என் கையை பிடிச்சி பி & சி மக்கள்கிட்ட கூட்டிட்டு போங்கண்ணே என ராஜ் கிரணிடம் சொன்ன நடிகர்
சென்னை: நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ராஜ்கிரண்.
தற்சமயம் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள பட்டத்து அரசன் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்தப் படம் தொடர்பான பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறி வருகிறார் ராஜ்கிரண்.

முரளி விஜயகாந்த்
பட்டத்து அரசன் திரைப்படம் கபடி விளையாட்டை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தாலும் அதர்வா கதாபாத்திரத்திற்கு சரியாக கபடி விளையாடத் தெரியாதாம். இது ஒரு புறம் இருக்க, வீரத்தாலாட்டு என்ற படத்தில் நடிகர் முரளிக்கு அப்பாவாக நடித்திருந்த ராஜ்கிரண் பட்டத்து அரசன் படத்தில் அதர்வாவிற்கு தாத்தாவாக நடித்திருக்கிறார். சினிமா துறையில் நடிகர்கள் முரளி மற்றும் விஜயகாந்த் என்னை உண்மையான அண்ணனை அழைப்பது போல உரிமையோடு அழைப்பார்கள் என்றும் தானும் அவர்களை சொந்த தம்பி போல் பாவிப்பேன் என்றும் கூறியுள்ளார் ராஜ்கிரண்.

மருமகன் தனுஷ்
நடிகர் தனுஷ் தன்னுடைய மருமகன் என்று குறிப்பிடுகிறார். காரணம், கஸ்தூரி ராஜாவின் முதல் படத்தை ராஜ்கிரண்தான் தயாரித்திருந்தார். அதனால் சிறு வயதிலிருந்தே தனுஷ் தன்னை பார்ப்பதால் மாமா என்றுதான் அழைப்பாராம். பவர் பாண்டி திரைப்படத்தில் தன்னை மிகுந்த கவனத்துடனும் மரியாதையுடனும் நடத்தியதாக பெருமையுடன் ராஜ்கிரண் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் ஏற்கனவே வேங்கை படத்தில் ஒன்றாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முனி ராஜ்கிரண்
தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய நடிகர் என்ற பெருமையை உடைய ராஜ்கிரண் எவ்வளவு பணம் கொடுத்தாலும் தனக்கு பிடிக்காத கதையிலோ, படத்திலோ, கதாபாத்திரத்திலோ நடிக்க மாட்டார். ரஜினியின் சிவாஜி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் தட்டிக் கழித்தார். அதனால் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எப்போதுமே கவனிக்கப்படும். அப்படி அவரது கதாபாத்திரம் பேசப்பட்ட படங்களில் முக்கியமான ஒன்று ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி திரைப்படம்.

லாரன்ஸின் வெற்றி
லாரன்ஸ் முதன் முதலில் தமிழில் இயக்கிய திரைப்படம் முனி. அந்தப் படத்தின் வெற்றியின் காரணமாகத்தான் தொடர்ச்சியாக காஞ்சனா ஒன்று இரண்டு மூன்று என்று படங்களை எடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி பேசும் மாநிலங்களிலும் தனக்கான சந்தையை உருவாக்கினார். முனி திரைப்படத்தில் ராஜ்கிரணை ஒப்பந்தம் செய்தபோது, அவருக்கு பி & சி மக்களிடம் நிறைய ஆதரவு இருப்பதினால், என் கையைப் பிடித்துக் கொண்டு அந்த மக்களிடம் கொண்டு சேர்த்து விடுங்கள் என்று ராஜ்கிரணிடம் கேட்டுக் கொண்டாராம் லாரன்ஸ். அன்று லாரன்ஸ் கணித்தது போலவே இன்று மிகப் பெரிய வரவேற்பு அவருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











