twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா நடித்த ‘அடிமைப்பெண்’... புதிய வடிவில் ஜூலை 7-ம் தேதி ரிலீஸ்!

    By Shankar
    |

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி எம்ஜிஆரின் சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் ரிலீசாகி வருகின்றன.

    சமீபத்தில்தான் நினைத்ததை முடிப்பவன் வெளியானது. அடுத்து எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அடிமைப்பெண்' திரைப்படத்தை புதுப்பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் 'தி ரிஷிஸ் மூவீஸ்' நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன்.கே. ஜூலை 7ம் தேதி வெளியிடுகிறார்.

    1969 ம் ஆண்டு வெளிவந்த படம் 'அடிமைப்பெண்'. நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவும், எம்.ஜி.ஆரும் கடைசியாக நடித்த படம் இது.

    இரட்டை வேடங்கள்

    இரட்டை வேடங்கள்

    இந்த படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கின்றனர். இவர்களுடன் அசோகன், ஆர்.எஸ்.மனோகர், சோ, பண்டரிபாய், ராஜஸ்ரீ, ஜோதிலட்சுமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கே.வி. மகாதேவன் இசையமைத்திருக்கிறார். வி.ராம்மூர்த்தி ஒளிப்பதிவு. கே.சங்கர் இயக்கி உள்ளார்.

    பிரமாண்டம்

    பிரமாண்டம்

    எம்.ஜி.ஆர் பிக்சர்ஸூம், இயக்குநர் கே.சங்கரும் அப்போதிருந்த தொழில்நுட்பத்தைக் கொண்டே, பிரம்மாண்டமான முறையில் படத்தை உருவாக்கிய விதம் வியப்புக்குரிய விஷயமாகும்.

    ஐரோப்பிய பாணியில்

    ஐரோப்பிய பாணியில்

    எம்.ஜி.ஆர், அடிமைப் பெண் படத்திற்கு முன், பல படங்களில் ராஜா வேடம் ஏற்று நடித்திருந்தாலும், இந்த படத்தில் தான் முதன்முறையாக ஐரோப்பிய பாணியில் உடை அணிந்து நடித்திருக்கிறார். அவரது கட்டுமஸ்தான புஜங்களும், பரந்த மார்புகளும், உருண்டு திரண்ட தொடைகளும் தெரியும்படியான அவரது அந்த தோற்றம், 52 வயதிலும், அவர் அனைவரும் ரசிக்கும் அழகனாக இருந்தார் என்பதைக்காட்டுகிறது.

    சிங்கத்துடன் சண்டை

    சிங்கத்துடன் சண்டை

    ஜெய்ப்பூர் அரண்மனையில் படப்பிடிப்பு, பாலைவனத்தில் ஒட்டகச் சண்டை, க்ளைமாக்ஸில் சிங்கத்துடன், எம்.ஜி.ஆர் நேருக்கு நேர் மோதும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி என பல கமர்ஷியல் அம்சங்களைக் கொண்ட படம் அடிமைப்பெண்.

    சிங்கத்துடனான சண்டைக்காட்சிக்காக, எம்.ஜி.ஆர் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டார். பாம்பே சர்க்கஸிடம் இருந்து, சிங்கத்தை விலைக்கு வாங்கி, தன்னுடைய சத்யா ஸ்டுடியோவில் பிரத்யேக பயிற்சியாளர் உதவியுடன் ஆறு மாதங்கள் பயிற்சியில் ஈடுபட்டார்.

    ஜெ பாடிய முதல் பாட்டு

    ஜெ பாடிய முதல் பாட்டு

    பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், இந்த படத்தில் இடம்பெற்றிருந்த ‘ஆயிரம் நிலவே வா' என்ற பாடல் மூலம் தான் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானார். திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் ஜெயலலிதாவை ‘அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை பாடவைத்தார். ஜெயலலிதா பாடிய முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    வெள்ளி விழா

    வெள்ளி விழா

    இந்த படத்தில் டி.எம்.எஸ் பாடிய ‘தாய் இல்லாமல் நானில்லை' என்ற பாடல் எம்.ஜி.ஆருக்கு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.

    இப்படி சுவாரஸ்யமான அம்சங்களுடனும், திருப்புமுனைகள் நிறைந்த திரைக்கதையுடனும் உருவான இந்த படம் பிரம்மாண்டமான வெற்றிப் படமாக அமைந்து, வெள்ளி விழா கொண்டாடியது.

    வசூலில் பெரும் சாதனை

    வசூலில் பெரும் சாதனை

    வசூலிலும், அந்த காலத்திலேயே இரண்டு கோடியே முப்பது லட்சம் வசூலித்ததாக சொல்லப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் இதன் மதிப்பு 350 கோடியை தாண்டியிருக்கும் என்பது வியப்புக்குரிய விஷயம்.

    48 ஆண்டுகளுக்குப் பிறகு

    48 ஆண்டுகளுக்குப் பிறகு

    இப்படி பல சிறப்பம்சங்களுக்கும் உரிய ‘அடிமைப்பெண்' திரைப்படத்தை 48 வருடங்களுக்குப் பிறகு வாங்கி அதிநவீன டிஜிட்டலில் மாற்றி வெளியிடுவதில் மகிழ்ச்சி என்கிறார் சாய் நாகராஜன்.கே.

    இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட, அடிமைப்பெண் திரைப்படம், எம்.ஜி.ஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது இன்றைய சினிமா ரசிகர்களையும், சினிமாத்துறையினரையும் தியேட்டருக்கு வரவைக்கும் என்பது நிச்சயம்.

    English summary
    MGR - Jayalalithaa starrer Adimai Pen movie will be released again after 48 years on coming July 7th.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X