அவன் ஜெயிப்பான் என்பது இந்த வகைப் படங்களுக்கான எழுதப்படாத இலக்கணம்தானே?

காக்கா முட்டை, ஜோக்கர், விசாரணை போல அவார்டுகளைக் குறி வைத்து வேறு வகைப் படமாக விவேகத்தை எடுத்திருக்கிறோம் என்று அறிவித்தார்களா என்ன? பிறகு இந்தப் படத்தில் ஏன் பட்டியல் போட்டு குறை காண வேண்டும்? ஆஸ்கார் விருதுகள் பெற்ற பல படங்களிலும் குறைகளைப் பட்டியல் போட இயலும்.

இந்தப் படத்திற்காக நியாயமாக ஆர்ட் டைரக்டர் மிலனுக்கு விருதுகள் குவிய வேண்டும். அடுத்து கேமிரா மேன் வெற்றிக்கும். அனிருத் பின்னணி இசையில் வேறு மாதிரி தெரிந்தாலும் பாடல்களில அதிக கவனம் செலுத்தத் தவறிவிட்டார். எடிட்டிங்கை என்னால் ரசிக்க முடியவில்லை. இத்தனைப் பணத்தைக் கொட்டி எடுக்கப்பட்ட ஒவ்வொரு காட்சியும் மனதில் பதியவிடாமல் டப்பு டப்பென்று எகிறிச் செலவது சரியா? இரணடரை மணி நேரத்தை செலவிடத் தயாராகத்தானே ரசிகர்கள் உள்ளே வந்திருக்கிறார்கள்.. இன்னும் கொஞ்சம் நிதானமாக அழகியலுடன் மனதில் அழுத்தமாகப் பதியும் வகையில் செய்திருக்க வேண்டாமா?
கதை எனக்குப் புரிந்தது. ஆனால் திரைக்கதையின் எக்ஸ்பிரஸ் வேகம் காரணமாக சற்றே தெளிவு குறைகிறது. புத்திசாலித்தனமான பல ஐடியாக்களும், மிக நவீன இன்றைய.. ஏன் நாளைய விஞ்ஞான சாத்தியங்களையெல்லாம் உள்ளடக்கிய பல காட்சிகள் இருந்தாலும் அவை உடனுக்குடன் வருவதால் எதையும் அட என்று ரசிக்க முடியாமல் திகட்டிப் போகிறது. இத்தனை வேகம் சில லாஜிக் கேள்விகளை மழுப்பி விடுகிறது.

அஜித் மிரட்டியிருக்கிறார். என்ன ஒரு உழைப்பு. அதிலும் கடைசியில் காட்டும் மேக்கிங் வீடியோ பார்க்கும்போது இன்னும் பிரமிப்பும் அவரின் துடிப்பான அர்ப்பணிப்பின் மீதான மரியாதையும் இன்னும் கூடுகிறது.

படையப்பாவில் தன் எதிரியான ரஜினியை ரசித்துக்கொண்டே நீலாம்பரி வில்லித்தனம் காட்டுவதுபோல இதில் தன் முன்னாள் நண்பனும் இன்னாள் எதிரியுமான ஹீரோவை வில்லன் விவேக் ஓபராய் புகழ்ந்து ரசித்தபடி எதிர்ககிறார். ஆனால் இது கொஞ்சம் ஒவர் டோஸ்.

காஜல் அகர்வாலை அஜித் வயதிற்கேற்றபடி வயதைக் கூட்டிக் காட்டியிருப்பது எல்லாம் சரிதான்.. இத்தனை ஹைடெக் சமாச்சாரங்களுடன் கூடிய படத்தின் டென்ஷனான கிளைமாக்சில் அவர் பறவை முனியம்மா மாதிரி பாடப் பாட ஹீரோ சண்டை போடுவதை ரசிக்க முடியவில்லை.

எந்தப் படத்திலும்போல ப்ளஸ், மைனஸ் இரண்டும் இருந்தாலும் தயாரிப்பின் தரத்திலும், ஸ்டைலிஷ் பிரசன்ட்டேஷன் காரணமாகவும் அத்தனைப் பேரின் மிக அதிக உழைப்புக்காகவும் இயக்குநர் சிவா உள்ளிட்ட ஒட்டு மொத்த டீமிற்கும் என் பாராட்டுக்களும், கைக் குலுக்கல்களும்.

- பட்டுக்கோட்டை பிரபாகர்

English summary
Writer Pattukkottai Prabhakar's review on Ajith's Vivegam

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X