"எதற்கும் துணிந்தவன்" படத்திற்கும் மிரட்டல்... நடிகர் சூர்யா வீட்டிற்கு தொடரும் போலீஸ் பாதுகாப்பு
சென்னை : ஜெய்பீம் படத்தை தொடர்ந்து சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை ரிலீஸ் செய்ய எதிர்ப்பு கிளம்பி உள்ளதால், நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Recommended Video
கடந்த ஆண்டு சூர்யா நடத்த ஜெய்பீம் படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டது. சூர்யா வழக்கறிஞராக நடித்த இந்த படம் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றாலும், படத்தில் ஒரு காட்சியில் வரும் காலெண்டரில் இடம்பெற்ற படம் சர்ச்சையை துவக்கியது. இதனையடுத்து அந்த காட்சி நீக்கப்பட்டு படம் வெளியிடப்பட்டது.

ஜெய்பீம் படத்திற்கு எதிர்ப்பு
அதைத் தொடர்ந்து "ஜெய்பீம்" திரைப்படத்தில் வன்னியர்களை அவதூறாக சித்தரித்து இருப்பதாக எழுந்த சர்ச்சையில் பாமக சார்பில் நடிகர் சூர்யாவிற்கு கொலை மிரட்டல்கள் வந்தன. ஜெய்பீம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், நடிகர் சூர்யா பொத மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு சுழற்சி முறையில் 5 காவலர்கள் துப்பாக்கியோடு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

எதற்கும் துணிந்தவனையும் விடல
இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரித்து சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள "எதற்கும் துணிந்தவன்" திரைப்படமானது நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. "ஜெய்பீம்" படத்தில் வன்னியர்களை கொச்சைப்படுத்திய நடிகர் சூர்யா மன்னிப்பு கோராத வரை கடலூர் மாவட்டத்தில் "எதற்கும் துணிந்தவன்" படம் வெளியிட அனுமதிக்க கூடாது என கடலூர் மாவட்ட பாமக மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

சூர்யா வீட்டிற்கு பாதுகாப்பு
இதனையடுத்து நடிகர் சூர்யாவின் தி.நகர் ஆற்காடு தெருவில் உள்ள வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு எஸ்.ஐ., 5 போலீஸார் பாதுகாப்பு ஏற்கெனவே உள்ளது. அதுவே தற்போதும் தொடர்கிறது. கூடுதல் பாதுகாப்பு குறித்து முதலில் ஆலோசித்தார்கள். ஆனால் பிறகு அது தேவை இல்லை என முடிவெடுத்துள்ளதாக காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கடலூரில் ரிலீஸ் ஆகுமா
பாமக சார்பில் கடலூர் மாவட்ட தியேட்டர் உரிமையாளர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டதால், அங்கு எதற்கும் துணிந்தவன் ரிலீசாகுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் கடலூர் மாவட்டத்தில் எதற்கும் துணிந்தவன் படம் ரிலீசாகும் படங்களின் பட்டியல் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. திண்டிவனத்திலும் எதற்கும் துணிந்தவன் படம் எதிர்ப்பை மீறி திரையிடப்பட உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











