சீமாத்தம்மன் கோவிலில் கன்றுக்குட்டி பலியிடயிருந்ததா?.. நடிகை வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு!
சென்னை: ஆடி மற்றும் ஆவணி மாதங்களில் ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் வெகு விமர்சையாக கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், திருவல்லிக்கேணியில் சீமாத்தம்மன் கோயிலில் நடைபெற்று வரும் திருவிழாவில், எருமை கன்றுக்குட்டி பலியிட அழைத்து சென்றதாக சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சின்னத்திரை நடிகை சந்தியா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள வீடியோவில், சென்னை திருவல்லிக்கேணி ராம் நகர் பகுதியில் உள்ள சீமாத்தம்மன் கோவிலில், ஞாயிற்றுக்கிழதை ஒரு கன்று குட்டியை பலியிட உள்ளார்கள். நீங்கள் இந்த போட்டோவில் பார்த்துக்கொண்டு இருக்கும் கன்று குட்டியைத் தான் பலியிட இருக்கிறார்கள். தயவு செய்து இதை செய்யாதீர்கள், இத்தனை வருடமாக உங்கள் கோவிலில் எந்தவிதமான ஆடு, மாடோ பலியிடப்படவில்லை என்கிறார்கள். இத்தனை வருஷமாக நடக்காத போது இப்போது மட்டும் ஏன் அதை செய்ய முன்வருகிறீர்கள். இத்தனை ஆண்டுகளாக கடவுள் உங்களை வாழ வைத்துக்கொண்டு தானே இருக்கிறார். அந்த உயிருக்காக நான் கெஞ்சி கேட்கிறேன் தயவு செய்து அதை செய்யாதீர்கள். அந்த கன்று குட்டிக்கு எந்த காசு வேணுமோ, அதை நாங்க கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். திருவல்லிக்கேணியில் உள்ள அந்த கோவிலில் யாராவது இருந்தீங்க என்றால், தயவு செய்து இதை தடுத்து நிறுத்துங்கள் என பதிவிட்டு இருந்தார்.

150 வருட பழமையான கோவில்: இந்த வீடியோவை பார்த்த விலங்கு சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறை உதவியுடன் கோயில் நிர்வாகிகளிடம் எருமை கன்றுக்குட்டி பலியிடப்படுகிறதா என்று விசாரித்தார். அப்பொழுது கோயில் நிர்வாகம் சார்பில் எந்த ஆடு மாடுகளும் கோயிலில் பலியிடுவது கிடையாது என்று கூறிவிட்டனர். இருந்தாலும் சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ் அளித்த புகாரின் படி திருவல்லிக்கேணி போலீசார் கோயில் நிர்வாகத்திடம் மாடு, ஆடுகள் பலியிடப்படுகிறதா என விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் ஆடு, மாடு எதுவும் பலியிடப்படவில்லை என தெரியவந்தது. 150 ஆண்டுகள் பழமையான சீமாத்தம்மன் கோயில் பக்தர்கள் வேண்டுதல் நிவர்த்திக்காக ஆடு, கோழிகளை நேர்த்தி கடனாக விடுவது வழக்கம். அதன்படி, பக்தர் ஒருவர் வழிபாட்டுக்காக எருமை கன்றுக்குட்டி ஒன்று காணிக்கையாக கோயில் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது
மீட்ட போலீசார்: இதைத்தொடர்ந்து அம்மனுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட எருமை கன்று குட்டியை மீட்ட போலீசார், அதை ஜஸ் அவுஸ் காவல்நிலையத்தில் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய சீமாத்தம்மன் கோயில் நிர்வாகி புருஷோத்தமன். 60 ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்கள் விலங்குகள் பலியிட்டு இருக்கலாம். ஆனால் எங்கள் தலைமுறைக்கு பிறகு அப்படி பலியிடுவது கிடையாது. இது முற்றிலும் தவறான தகவல். சமூக வலைதளங்களில் பரவும் இதுபோன்ற தவறான வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றார். ஆனால், சமூக ஆர்வலர் சாய் விக்னேஷ், கோயில் நிர்வாகிகள் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் வேண்டுதலுக்கு கொடுக்கும் மாடுகள் பலியிடுவது வழக்கம். அதன்படி பலியிட எருமை கன்றுக்குட்டி வைத்திருந்தோம். ஆனால், இணையத்தில் இந்த செய்தி பரப்பியதால் அதை நிறுத்தி விட்டோம் என்று கோயில் நிர்வாகிகள் கூறியதாக செய்தியாளர்களிடம் கூறினார்.


Click it and Unblock the Notifications











