ரோபோ சங்கரின் மனைவி ஆடியது குத்தமா?.. இப்படி பண்ணாதீங்க.. தேம்பி தேம்பி அழுத மெட்டி ஒலி நடிகர்
சென்னை: ரோபோ சங்கர் கடந்த வாரம் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு அவரின் குடும்பத்தை மட்டுமின்றி தமிழ்நாட்டில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவருக்கு 46 வயதுதான் ஆகிறது. சங்கருடைய இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடி வழியனுப்பிவைத்தார். இதனை பலரும் விமர்சித்த சூழலில்; மெட்டி ஒலியில் நடித்து ஃபேமஸ் ஆன போஸ் வெங்கட் அழுதபடி பேசியிருக்கிறார்.
ரோபோ சங்கர் சின்னத்திரையில் தனது கலை பயணத்தை ஆரம்பித்தவர். பிறகு தனுஷ் நடித்த மாரி திரைப்படத்தில் நடித்து குணசித்திர நடிகர் மற்றும் காமெடி ஆக்டராக மாறினார். முதல் படத்திலேயே அவருக்கு பெயர் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. அதனடிப்படையில் அடுத்தடுத்து வாய்ப்புகளும் அவருக்கு குவிய ஆரம்பித்தன. வாயை மூடி பேசவும், விஸ்வாசம், மிஸ்டர் லோக்கல், வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் என பல படங்களில் அசாத்தியமாக நடித்தார்.
மரணம் பார்த்த சங்கர்: அவர் தனது கரியரில் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்தது. அந்தப் பழக்கம் நாளடைவில் ரொம்பவே தீவிரமாக மாறியதை தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனடியாக மருத்துவர்கள், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் சங்கரை அந்த நோயிலிருந்து மீட்டு கொண்டுவந்தார்கள். சொல்லப்போனால் மறுபிறப்புதான் அவர் எடுத்து வந்திருந்தார்.

மாறிய ரோபோ சங்கர்: அவ்வாறு எடுத்த மறுபிறப்பில் அனைத்து தீய பழக்கங்களிலிருந்தும் வெளியே வந்திருந்தார். அதுமட்டுமின்றி மதுவுக்கு எதிராக தொடர்ந்து பேசிவந்த அவர்; தன்னுடைய வாழ்க்கையிலிருந்தே உதாரணங்களை முன்வைத்தார். எப்படியோ பிழைத்துவிட்டதால் அவரும், அவரது குடும்பத்தினரும் உற்சாகமாக இருந்தார்கள். வெள்ளித்திரை, சின்னத்திரையில் சங்கரும் பிஸியாக ஆரம்பித்துவிட்டார்.
உயிரிழந்த ரோபோ: சூழல் இப்படி இருக்க ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென ரத்த வாந்தி வந்து மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பதறிப்போன படக்குழு அவரை சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தது. ஆனால் அங்கு மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை. இதன் காரணமாக 46 வயதில் தனது உயிரை விட்டார் ரோபோ சங்கர்.
எழுந்த விமர்சனம்: சங்கரின் உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. கமல், உதயநிதி ஸ்டாலின், தனுஷ், சிவகார்த்திகேயன் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அவருக்கான இறுதி ஊர்வலம் தொடங்கியபோது சங்கரின் மனைவி பிரியங்கா சாலையில் நடனமாடினார். சோகத்தோடு ஆடிய நடனத்தை ஒருதரப்பினர் வழக்கம்போல் விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். இந்நிலையில் சங்கரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான போஸ் வெங்கட் ரோபோ சங்கர் நினைவேந்தல் நிகழ்ச்சியில் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
போஸ் வெங்கட் பேச்சு: அவர் அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், "சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது பிரியங்கா நடனமாடியதை ஒருதரப்பினர் விமர்சித்தார்கள். சங்கர், பிரியங்கா வாழ்க்கையில் நடனம் என்பது பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. நான் பெரும்பாலும் ஆடமாட்டேன். ஆனால் சங்கர் எனது அருகில் வந்து நின்றுகொண்டு எப்படியாவது ஆட வைத்துவிடுவார். அந்த நடனம் என்பது ஒரு மொழி. அதை வைத்து நாங்கள் பேசிக்கொள்வோம். எனவே பிரியங்கா நடனம் ஆடியதை யாரும் தவறாக விமர்சனம் செய்யாதீர்கள்" என அழுதபடி பேசினார்.


Click it and Unblock the Notifications











