அடிவாங்கிய ஆரியன்.. ரியோ ராஜுக்கு கிடைத்த ராஜ வேட்டை.. ஆண் பாவம் பொல்லாதது 4நாள் வசூல்!
சென்னை: விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ஆரியன் திரைப்படம் ஆரம்பத்தில் மிகப்பெரிய ஓபனிங்கை அள்ளிய நிலையில், அதன் பின்னர் அதன் வசூல் குறையத் தொடங்கியது. படத்தின் கிளைமேக்ஸ் தான் பிரச்னை என பலரும் சொல்லி வந்த நிலையில், கடைசியில் ஒரு 10 நிமிடக் காட்சிகளையும் படக்குழு கத்தரித்து திங்கட்கிழமை முதல் புது வெர்ஷனை வெளியிட்டது.
ஆனாலும், இன்னமும் அந்த படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிய வசூல் வேட்டையை நடத்தவில்லை. அதே நேரம் ரியோ ராஜின் ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் முதல் நாளில் 50 லட்சத்துக்கும் குறைவான வசூலை அள்ளிய நிலையில், சனி மற்றும் ஞாயிறுகளில் அதன் வசூல் அதிகரித்தது படத்திற்கு பெரும் பலமாக மாறியது.

ஜோ பட ஜோடியுடன் ரியோ ராஜ் இணைந்தால் ஹிட் கிடைக்கும் என நினைத்து மாளவிகாவை ஹீரோயினாக புக் செய்த நிலையில், படம் பாக்ஸ் ஆபிஸில் கணிசமான தொகையை வாரி வருகிறது.
ஆரியன் வசூல் நிலவரம்: கடந்த வெள்ளிக்கிழமை வெளியான விஷ்ணு விஷாலின் ஆரியன் திரைப்படம் இதுவரை பாக்ஸ் ஆபீஸில் 4.84 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறது. விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் இந்த வசூல் படத்துக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், படத்தின் ட்ரிம் செய்யப்பட்ட வெர்ஷன் நல்லா இருக்கு என்றும் ரசிகர்கள் புதுமையான முயற்சிக்கு கை கொடுக்க வேண்டும் என்றும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
ஆண் பாவம் பொல்லாதது 4 நாள் வசூல்: ரியோ ராஜ், மாளவிகா மனோஜ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கலையரசன் இயக்கியுள்ளார். முதல் நாளில் வெறும் 48 லட்சம் மட்டுமே வசூல் செய்த ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் 4 நாட்களில் இதுவரை உலகளவில் 5.1 கோடி வசூலை அள்ளியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரியோ ராஜுக்கு கடைசியாக வெளியான ஸ்வீட் ஹார்ட் படம் பெரிதாக கைகொடுக்காத நிலையில், ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வசூல் வேட்டையை நடத்தி வருகிறது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











