அச்சச்சோ.. நடிகர் பிரகாஷ் ராஜுக்கு என்ன ஆச்சு? அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் கீழே விழுந்த நிலையில், அவரது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
செல்லமே என கில்லியில் சொல்லி பலரது உள்ளங்களில் செல்லமாக வாழ்ந்து வருபவர் நடிகர் பிரகாஷ் ராஜ்.
கடைசியாக நவரசாவின் எதிரி படத்தில் பிரகாஷ் ராஜின் வித்தியாசமான நடிப்பை பார்த்து வியந்த ரசிகர்கள் அடுத்ததாக கேஜிஎஃப், பொன்னியின் செல்வன், தனுஷின் திருச்சிற்றம்பலம் என ஏகப்பட்ட படங்களில் அவரது நடிப்பை காண காத்திருக்கின்றனர்.

கீழே விழுந்து
ஹீரோ, வில்லன், குணசித்திர கதாபாத்திரம் என பல்வேறு இந்திய மொழிகளில் நடித்துள்ள திறமையான நடிகர் பிரகாஷ் ராஜ் திடீரென தடுக்கி விழுந்து காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

அறுவை சிகிச்சை
காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனக்கு சின்ன அறுவை சிகிச்சை செய்யப்படப் போவதாகவும் அதற்காக ஹைதராபாத் செல்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் பிரகாஷ் ராஜ் அனுமதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.

அதிர்ஷ்டவசமாக
பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் ஏகப்பட்ட படங்களில் நடித்து வரும் நிலையில், திடீரென அவருக்கு இப்படியொரு விபத்து ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கெட்டதிலும் ஒரு நல்லதாக அதிர்ஷ்டவசமாக லேசான காயம் தான் என்றும் சீக்கிரமே திரும்பி விடுவேன் என்றும் பிரகாஷ் ராஜ் உறுதியளித்துள்ளது பலருக்கும் ஆறுதல் கொடுத்திருக்கிறது.

பாதுகாப்பான கரங்கள்
லேசா விழுந்துட்டேன், சின்ன எலும்பு முறிவு, ஹைதராபாத்திற்கு பறக்கிறேன். அங்கே என் நல்ல மருத்துவ நண்பர் குருராவா ரெட்டியின் பாதுகாப்பான கரங்களில் சிகிச்சை பெற்று சீக்கிரமே திரும்பி வருவேன் என நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டுள்ள ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் சீக்கிரம் குணமடைந்து வரவேண்டும் சார் என கமெண்ட் செய்து பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

நவரசாவின் எதிரி
நெட்பிளிக்ஸில் சமீபத்தில் வெளியான நவரசாவின் எதிரி குறும்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி மற்றும் ரேவதி உடன் இணைந்து நடித்திருந்தார் பிரகாஷ் ராஜ். இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வித்தியாசமாக உருவான எதிரி படத்தில் விஜய்சேதுபதி இவரைத் தான் அடித்துக் கொல்கிறார். அதன் பிறகு பிரகாஷ் ராஜின் ஆவி (மனசாட்சி) கேட்கும் கேள்விகளால் ரேவதியிடம் விஜய்சேதுபதி மன்னிப்பு கேட்கும் விதமாக அந்த கதை அமைந்திருந்தது.

பொன்னியின் செல்வன் படத்தில்
மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் அடுத்ததாக அவர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் சுந்தர சோழ மன்னராக நடித்து வருகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அந்த கதாபாத்திரத்தில் தான் அவர் நடிக்கிறாரா? என்பது குறித்து படக்குழு இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேஜிஎஃப் 2
கன்னட திரையுலகின் பிரம்மாண்ட படமான கேஜிஎஃப் 2ம் பாகத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக அந்த படத்தின் வெளியீட்டு தேதி ஏகப்பட்ட மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜுக்கு இப்படியொரு பாதிப்பு ஏற்பட்டு இருப்பது அந்த படக்குழுவையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

திருச்சிற்றம்பலம்
திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் சூப்பரான ரோலில் நடிகர் தனுஷ் உடன் நடித்திருந்த பிரகாஷ் ராஜ் இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திருச்சிற்றம்பலம் படத்திலும் இணைந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக அந்த படத்தின் படப்பிடிப்பில் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்ட நிலையில், திடீரென ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக பிரகாஷ் ராஜ் இன்னும் சில வாரங்கள் கழித்தே அந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபலங்கள் பிரார்த்தனை
தமிழ், தெலுங்கு, மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு திடீரென ஏற்பட்ட முறிவு குறித்தும் அதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்வது குறித்தும் அறிந்த நிலையில், சீக்கிரமே பூரண குணமடைந்து பழைய நிலைக்கு திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











