மாவீரன் படப்பிடிப்பில் பிஸியான அதிதி ஷங்கர்: சீக்கிரமே சிவகார்த்தியனையும் செட்ல பார்க்கலாம்
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மடோன் அஷ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் மாவீரன் படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.

இறுதிக்கட்டத்தில் பிரின்ஸ்
டாக்டர், டான் என அடுத்தடுத்து இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதே உற்சாகத்தில் தற்போது அனுதீப் இயக்கும் பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாடல், இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி ஹிட் அடித்தது. கமர்சியலாக உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரனாக சிவகார்த்திகேயன்
பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். மண்டேலா படம் மூலம் கவனம் ஈர்த்ததுடன் இரண்டு தேசிய விருதுகளையும் வென்ற மடோன் அஷ்வின், மாவீரனை இயக்குகிறார். பிரின்ஸ் படத்தைப் போல மாவீரனும் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது. தமிழில் மாவீரன் என்றும் தெலுங்கில் மகாவீருடு என்ற டைட்டிலிலும் வெளியாகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர், வில்லனாக மிஷ்கின், காமெடிக்கு யோகி பாபு ஆகியோர் கமிட் ஆகியுள்ளனர்.

படப்பிடிப்பில் இணைந்த அதிதி
மாவீரன் படத்தின் பூஜை கடந்த மாதம் 4ம் தேதி கோலகலமாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், இந்தப் படத்திற்காக சென்னையில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருப்பதால், முதலில் அதிதி ஷங்கரின் போர்ஷனை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். அதன்படி, தற்போது தொடங்கிய மாவீரன் படப்பிடிப்பில் அதிதி ஷங்கர் கலந்துகொண்டுள்ளார்.

விரைவில் சிவகார்த்திகேயன்
அதிதி ஷங்கரை தொடர்ந்து யோகி பாபு, மிஷ்கின் ஆகியோரும் மாவீரன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளனர். அதேபோல் விரைவில் பிரின்ஸ் படத்தில் தனது பணிகளை முழுமையாக முடித்துவிட்டு, மாவீரனில் இணைய உள்ளாராம் சிவகார்த்திகேயன். இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், அதிதி ஷங்கரின் போர்ஷன்கள் வேகமாக படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











