Coolie: சூப்பர் ஸ்டாருக்கு வாழ்த்து சொன்ன படையப்பா மாப்பிள்ளை அப்பாஸ்.. கூலிக்கு கூடும் மவுசு!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினியின் 50 ஆண்டு திரை வாழ்க்கை நிறைவு ஆண்டில் கூலி படம் வெளியானதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த படத்தை வரவேற்றார்கள். படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் ராஜ நடை போட்டு வருகிறது. இப்படி இருக்கும்போது, நடிகர் அப்பாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கூலி படத்தின் மொத்த பட குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கூலி படம் வெளியாவதற்கு முன்னரே படத்தை பான் இந்தியா ஹிட் ஆக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். அனிருத் இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தது. குறிப்பாக மோனிகா பாடல் படத்திற்கு உலகம் முழுவதும் விளம்பரம் தேடிக் கொடுத்தது. இப்படி இருக்கும்போது கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தது. குறிப்பாக படத்தின் திரைக்கதையில் பல பிரச்னைகள் இருப்பதாக விமர்சகர்கள் கூறினார்கள்.
ஆனாலும் படத்தின் புக்கிங் தொடங்கிய தினத்திலேயே படத்தின் முதல் நான்கு நாட்களுக்காக பெரும்பான்மையான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதால், படத்தின் மொத்த தயாரிப்புச் செலவும் வசூலாகி விட்டது. மேலும் படத்தை அமேசான் பிரைம் நிறுவனத்திற்கு விற்ற ஓடிடி தொகை, ஆடியோ ரைட்ஸ் என அனைத்தும் படக்குழுவுக்கு போனஸ்தான். படம் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூபாய் 151 கோடிகள் வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

அப்பாஸ் வாழ்த்து: இந்நிலையில் சூப்பர் ஸ்டாருக்கும் கூலி பட குழுவினருக்கும் நடிகர் அப்பாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், " நம்ம சூப்பர் ஸ்டாருக்கும் கூலி பட குழுவினருக்கும் வாழ்த்துகள். படையப்பா படத்தை உங்களுடன் நான் நடிக்க சான்ஸ் கிடைத்தது. நான் எங்கே சென்றாலும் தலைவரின் மாப்பிள்ளை என்றுதான் கூறுகிறார்கள். படையப்பா படத்தில் நான் சொல்லும் டயலாக், ' What a Man' ரசிகர்கள் மத்தியில் நன்றாகவே பிரபலமடைந்து விட்டது. இப்போதும் அந்த டயலாக் மீம்ஸ்களில் அதிகம் வருகிறது. நம்ம சூப்பர் ஸ்டார் என்றைக்கும் நம்ம சூப்பர் ஸ்டார்தான். உங்களின் இயக்குநர் குழுவுக்கும் மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள். உங்களது திரை வாழ்க்கையில் கூலி மிகப்பெரிய படமாக மாற வாழ்த்துகள். வசூலில் அனைத்து சாதனைகளையும் இந்த படம் முறியடிக்கட்டும்" என்று பேசி வாழ்த்து தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
வசூல்: கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நாகர்ஜுனா, ஆமிர் கான், சௌபின் சாஹிர், சத்யராஜ், உபேந்திரா. ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். நடிகை பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படம் தற்போது உலகம் முழுவதும் ஓடிக் கொண்டு உள்ளது. முதல் நான்கு நாட்களில் சுமார் 400 முதல் 425 கோடிகள் வரை படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் அப்பாஸ் சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நடிக்க ஜி.வி. பிரகாஷ் குமார் படத்தில் கமிட் ஆகியுள்ளார்.


Click it and Unblock the Notifications











