தொழிலதிபரிடம் கைவரிசை...நில மோசடி வழக்கில் நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் கைது
கோவை : மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சுரேஷ் கோபி. திரைப்பிரபலம் என்பதை தாண்டி ராஜ்யசபா எம்.பி.,யாகவும் உள்ளார். எம்.பி., ஆன பிறகும் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சுரேஷ் கோபி.
மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து பிரபலமாக இருந்து வருகிறார் சுரேஷ் கோபி. படங்களில் பின்னணி பாடுவது, டிவி சீரில்களில் நடிப்பது ஆகியவற்றையும் செய்து வருகிறார் சுரேஷ் கோபி.

சுரேஷ் கோபி சகோதரர் கைது
ஆனால் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து 97 லட்சத்தை மோசடி செய்ததாக கோழிக்கோடு போலீசார், சுரேஷ் கோபியின் சகோதரரை கைது செய்துள்ளனர். அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐ ஆர் படி, சுனில் கோபி என சொல்லப்படும் சனல் கோபி, கோவையை சேர்ந்த தொழிலதிபரான கிரிதரனை தான் ஏமாற்றி மோசடி செய்துள்ளார்.

நிலத்தை விற்க முயற்சி
36 வயதாகும் கிரிதரன் சாமில் வைத்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். 2021 ம் ஆண்டு வெங்கடாச்சலம் என்பவர் மூலம் கிரிதரனை அணுகிய சுனில், தன்னிடம் உள்ள 4.52 ஏக்கர் நிலத்தை விற்க முயன்றுள்ளார். கிரிதரனும் அந்த நிலத்தை வாங்க சம்மதித்து, சுனிலின் பேங்க் அக்கவுண்டிற்கு 97 லட்சத்தை அனுப்பி உள்ளார். இந்த நிலத்திற்கு 2021 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதி பத்திர பதிவும் நடந்துள்ளது.

சுத்தலில் விட்ட சுனில் கோபி
பத்திர பதிவு முடிந்த பிறகு அந்த நிலத்தின் பேரில் வில்லங்க சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார் கிரிதரன். அப்போது தான் அவர் வாங்கிய நிலத்தின் மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இது பற்றி சுனிலை தொடர்பு கொண்டு கிரிதரன் கேட்டதற்கு, உண்மையை ஒப்புக் கொண்ட சுனில், ஒரு மாதத்தில் பணத்தை திருப்பி தந்து விடுவதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி வரை பணம் தராததால், சுனிலை மிரட்டி உள்ளார் கிரிதரன்.

நீதிமன்ற காவலில் சுரேஷ் கோபி சகோதரர்
தொடர்ந்து பல முறை கேட்டும் பணம் தராததால் சுனில், அவருக்கு உதவியாக இருந்த அவரின் உறவினர்கள் ரீனா, அவரது கணவர் சிவதாஸ் ஆகியோர் மீது போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் சுனிலை கோழிக்கோட்டில் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி உள்ளனர். அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் தலைமறைவாகி உள்ளதால் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











