Sathyaraj: கரூர் உயிரிழப்பு.. தப்பு என்பது தெரிந்து செய்வது.. ச்ச.. நடிகர் சத்யராஜ் ஆதங்கம்!
சென்னை: கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்துள்ளது. பேரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் நடிகர் சத்யராஜ் இதனை வன்மையாக கண்டித்துள்ளார்.
கரூர் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேற்றிரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காலை 10.30 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய காவல் துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால், நாமக்கல்லில் பிரச்சாரம் செய்துவிட்டு பிற்பகல் 3 மணிக்குப் பிறகுதான் விஜய் அங்கிருந்து கிளம்பினார். இதனால்,கரூர் வேலுசாமிபுரத்தில் பகல் 12 மணி முதலே தொண்டர்கள், ரசிகர்கள் திரள ஆரம்பித்தனர். கரூர் மாவட்ட எல்லையான வேலாயுதம்பாளையத்தில் இருந்தே கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரச்சாரப் பேருந்து மிகவும் மெதுவாக நகர்ந்தது. இதனால் இரவு 7.15 மணிக்கு மேல் தான் பிரச்சார இடத்துக்கு விஜய் வந்து சேர்ந்தார்.

40 பேர் பலி: அவர், விஜய் பேச ஆரம்பிக்கும் போது, பின்னால் இருப்பவர்கள் முந்தியடித்துக்கொண்டு பிரச்சாரப் பேருந்தை நோக்கி வந்துள்ளனர். இதனால் முன்னால் காத்திருந்தவர்கள் நெரிசலில் சிக்சி மயக்கம் அடைந்தனர். விஜய் பேசிக் கொண்டிருந்தபோதே மூச்சுத் திணறி பலர் அடுத்தடுத்து மயங்கி விழத் தொடங்கினர். அதுமட்டுமில்லாமல் மரக்கிளை உடைந்து விழுந்ததிலும் சிலர் காயமடைந்தனர். பிரச்சாரத்தில் விஜய் பேசிக்கொண்டு இருந்த போதே, சிலர் மயக்கமடைந்த போது, விஜய் அவர்களுக்கு தண்ணீர் பட்டிலை கொடுத்தார். ஆனால், பிரச்சாரத்தை முடித்து கிளம்பிய பின்னரே அவர்களை மீட்க முடிந்தது. இதில், 17 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 40 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதங்கப்பட்ட சத்யராஜ்: ஒட்டுமொத்த தமிழகமே இன்று பெரும் சோகத்தில் இருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜ், இதனை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கரூரில் உயிரிழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தவறு என்பது தவறி செய்வது... தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்கணும், தப்பு செய்தவன் வருந்தி ஆகணும். சிந்தித்துப் பார்த்து செய்கையை மாத்து தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ .. தெரிந்து தெரியாமல் நடந்து இருந்தா, அது திரும்பவும் நடக்காமல் பார்த்துக்கோ என சொல்லிவிட்டு.....கடைசியாக ... ச்சா என ஆவேசமாக சொல்லி இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











