»   »  லஞ்ச வழக்கில் நடிகர் சரவணனின் தந்தை சிறையில் அடைப்பு

லஞ்ச வழக்கில் நடிகர் சரவணனின் தந்தை சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil
Saravanan
சேலம்: லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நடிகர் சரவணனின் தந்தை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

பருத்தி வீரன், நந்தா உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் சரவணன். இவருடைய தந்தை வீரமுத்து (70). சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்று விட்டார்.

கடந்த 1991ம் ஆண்டு சேலம், மெச்சேரி அருகேயுள்ள மனோரஞ்சிதம், சேசையா ஆகியோருக்கிடையே ஏற்பட்ட நிலத்தகராறில் இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த விவகாரம் குறித்து மனோரஞ்சிதம் மெச்சேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அப்போது மெச்சேரி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருந்த வீரமுத்து இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மனோரஞ்சிதத்திடம் ரூ.1,000 லஞ்சமாக கேட்டுள்ளார். மனோரஞ்சிதம் இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார்.

இதனையடுத்து லஞ்சம் வாங்கும்போது வீரமுத்துவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி சேலம் நீதிமன்றம் வீரமுத்துவுக்கு 1 வருடம் சிறை தண்டனை விதித்தது.

தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வீரமுத்து மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.

இதனையடுத்து வீரமுத்து கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்தார். இதனால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் திடீரென்று நேற்று முன்தினம் சேலம் தலைமை நீதித்துறை நடுவர் இளையராணி முன்னிலையில் சரணடைந்த அவர், பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil