“நிஜ வாழ்க்கையிலும் அன்புடன் வழிநடத்தும் குருசாமி”: ஜெயராமுடன் சபரிமலை சென்ற ஜெயம் ரவி
பம்பா: பொன்னியின் செல்வன் படத்தில் அருண்மொழி வர்மன் பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
பொன்னியின் செல்வனில் மலையாள நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் என்ற முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
நடிகர் ஜெயராமை தனது குருசாமி என குறிப்பிட்டு ஜெயம் ரவி டிவிட்டரில் பகிர்ந்துள்ள போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

கேரளா சென்ற பொன்னியின் செல்வன் டீம்
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம், வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்களை சந்திக்கும் வகையில், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் டூர் அடித்து வருகின்றனர். அதன்படி, இரு தினங்களுக்கு முன்னர் கொச்சி சென்ற பொன்னியின் செல்வன் படக்குழு, அங்கு ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சபரிமலை சென்ற ஜெயம் ரவி, ஜெயராம்
பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கொச்சி சென்றிருந்த ஜெயம் ரவி, அங்கிருந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் நடிகர் ஜெயராமும் சென்றிருந்தார். இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகர் ஜெயம் ரவி தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். ஜெயம் ரவி, ஜெயராம் இருவரும் சபரிமலையில் ஒன்றாக சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை, அவர்களது ரசிகர்களும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

நிஜவாழ்விலும் ஜெயராம் தான் குருசாமி
சபரிமலையில் சாமி தரிசனம் செய்த போட்டோக்களை வெயிட்டுள்ள ஜெயம் ரவி, அதற்கு அருமையான கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். அதில், "பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப் போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் !!" எனக் குறிப்பிட்டுள்ளார். ஜெயம் ரவியின் இந்தப் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜெயராம் தான் எனது குருசாமி என, ஜெயம் ரவி ஏற்கனவே பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொன்னி நதி பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில்
பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து முதல் பாடலான 'பொன்னி நதி', கடந்த மாதம் சென்னையில் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் மூவரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் ஜெயராம் பற்றி பேசியிருந்த ஜெயம் ரவி, "ஜெயராம் சாருடன் எனக்கு பல வருடங்களாக நெருங்கிய நட்பு உள்ளது. அது நட்பு என்பதை கடந்து அவர் தான் எனக்கு குருசாமியாக இருந்துள்ளார். ரியல் லைஃபில் ஜெயராம் சார் எனக்கு நிறையவே வழிகாட்டியுள்ளார். அவருடன் பொன்னியின் செல்வனில் ஒன்றாக நடித்தது எனக்கு மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











