இதுக்காய்யா இந்த அக்கப்போரு.. தேவர் பட விழாவில் பிரச்னை.. உள்ளே புகுந்து பிரபல நடிகர் கொடுத்த ட்விஸ்ட்
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து தேசிய தலைவர் என்ற படம் உருவாகியிருக்கிறது. இப்படத்தை ஊமை விழிகள் படத்தின் இயக்குநர் அரவிந்தன் இயக்கியிருக்கிறார். சத்யா என்பவர் தயாரிக்க இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இதில் பலர் கலந்துகொண்டார்கள். அது சச்சரவிலும் முடிந்தது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தமிழ்நாட்டு வரலாற்றில் முக்கியமானவர். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் அவரை தெய்வத்துக்கு நிகராக மதித்து கொண்டாடுகிறார்கள். அவரது பிறந்தநாள், இறந்தநாளை முன்னிட்டு பசும்பொன்னுக்கு படையெடுத்து அவரது சமாதிக்கு சென்று குறிப்பிட்ட சமுதாயத்தினர் மரியாதை செலுத்திவிட்டுவருவது வழக்கம். அப்போது சில அசம்பாவிதங்களும் நடப்பது வழக்கம். அதேபோல் அவரை குறுகிய வட்டத்துக்குள் அடைக்கக்கூடாது என்றும் ஒருதரப்பினர் சொல்வார்கள்.
தேசிய தலைவர் திரைப்படம்: இப்படிப்பட்ட சூழலில் அவரது வாழ்க்கை வரலாறை அடிப்படையாக வைத்து தேசிய தலைவர் என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. இதனை சத்யா என்பவர் தயாரித்திருக்கிறார். விஜயகாந்த்தை வைத்து ஊமை விழிகள் படத்தை இயக்கி பிரபலமடைந்த அரவிந்த்ராஜ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். பஷீர் என்பவர் முத்துராமலிங்க தேவராக நடித்திருக்கிறார்.

நீண்ட நாட்கள் படப்பிடிப்பு: இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்திருப்பதால் இப்படத்துக்கு ஓரளவு வெளிச்சமும் கிடைத்திருக்கிறது. இதற்கிடையே படத்தின் ஷூட்டிங் தொடங்கி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. இருப்பினும் சில காரணங்களால் படத்தின் ஷூட்டிங் தடைபட்டு தடைபட்டு நடந்தது. இப்போது ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் விழா இன்று சென்னையில் நடந்தது.
நவமணியின் பேச்சு: இவ்விழாவில் படக்குழுவினர் மற்றும் பாடலாசிரியர் சினேகன், நடிகர் ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்கள். அப்போது விழாவில் கலந்துகொண்ட நவமணி என்பவர் பேசுகையில், "இந்தப் படத்தின் சென்சார் சான்றிதழை பார்த்து எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. பத்திரிகைகளில் வந்த செய்திகள் மற்றும் எங்கள் கற்பனைதான் இந்தக் கதை என்று சொல்லியிருக்கிறார்கள். அது தவறு. ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தேவர் ஒரு வரலாறு. அப்போ இது என்ன உங்கள் கற்பனை கதையா?" என்று கேள்வி எழுப்பினார்.
சுரேஷ் கொடுத்த விளக்கம்: அப்போது கோபமடைந்த இயக்குநர் அரவிந்த்ராஜ் மேடையிலிருந்து கீழே இறங்கினார். பிறகு அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மேடையில் ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து மைக்கை பிடித்த ஆர்.கே.சுரேஷ், "நான் சென்சார் போர்டில் உறுப்பினராக இருக்கிறேன். கற்பனை என்று போட்டால் மட்டும்தான் சென்சாரில் சான்றிதழ் கொடுப்பார்கள். அதுதான் விதிமுறை. எனவே நீங்கள் யாரும் தவறாக நினைக்க வேண்டாம்" என்று விளக்கமளித்தார். இதனைப் பார்த்த ரசிகர்களோ, சென்சார் போர்டு விதிமுறையே என்னவென்று தெரியாமல்தான் இந்த அக்கப்போரா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











