நாய் குழந்தைய கடிக்கிற வரைக்கும் பெத்தவங்க எங்க போனீங்க? நடிகை அம்மு கேட்கறாங்கப்பா!
சென்னை: உச்சநீதிமன்றம் தெரு நாய்களை காப்பகங்கள் அமைத்து அங்கு பராமரிக்க வேண்டும், நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும், தலைநகர் டெல்லியில் ஒரு தெரு நாய் கூட இருக்க கூடாது என்று தாமாக முன் வந்து உத்தரவு பிறப்பித்த போது ஏற்படுத்திய விவாதத்தை விட, இந்த விவகாரம் தொடர்பாக நீயா நானா நிகழ்ச்சியில் விவாதித்த போது ஏற்படுத்திய தாக்கம் அதிகம் என்று கூறலாம். தற்போது பரவலாக இந்த விவகாரம் தொடர்பாக இணையவாசிகள் தொடங்கி பலரும் விவாதித்து வருகிறார்கள்.
நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரு நாய்களுக்கு ஆதரவாக பேசிய சின்னத்திரை நடிகை அம்முவுக்கு இணையவாசிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காரணம் அவர் பேசியது லாஜிக் இல்லாமல் இருந்தது மட்டும் இல்லாமல் தெருநாய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை யார் மீதும் கருணை இல்லாமல் இருக்கிறது என்று விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் நடிகை அம்மு ரெட் நூல் நங்கை யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இது தொடர்பாக பேசியது, தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த பேட்டியில், " தெரு நாய்கள் உண்மையில் நான்கு கால்கள் இருக்க கூடிய குழந்தைகள். அவர்கள் தெருவில் இருக்கனும் என்பது அவர்களின் தலைவிதி அல்ல. ஆனால் அவர்கள் தெருவில் இருக்கும் படியான சூழல் ஏற்பட்டுவிட்டது.
அடையாளம்: 100 நாய்களில் 5 நாய்களுக்கு ஆக்ரோஷமும் வெறித்தனமும் இருக்கலாம். அப்படியான நாய்களை அந்தந்த பகுதி மக்கள் எளிதில் அடையாளம் காணமுடியும். அப்படி இருக்கையில் அந்த நாய்களை அப்படி அடையாளம் கண்டு அதற்கு உரிய நடவடிக்கைகள் எடுத்தால் சரியாகிவிடும். எல்லா தெரு நாய்களையும் கூண்டில் அடைத்தால் பலமான நாய்கள் பலவீனமான நாய்களை தாக்கிவிடும். வயதான நாய்களை தாக்கிவிடும். நோய்வாய்பட்ட நாய்களை தாக்கிவிடும்.

குழந்தையை: குழந்தையை நாய்கள் கடிக்கும் போது பெற்றவர்கள் எங்கே போனார்கள்? அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் எங்கே போனார்கள்? குழந்தை கத்தும் சத்தம் கேட்டிருக்கும் தானே? அப்படி இருக்கும் போது நாயை மட்டும் குறை சொல்வது எப்படி சரியானதாக இருக்கும்? தூக்கு தண்டனை கைதிகளுக்கு கூட கடைசி ஆசை என்ன என்று கேட்கிறார்கள் ஆனால் நாய்களுக்கு அது கூட கேட்கப்படுவதில்லை. மனிதாபிமானமற்ற மனிதர்களுக்கு தண்டனை கொடுப்பதற்கு பதிலாக மொத்த மனித இனத்திற்கும் தண்டனை கொடுத்தால் எப்படி இருக்கும்? அது போல தான் ஆக்ரோஷமான நாய்களை பராமாரிக்காமல், அனைத்து நாய்களையும் கூண்டில் அடைப்பது சரியானதல்ல என்று கூறினார். இவரது இந்த பேட்டி தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதற்கு இணையவாசிகள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











